நீட்டி முழங்கும் நிதி அமைச்சர் மாண்பமை
நிர்மலா சீத்தாராமன் அவர்களே!
மின்சாரம்
பெரியார் படத்தை ஏன் வீட்டுக்கு வீடு வைக்கிறார்கள்? அரசு அலுவலகங்களில் மாட்டி வைக்கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் ஆவேசமாகப் பேசும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களே!
இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும் என்று ஒரே ஒரு கணம் சிந்தித்ததுண்டா?
நீங்கள் ஒரு பெண்மணிதானே! பெண்கள் தானே மாநாடு கூட்டி “பெரியார்” என்று பட்டம் சூட்டினார்கள் (13.11.1938)
இந்த உண்மையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் போற்றும் ஹிந்து ராஷ்டிரா பார்வையில் பெண்களுக்கான இடம் என்ன?
இந்தியாவுக்கு அரசியல் சட்டமாக மனுதர்மம் தான் அமைய வேண்டும் என்று நீங்கள் போற்றும் ஆர்.எஸ்.எஸ். குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் கூறியுள்ளது உங்களுக்குத் தெரியுமா? (Bunch of Thoughts, அத்தியாயம், பக். 113)
அந்த மனுதர்மம் என்னென்னவற்றை எல்லாம் கூறுகிறது?
அதிலும் குறிப்பாகப் பெண்களைப் பற்றி – இதைவிட இழிவுபடுத்த முடியாது என்கிற அளவுக்குக் கூறி இருக்கிறதே – அவை பற்றி அறிவீர்களா?
இதோ சில எடுத்துக்காட்டுகள்.
மனுதர்மம் – அத்தியாயம் 5
சுலோகம் 147: பாலியமாகவிருந்தாலும், யௌவனமாகஇருந்தாலும், வார்த்திபமாகவி ருந்தாலும் ஸ்திரிகள் தன்றன் வீடுகளிலும் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது.
சுலோகம் 148:பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டிய தேயல்லது ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக்கூடாது.
சுலோகம் 154: கணவன் துர்ராச்சாரமுள்ள வனாக விருந்தாலும், அந்நிய ஸ்திரி லோலனாயிருந்தாலும், நற்குணமில்லாதவனாயிருந் தாலும் பதிவிரதையானஸ்திரியானவள் அவனை தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.
சுலோகம் 162: ஸ்திரிக்குத் தன் கணவனைவிட மற்றொருவனால் உண்டாக்கப்பட்ட பிள்ளை யும் சாஸ்திரத்தினாலொப்புக் கொள்ளப்பட்ட பிள்ளையன்று. உண்டு பண்ணுகிறவனுக்கும் உபயோகமில்லை. பதிவிரதா ஸ்திரிகளுக்கு இரண்டாவது விவாகமும் ஒரு சாஸ்த்திரத்திலுஞ் சொல்லப்பட வில்லை.
சுலோகம் 163: தாழ்ந்தவனான தன் புருஷனை நீக்கி உயர்ந்தவனான மற்றொரு வனை எந்த ஸ்திரியடைகிறாளோ அவள் நிந்திக்கப்படுவாள். மற்றொருவனோடு சேர்ந்த வளென்றுஞ் சொல்லப்படுகிறாள். ஒருவராலும் கொண்டாடப்பட மாட்டாள்.
சுலோகம் 164: ஸ்திரி விபச்சாரஞ் செய்கிற தினால் உலகத்தில் நிந்திக்கப்படுகிறதுமல்லாமல் இறந்த பின் குள்ளநரியாகவும் பிறந்து வெண் குட்டம் முதலிய கர்ம வியாதியையும் அனுபவிக்கிறாள்.
மனுதர்மம் – அத்தியாயம் 9
சுலோகம் 14: மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.
சுலோகம் 15: மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பின்மையும், இயற்கையாக வுடைய வராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப் பினும் அவர்களை விரோதிக் கின்றார்கள்.
சுலோகம் 17: படுக்கை, ஆசன அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
சுலோகம் 18 :மாதர்களுக்கு ஜாதகர்ம முதலி யவை மந்திரத்தோடு கிடையாது. மனச்சுத்தியுங் கிடையாது. பாவத்தைப் போக்குகிற மந்திரோப தேசமுமில்லை. ஆகையால் அபரிசுத் தாளாயிருக்கிறார்கள்.
சுலோகம் 19:மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங்களிலுஞ் சொல்லப்பட்டி ருக்கின்றன. அதற்கு திருஷ் டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிரயாச் சித்தத்தைத் கேளுங்கள்.
சுலோகம் 30:கணவன் சொற்படி நட வாதவள் உலகத் தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.
சுலோகம் 46 : கணவன் மனையாளைத் தள்ளி விட்டாலும், விற்றாலும் அந்த மனையாள் தன்மை அவளை விட்டு நீங்காது. இப்படி இவர்களுக்கு பிரமன் சிருஷ்டி காலத்திலேயே ஏற்படுத்தியிருக்கிற சாசுவதமான தருமத்தை நாமறிந்திருக்கிறோம். ஆதலாலிவ்விதமான பிறன் மனையாளிடத்தில் பிறந்த பிள்ளையும் உபயோகப்படமாட்டான்.
சுலோகம் 52 :ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனாயிருந்தால் மற்றுமொருவனை யடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகிறேன். அப்பயிர் நம்மிரு வருக்கும் பொதுவாயிருக் கட்டு மென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறார்ப் போல் ஒருவன் மனையாளி டத்தில் மனையாளில்லாதமற்றொருவன் பிள் ளையையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லாவிட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத்திய கூலமாகவேயிருக்கிறது. ஏனெனில் பிஜத்தை விட நிலமுயர்ந்ததல்லவா?
