நாவலர் இரா. நெடுஞ்செழியன்
இன்றைய நிலை 1948
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மறுபடியும் இந்தி மொழி சென்னை மாகாணத்தில் பாடத் திட்டமாக வலியுறுத்தப் படுகிறது. அன்றிருந்ததைப்போல மந்திரி பீடத்தில் காங்கிரஸ் கட்சியினர் வீற்றிருக்கின்றனர். ஆனால் சற்று அதிக பலத்துடன். நாம் பலம் என்று கூறுவது அதற்குள்ள செல்வாக்கையல்ல, பாதுகாப்பை, அன்று காங்கிரஸ் கட்சி மாகாண அரசியலைக் கைப்பற்றி மந்திரி சபைகள் அமைத்ததும், அவர்களது அதிகாரத்தின் அளவு மாகாண எல்லைக்குள் அடங்குவ தாயிருந்தது. மாகாணங்களை மிஞ்சும் அளவுக்கு அதிகாரம் படைத்த மத்திய ஆட்சி, வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்தது. இன்றோ பாகிஸ்தான் நீங்கலாக உள்ள இந்தியாவின் மாகாண ஆட்சிகளும், மத்திய அரசாங்க ஆட்சியும் காங்கிரஸ் தலைவர்கள் கையிலிருக்கின்றன. எனவே எதையும் செய்வதற்கு மத்திய அரசாங்கத்தின் தூண்டுதலும், ஆதரவும் மாகாண மந்திரி சபைகளுக்கு ஏற்பட்டிருக்கின்றன. எந்த எதிர்ப்பையும் சமாளிப்பதற்கு படை பலமும், பண பலமும் பத்திரிகை பலமும், பிரச்சார பலமும், தடியடியும், துப்பாக்கிப் பிரயோகமும், தோட்டா மருந்தும், கண்ணீர்ப் புகையும், எல்லாவற்றையும்விட இவ்வளவு கொடுமைகளையும் பொது மக்களின் மீது பாய்ச்சுவதற்கான ஆணவமும், அரசியல் விவேகமற்ற தன்மையும் காங்கிரஸ் மந்திரி சபையிடம் ஏராளமாக இருக்கின்றன.
1938இல் ஆச்சாரியார் மந்திரி சபை கொலு வீற்றிருந்த காலத்தில் ஆரம்பித்துப் பின் விடுபட்டுப் போன இந்திக் கல்வி, மீண்டும், 1948இல் ஓமாந்தூரார் மந்திரி சபையால் தொடர்ந்து அமலுக்குக் கொண்டுவரப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மந்திரி சபையின் அரசியல் பலம் வளர்ந்த நிலையில், இந்தி வருகிறது.
கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் குலைக்கும் முயற்சியாகவும் இருக்கிறது
ஆனால் 1938இல் விடப்பட்ட நிலையில் இன்று தமிழ் நாடு இல்லை. அன்றிருந்ததைவிட தமிழன், திராவிடன் என்ற உணர்ச்சியும், தாய் மொழிப் பற்றும் தமிழர்களிடையே வளர்ந்திருக்கின்றன. அத்துடன் வடநாட்டு எதிர்ப்புணர்ச்சியும் பரவியிருக்கிறது. இந்தியின் வரவு சாதாரண மொழிப் பிரச்சினையாக மட்டுமல்லாமல், தமிழர்களிடையே வழங்கிவரும் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் குலைக்கும் முயற்சியாகவும் இருக்கிறது என இந்தி எதிர்ப்பு இயக்கத்தினர் கருதுகின்றனர்.
