சென்னை, மார்ச் 14 சென்னை மாநகராட்சி சார்பில் 17 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரங்களை மேயர் ஆர்.பிரியா தொடங்கிவைத்தார்.
தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரம்
சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர் மண்டலம், 106-ஆவது வார்டு, எம்எம்டிஏ காலனி பிரதான சாலை, அஞ்சல் நிலையம் அருகில் `மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின் கீழ் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று (13.3.2025) நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று திறந்துவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியும், சுற்றுச்சுழல் துறையும் இணைந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டி பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. மீண்டும் மஞ்சப்பை என்ற தானியங்கி விற்பனை இயந்திரமும் வைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 25 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதை பொதுமக்களும், வியாபாரிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். 2-ஆம் கட்டமாக 17 இடங்களில் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ரூ.1.10 கோடி அபராதம்
கடந்த மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி, கடந்த 6 மாதங்களில் 50 ஆயிரம் மஞ்சப்பைகள் சென்னையில் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் விற்பனையாளர்களுக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.