சுலோகம் 53: நில விஷயத்தைப் போல் மாதர் விஷயத்திலும், கணவனும் மற்றொரு வனும், பயிரைக் குறித்தாற்போல் புத்திரவுற் பத்தியைக் குறிக்கும் ஏற்பாடு செய்துகொண்டால் அதில் விளைகிற தானியம்போல் பிறந்த பிள்ளையும் இருவருக்கும் சொந்தமாகவி ருப்பதை உலகத்திற் கண்டிருக்கிறோம்.
சுலோகம் 59:பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக விருந்தால் அப்போதந்த ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழுதலை முறைக் குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல் லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்.
சுலோகம் 60:விதவையிடத்தில் பெரி யோர் களின் அனுமதிப் பெற்றுக் கொண்டு புணரப் போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக் கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டுபண்ண வேண்டியது. இரண்டாம் பிள் ளையை ஒரு போதும் உண்டு பண்ணக்கூடாது.
சுலோகம் 69:ஒரு பெண்ணை ஒருவ னுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத் தானம் செய்த பின் அந்த ஒருவன் இறந்து போனால் அவன் தம்பி அல்லது அண்ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.
சுலோகம் 70:அவனந்தப் பெண்ணை விதிப் படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ் திரமுடைய வளாயும், திரிகரண சுத்தியுடைய வளாயுமிருக்கச் செய்து, ருதுஸ்நான மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருதுகாலம் வரையிற் பார்த்து கருப்ப முண்டாகாவிடில் கருப்பமுண் டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நானமான வுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது.
சுலோகம் 77: கணவனை மனைவி பகைத்தால் அவன் ஒரு வருஷம் வரையிலும் பார்த்து அவள் வணங்காவிடில் அவளுக்குத் தான் கொடுத்த ஆடையாபரணம் முதலிய வற்றை வாங்கிக் கொண்டுஅவளோடு பேசு தலும், புணர்தலும் ஒழிக்க ஜீவனத்துக்காகக் கொடுத்தது கவரத் தக்கதன்று.
சுலோகம் 78:கணவன் சூதாடுகிறவனயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும், நோயாளி யாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யா விட்டால் அவளுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.
சுலோகம் 81:மலடியான மனைவியை எட்டு வருஷத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறு பவளை பத்து வருஷத்திற்கு மேலும், பெண் ணையே பெறுபவளை பதினொரு வருஷத் திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழு தேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.
சுலோகம் 88: குலம், நல்லொழுக்கம் இவை களாலுயர்ந்தவனாயும், பெண்ணுக்குத் தக்க ரூபமுள்ளவனாயும், தன் ஜாதிக்குத் தக்க ஜாதியுள்ள வனாயுமிருக்கிறவானுக்கு தனது பெண் எட்டு வயதுக்குட்பட்டிருந்தாலும், விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்.
சுலோகம் 94: முப்பது வயதுள்ள வரன் அழகான பன்னிரெண்டு வயதுள்ள பெண் ணையும்,இருபத்தி நாலு வயதுள்ள வரன் எட்டு வயது பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளலாம். இதற்கு முன் விவாகம் செய்து கொள்ள அவசரப்பட்டால் வேதமோதல் முதலிய தர்ம காரியம் கெடும். அதனால் பின்பு துக்கப்படுவான்.
மேற்கண்ட சான்றுகள் 1919இல் வெளியிடப்பட்ட திருவைந்திபுரம், கோமாண்டூர், இளைய வில்லி இராமாநுஜாச்சாரியரால் மொழிபெயர்க்கப்பட்ட ‘அசல் மனுதரும சாஸ்திரம்’ நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.
இப்படி எல்லாம் பெண்களை இழிவுபடுத்திய மனுதர்ம சாஸ்திர நூலைக் கொளுத்தச் சொன்னது மட்டுமல்ல – 1927ஆம் ஆண்டே கொளுத்தச் செய்தவர் தந்தை பெரியார். (அண்ணல் அம்பேத்கரும் மனுதர்மத்தைக் கொளுத்தினார் என்பதை அறிவீர்களா?)
பெண்களை இழிவுபடுத்தும் இந்தக் குப்பைகளை எதிர்த்ததாலும், மக்கள் தங்கள் வீடுகளில், அலுவலகங்களில் தந்தை பெரியர் படத்தை அலங்கரித்து வைக்கிறர்கள்.
நிதி அமைச்சர் மாண்பமை நிர்மலா சீத்தாராமன் அவர்களே.
ஹிந்துத்துவாவின் மனுதர்மத்தில் கூறியுள்ளதைக் கடைப்பிடித்தால் நீங்கள் படித்திருக்கவும் முடியாது பட்டம் பெற்றிருக்கவும் முடியாது – நிதி அமைச்சராகவும் வந்திருக்க முடியாது!
எதையும் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது! பெரிய பதவி… ஆனால் வெங்காயம் தின்னாத பரம்பரை என்று நாடாளுமன்றத்தில் சொன்னவர் தானே நீங்கள் – சிந்தியுங்கள்.
வருணதர்மப்படி பெண்களும் அவர்ணஸ்தர்கள் தாம் – பார்ப்பனப் பெண்களும் அடிமைகள் தான். பிறப்பின் அடிப்படையில் பெண்களை இழிவுபடுத்தும் அத்தனையையும் தவிடுப் பொடியாக்கினார் தந்தை பெரியார்.
அதனால்தான் அவர் படம் அங்கு இங்கு எனாதபடி – அவர் சிலைகளை நாடெங்கும் வைத்துக் கொண்டாடுகிறார்கள் – தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்! நிதி அமைச்சரே – நீங்களும் ஒரு பெண்தானே!