‘இந்தி ஒழிக’ ‘தமிழ் வாழ்க’
எதிர்ப்பு முன்னிலையில் அன்று தலைமை தாங்கிய பெரியார் ஈ.வெ.ராமசாமி, அறிஞர் சி.என்.அண்ணாதுரை இவர்களுடன் இன்றைய எதிர்ப்பு முன்னணி நின்றுவிடவில்லை. அன்று ஒதுங்கி நின்ற தமிழறிஞர் திரு.வி.க. அவர்கள் எதிர்ப்பியக்கத்தில் இன்று இரண்டறக் கலந்து விட்டார். எதிர்ப்பு அரசியல் எதிர்க் கட்சிகளிடமிருந்து மட்டும் வரவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் கேட்கப்படுகின்றன. தோழர்கள் ம.பொ.சிவஞானம், நாரண துரைக்கண்ணன் போன்ற பலரும் இந்தியின் நுழைவை எதிர்க்கின்றனர். தமிழறிஞர்களான மறைமலையடிகள், ச.சோ.பாரதியார், கா.அப்பாத்துரையார் போன்ற பலரும் இந்தியை எதிர்க்கின்றனர். சென்னையில் ஆசிரியர் மறைமலையடிகளார் தலைமையில் கூடிய மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பல்வேறு கட்சியினரும் ஒன்று கூடி ஒருமித்த எதிர்ப்புக் கண்டனத்தைப் பேச்சின் மூலமாகவும், தீர்மானத்தின் மூலமாகவும் காட்டினர். மாநாட்டில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ‘இந்தி ஒழிக’ ‘தமிழ் வாழ்க’ என்ற ஒலிகளை இடி முழக்கமென முழங்கினர்.
மாணவர்கள் மாகாண மாநாட்டைக் கூட்டி இந்தியைப் படிப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், அதன் நுழைவு பல வகைகளிலும் கேடு பயப்பதாகும் என்றும், இந்தி எந்த உருவிலும் பள்ளிகளில் பாடமாக்கப்படக் கூடாது என்றும் அரசியலார்க்குத் தெளிவாக அறிவித்துவிட்டார்கள். தமிழ்ப் புலவர் மாநாட்டிலும் இந்தியின் வருகை கண்டிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினரை அதிகமாகக் கொண்ட் தமிழரசுக் கழகத்தினர் கஷ்டப்பாடமாகவோ, இஷ்டப் பாடமாகவோ இந்தி வரக்கூடாதெனப் போராட்டம் துவக்கப் போவதாக அறிவித்து விட்டனர். இறுதியாக திராவிடக் கழகச் செயற்குழு திட்டத்தின்படி பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் தளபதி அண்ணாதுரையை ஆணை யாளராகக் கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் துவக்கப்பட்டது. போராட்டப் புயல் ஊர்தோறும், பள்ளிதோறும் வீசத்தொடங்கிற்று. மறியல் களங்கள் ஆங்காங்கு காணப்பட்டன. அதன் காரணமாக இன்றுவரை அய்ந்நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டுள்ளனர்.
முன் இருந்ததைவிட, எதிர்ப்பின் அளவும், ஆற்றலும் வளர்ந்துள்ளன. எதிர்ப்பை அடக்குவதற்கு மந்திரி சபையின் அதிகார பலமும் இப்பொழுது அதிகரித்துள்ளது.
இந்தி எதிர்ப்பு இயக்கம்
இந்தி எதிர்ப்பு இயக்கம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால் ஆட்சியாளரிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது. தயக்கம் மந்திரி சபைக்கு மயக்கம் தரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. மந்திரி சபையில் தயக்கம் – இது முன்னைய போராட்டத்தின்போது காணப்படாத புதிய நிலைமை. கட்டாய இந்தியைக் கொண்டுவந்த ஆச்சாரியார் மந்திரி சபைக்கு இல்லாதிருந்த ஒன்று, ஓமாந்தூரார் மந்திரி சபைக்கு இருக்கிறது. தான் கொண்டுவர நினைத்த கட்டாய இந்தியை முழு மனதுடன் அமலுக்குக் கொண்டு வந்தார் ஆச்சாரியார். அவருக்குக் கலக்கம் ஏற்பட்டது எதிர்ப்பு முற்றிய நிலைமையில்தான். ஆனால் ஓமாந்தூரார் மந்திரி சபைக்கு ஆரம்பத்திலிருந்தே தயக்கம்.
