விண்வெளியை கண்காணிக்கும் உலகின் முதல் செயற்கைக்கோள்

viduthalai
2 Min Read

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய விண்வெளியை கண்காணிக்கும் உலகின் முதல் வர்த்தக செயற்கைக்கோள் ‘ஸ்காட்-1’ தென் அமெரிக்காவை படம் பிடித்து அனுப்பி தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘திகந்தரா’. இந்நிறுவனம் வர்த்தக பயன்பாட்டுக்காக ‘ஸ்காட்-1’ என்ற பெயரில் கண்காணிப்பு செயற்கைக் கோளை உருவாக்கியது. இதில் உள்ள படக்கருவி விண்வெளியில் பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கண்காணிக்கும் திறன் கொண்டது.

சூரிய சுற்று வட்டப் பாதையில்
நிலை நிறுத்தப்பட்டது

இந்த ஸ்காட் செயற்கைக்கோள், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிரான்ஸ்போர்ட்டர்-12 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. புவியின் கீழடுக்கு சுற்றுவட்டப் பாதையை கண்காணிக்கும் வகையில், இந்த செயற்கைக் கோள் சூரிய சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அப்போதே இந்த நிறுவனத்தின் திட்டம் வெற்றி பெற பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். வளர்ந்து வரும் இந்திய விண்வெளித்துறையில் இது முக்கியமான பங்களிப்பு எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த செயற்கைக்கோள் தென் அமெரிக்காவை கடந்து சென்றபோது தனது முதல் படத்தை படம் பிடித்து அனுப்பியது. அதில் பூமியின் விளிம்பு ஒரு கோடு போலவும், அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரம் ஜொலிப்பதும் தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் ஸ்காட் செயற்கைக்கோளின் செயல்பாடு தொடங்கியுள்ளது.
இது குறித்து திகந்தாரா நிறுவனத்தின் சிஇஓ அனிருத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஸகாட் செயற்கைக்கோளின் முதல் படம், புவியின் சுற்றுப்பாதையை பாதுகாக்கும் எங்கள் குழுவின் திறன் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
செயற்கைக் கோள் மோதல் தவிர்க்கப்படும்

இந்த ஸ்காட் செயற்கைகோள் விண்வெளியில் பூமியை சுற்றிக் கொண்டிருக்கம் 5 செ.மீ அளவுள்ள சிறிய பொருட்களை கூட கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது விண்வெளியில் பல நாடுகளின் செயற்கைகோள்கள் பூமியை சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதனால், இது போன்ற கண்காணிப்பு செயற்கைகோள்களின் தேவை தற்போது அவசியமாகியுள்ளது. இந்த கண்காணிப்பு செயற்கைகோள் மூலம் பெறப்படும் துல்லியமான தகவல்கள் மூலம், செயற்கைகோள்களது இயக்கம் குறித்து நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து மோதல்களை தவிர்க்க முடியும்.
ஸ்காட்-1 செயற்கை கோள் தனது பணியை தொடங்கியது பற்றி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள திகந்தரா நிறுவனம், ”விண்வெளியில் மறைவிடங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரோ மேனாள் தலைவர் சோம்நாத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”திகந்தரா நிறுவனத்தின் கனவு நனவாகியுள்ளது. ஸ்காட்-1 செயற்கைகோள், விண்வெளி சூழலை புரிந்துகொள்ளும் திறனை நிரூபித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *