* இந்தியாவில் 2 ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு!
*45 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு!
* 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள்!
*அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர் பெயர்களில் சிறப்பான திட்டங்கள்
* 40 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்! Sகல்வி வளர்ச்சிக்கு அடுக்கடுக்கான அறிவிப்புகள்
சென்னை, மார்ச் 14 கல்வி, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு வழிகோலும் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதிய மைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் இன்று (14.3.2025) சமர்ப்பித்தார்.
அதன் விவரம் வருமாறு:
‘‘நீரின்றி அமையாது உலகு’’ தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை
நீர்வளத்தைத் தக்கவைக்கும் பல்லுயிர் பூங்காக்கள் என்னும் புதுமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “இந்தியாவின் 2 ஆவது பெரிய பொரு ளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், ‘பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வருகிறது. மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு நடைபோடுகிறது. சமநிலை தவறாமல் தமிழ்நாட்டை வழிநடத்துவோம்” என்றார்.
“INEQUALITY IS A CHOICE, BUT WE CAN CHOOSE A DIFFERENT PATH” – அதாவது “சமநிலையின்மை என்பது ஒரு வாய்ப்பு. ஆனால் நாம் வேறு பாதையை தேர்வு செய்வோம்.” என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டி யின் மேற்கோளை நிதியமைச்சர் பயன்படுத்தினார்.
நகராட்சி நிருவாகத்துறையின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 4,132 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக, வரும் நிதியாண்டில் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்துக்கு ஒரு மேம்பாலம் 310 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அதேபோன்று ரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு (Bio CNG) நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மய்யம் (Automatic Material Recovery Facility) மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி 3,450 கோடி ரூபாய் திட்டக் காலத்துக்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
திடக்கழிவிலிருந்து மின்சாரம்
திறன்மிக்க திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சார உற்பத்தி செய்யும்பொருட்டு, சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு அருகிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குப் பயன்படும் வகையில், திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை (Waste to Energy Plant) தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் நிறுவப்படும். இத்திட்டத்தின் கீழ் 1,500 டன் மறுசுழற்சி செய்ய இயலாத திடக்கழிவின் செயலாக்கம் மூலம் தினந்தோறும் 15 முதல் 18 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும்.
நகர்ப்புரங்களில் வசிக்கும் மக்களுக்குத் தூய்மையான மற்றும் பசுமையான வாழிடச் சூழலை உருவாக்கும் பொருட்டு, அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. முப்பது மாத காலத்துக்குள் பணி நிறைவடையக் கூடிய இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சைதாப்பேட்டை முதல் திரு.வி.க.பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.
பருவநிலை மாற்றத்திலிருந்து மீட்கும் தன்மையுடைய ஏழு மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) சென்னை பெருநகரப் பகுதியில் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் அய்ந்து நீர்சுத்திகரிப்பு நிலை யங்கள் மற்றும் மூன்று கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஒவ்வொரு குடிநீர் நிலையத்தில் இருந்தும் குடிநீர் விநியோகம் நகரின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பிரதானக் குழாய்கள் மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், தேவைப்படும்போது ஒரு பகுதியின் உபரி நீரை, பற்றாக்குறை உள்ள மற்றொரு பகுதிக்கு மாற்ற இயல வில்லை. எனவே, முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம் எனும் புதிய திட்டத்தின் மூலம் அனைத்து நீர்ப்பகிர்மான நிலையங்களையும் இணைத்து, சென்னை மாநகரில் உள்ள அனைத்து குடிநீர் விநியோக நிலையங்களுக்கும் சமமான அளவில் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். சமச்சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்திடும் இத்திட்டம் 2,423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த 3 ஆண்டு காலத்திற்குள் நிறைவேற்றப்படும்.
தமிழ்நாடு பட்ஜெட் 2025-2026
முக்கிய அம்சங்கள்
பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மகளிர் நலன் – ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் உருவாக்கப்படும்.
* சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் உருவாக்கப்படும்.
* 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இவற்றின் மூலம் ரூ.37,000 கோடி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
* மகளிர் விடியல் பயண திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறுவர்.
* சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.
* சென்னை வேளச்சேரியில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும். இதன் மூலம் 7 இலட்சம் பேர் பயன் பெறுவர்,
*ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் செயல்படுத்தப்படும்.
*முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ. நீளம் சாலை அமைக்கப்படும், இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கலைஞர் கனவு இல்லத் திட்டம்!
* ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழைமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்.
* ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்.
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
* சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் என்ற வகையில் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டித்தரப்படும்.
* ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
மேலும் 45 மொழிகளில் திருக்குறள்
* அய்.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள், மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்.
* சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.
* தமிழ்நாடு முழுவதும் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
* ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் அய்ம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும்.
* ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் மாவட்டம் நாவாப் பகுதிகளில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்.
‘தமிழ்நாடு செமி – கண்டக்டர் திட்டம் 2030’ எனும் ஐந்தாண்டு கால திட்டம் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.
செமி- கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மய்யம் சென்னையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
கோவை சூலூரில் 100 ஏக்கர் பரப்பளவிலும், பல்லடம் அருகே 100 ஏக்கர் பரப்பளவிலும், செமி-கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திர தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்.
ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.400 கோடி மதிப்பில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
விருதுநகரில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஓசூர் அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்படும்.
கடலூர் மற்றும் மதுரை மேலூரில் தலா 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் இரண்டு காலணி தொழிற்பூங்காக்கள் ரூ.250 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
திருச்சியில் 5000 பேருக்கு
வேலை வாய்ப்புக்கான தொழிற்பூங்கா!
கள்ளக்குறிச்சியில் காலணி திறன் பயிற்சி மய்யம் ஒன்றை சிப்காட் நிறுவனம் நிறுவிடும்.
மத்திய மண்டலத்தில் 5000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் வார்ப்பக தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
கடலூரில் 500 ஏக்கர் பரப்பளவிலும், புதுக்கோட்டையில் 200 ஏக்கர் பரப்பளவிலும் புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும்.
கோவையில் உயர் தொழில்நுட்ப பம்ப் மோட்டார் உற்பத்திக்கான உயர்திறன் மய்யம், வார்ப்பக தொழிலுக்கான உயர்திறன் மய்யம் ஒன்றும் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிககளில் படிக்கும் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி அவரவர் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும்.
40 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்!
அரசு துறைகளில் உள்ள 40,000 காலிப்பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 78,882 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.