சென்னை மாகாணத்தில், இந்தி மொழிப் பயிற்சியைப் பள்ளிகளில் நுழைக்கும் கட்டளையை வெளியிட்டபொழுது, அமைச்சர் அவினாசிலிங்கனார், தமிழ் நிலப்பகுதிக்கு மட்டும் ஏன் விலக்கு அளித்தார்?
மற்ற திராவிட மொழிவாரிப் பகுதிகளுக்குக் கொண்டுவந்த இந்தித் திட்டத்தைத் தமிழ்நிலப் பகுதிக்குக் கட்டாயப்படுத்தக் கல்வி மந்திரி ஏன் தயங்கினார்?
மந்திரி சபையினர், சிறப்பாக பிரதமர் ஓமாந்தூராரும், மந்திரி பக்தவத்சலமும் முக்கியமான இந்த முடிவில் காணப்பட்ட தடுமாற்றத்தை ஏன் ஒப்புக் கொண்டிருந்தனர்? வேண்டுமென்று இருந்தனர் என்றோ, கவனக் குறைவு என்றோ, அறியாமை என்றோ, அலட்சியம் என்றோ காரணம் கூறமுடியாது. கனம் மந்திரிகளிடம் கண்ணியம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்ந்தறிந்து வினைமுடிக்கும் திறமை அமைச்சர் குழுவிடம் பொதுவாக எதிர்பார்க்கப்படும். மந்திரிகழகு வரும் பொருளுரைத்தலல்லவா! கல்வி மந்திரிக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தை – தயக்கத்தை, முற்றுணரவேண்டிய முதலமைச்சர் எப்படி ஆதரித்தார்? ஏன் ஆதரித்தார்?
இந்தி மொழியை மறைமுகமாகக் கட்டாயப்படுத்தினார்
வடமொழியோடு தொடர்புடைய இந்தி மொழியைத், தென்னாட்டிற்குக் கொண்டு வருவதிலே அளவுக்கு மீறி அக்கறை காட்டிய பத்திரிகைகள் கல்வித் திட்டத்திலே ஏற்பட்ட பாகுபாட்டை நீக்க வேண்டுமென்று ஓயாது ஓலமிட்ட பிறகும், காவடி பல தூக்கிய பிறகும் அல்லவா, கல்வி மந்திரி தன் முன்னைய முடிவை மாற்றி தமிழ் நாட்டிற்கும் இந்தி மொழியை மறைமுகமாகக் கட்டாயப்படுத்தினார்.
முதலிலேயே தமிழ்நாட்டிற்கு மட்டும் இந்தித் திட்டத்திலே விலக்களித்தபோது, விலக்களித்ததற்குக் காரணம் இருந்தால் அதைத் தெரிவித்துச் சமாதானம் கூறியிருக்கவேண்டும். பின்பு, தமிழ்நாட்டையும் இந்தித் திட்டத்தில் சேர்த்த பொழுதாவது, முதலில் அளித்த விலக்கை மாற்றுவதற்கான காரணம் காட்டியிருக்கவேண்டும். இரண்டும் செய்யப் படவில்லை. ஏன் இவ்வளவு குழப்பம், சஞ்சலம், தயக்கம், திடீர் மாறுதல்?
அத்துடனாவது குழப்பநிலை நின்றதா? இல்லை. தமிழ் நாட்டிற்கும் இந்தித் திட்டத்தைக் கட்டாயப்படுத்த முடிவு செய்த பின்னுங்கூட கல்வி மந்திரியாருக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு வாரத்திற்குள்ளாக வானொலியில் பேசும்போது, “இந்திமொழி கற்பது தமிழ் மக்களுக்குச் சங்கடமே” எனக் கல்வி மந்திரியார் தெரிவித்தார். ஏன் இந்த சஞ்சலம்?
உடனடியாக ஒடுக்கவேண்டும்
தயக்கம் மந்திரி சபையை மட்டுமல்ல, ஆதரிப்பாளர்களையுங் கூட ஆட்டி வைக்கிறது. அரசியலாரின் திட்டத்திற்கு எதிர்ப்பு என்றதும் ‘உடனடியாக ஒடுக்கவேண்டும்’ என்று கூக்குரலிடும் தேசீய இதழ்கள் “பொறுத்துப் பார்க்கவேண்டும், அவசரப்பட்டு விபரீதத்தை உண்டாக்க வேண்டாம்” என்று மந்திரி சபைக்கு உபதேசம் செய்வதன் காரணம் என்ன?
இந்தி எதிர்ப்பில் கண்ணியம் பொருந்திய சில காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளுகிறார்கள் என்றவுடன் சீறிடும் பாம்பென வெகுண்டெழுந் தன. காங்கிரஸ் கமிட்டிகள், எதிர்ப்பில் கலந்து கொள்ளுகிற காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானித்தன. அந்தக் காங்கிரஸ்காரர்கள் மீது வழக்கு தொடுத்து, ‘குற்றக் கூண்டிலே’ கொண்டுவந்து நிறுத்தி, நடவடிக்கை யெடுக்கக் காங்கிரஸ் கமிட்டிகள் இன்னும் தயங்குவானேன்?
தயக்கம், குழப்பம், தடுமாற்றம், சஞ்சலம் இவை இந்தித் திட்டத்துடன் மந்திரி சபைக்குள் நுழைந்துவிட்டன.
தயக்கத்துக்குக் காரணம் மந்திரி சபையின் வலிவற்ற தன்மை என்றோ, எதிர்ப்பியக்கத்திடம் காட்டப்படும் இரக்க மனப்பான்மை என்றோ கருதமுடியாது. ஆலைத்தொழிலாளரின் பிடி சோற்றிலும், ஆரம்ப ஆசிரியர்களின் அடிவயிற்றிலும் மண் தூவத்தயங்காத மந்திரி சபையிடம் இரக்கம் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்! முன்னை விட எதிர்ப்பு வலிவுள்ளது, தமிழ் உணர்ச்சி பெருகியுள்ளது, அரசியல் உணர்வு வளர்ந்துவிட்டது என்பது மட்டுமல்லாமல், மொழிப்பிரச்சினை, மொழியாராய்ச்சியில் மட்டும், கல்வித் திட்டத்தைப் பற்றிய விவாதத்துடன் மட்டும் நின்றுவிடாமல், மேலும் சில முக்கிய பிரச்சினைகளைத் தாங்கி நிற்கிறது. வடநாடு – தென்னாடு தகராறு, கலாச்சாரப் போராட்டம், பிரிவினைத் திட்டம், பனியாவின் பொருளாதார ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகள் இந்திப் போராட்டத்தில் கலந்திருக்கின்றன. காங்கிரஸ் மந்திரி சபை இந்தக் காரணங்களனைத்திற்கும் சமாதானம் – அடக்கு முறையாலல்ல, அறிவுமுறையால் கூறினாலன்றி போராட்டத்தைச் சந்தித்ததாகாது. எனவேதான் மந்திரி சபைக்குத் தயக்கம் ஏற்படும் அளவுக்கு மொழிப் போராட்டம் வளர்ச்சி பெற்றுள்ளது – வலிவுள்ளதாய் விளங்குகிறது என்கிறோம்.
மொழிப் பிரச்சினை
இது, பத்தாண்டுகளுக்குமுன் எழுந்து பின் படிந்திருந்த மொழிப் போராட்டத்தின் தொடர்ச்சி யும், இப்பொழுதுள்ள போராட்டத்தின் ஆரம்ப நிலையுமாகும். மொழிப் போராட்டத்தை நன்கு உணர்வதற்கு, அதற்குக் காரணமாக இருந்த மொழிப் பிரச்சினையையும் அதைச் சூழ்ந்துள்ள வாத – எதிர் வாதங்களையும் ஆய்ந்து அறியவேண்டும். எனவே, இந்தியத் துணைக்கண்டத்தில் மொழித்திட்டம், அது வளர்ந்த விதம் திட்டத்தில் கூறப்படும் மொழிகளின் வரலாறு இவற்றைக் காண்போம்.