‘‘அடுத்த பத்தாண்டுகளில், தமிழக அரசியலே மாறும்,” என, ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார். ‘கலைமகள்’ மாத இதழின், 94ஆவது ஆண்டு விழா மற்றும் கலைமகள் விருது வழங்கும் விழா, சென்னை, சி.பி.ஆர்.கன்வென்ஷன் சென்டரில் (9.3.2025) நடந்தது.
‘சிறீ ராமகிருஷ்ண விஜயம்’ இதழின் ஆசிரியர் அபவர்கானந்தர், அல்லயன்ஸ் பதிப்பக உரிமையாளர் சிறீனிவாசன், வானதி பதிப்பக உரிமையாளர் ராமநாதன், லண்டன் ஆசிரியர் சிவா பிள்ளை ஆகியோருக்கு கலைமகள் விருதுகளை, ‘துக்ளக்’ இதழ் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி வழங்கி பேசியதாவது: ‘‘தமிழகத்தில், 1967க்குப் பின், அரசியல் சாக்கடையாக மாறி விட்டது. அந்த காலகட்டத்தில், கோவிலுக்குச் செல்ல முடியாது. குங்குமம் வைத்து சென்றால், காறித் துப்பினர்.
மாநிலம் முழுவதும் தேச விரோத செயல்கள் தலைவிரித்தாடின. தர்மம், நாட்டுப்பற்று, ஆன்மிகம் போன்றவற்றை விட்டால் தான், அரசியல் என்ற நிலையை உருவாக்கி விட்டனர். அதை மாற்ற நாங்கள் தொடர்ந்து பாடுபட்டோம். எம்.ஜி.ஆர்., வெளிப்படையாக மூகாம்பிகை கோவிலுக்குச் சென்றார். நாங்கள் நினைத்த சமூக மாற்றம் எப்போதோ வந்து விட்டது. ஆனால், திராவிட கட்சிகளின் அரசியலிடம் இருந்து தான் மாற்றம் வரவில்லை. எல்லாவற்றையும் மாற்ற ஒரு புள்ளி தோன்ற வேண்டும். தற்போது, அது தோன்றி உள்ளது. எதையெல்லாம் சொல்லி, திராவிடக் கட்சிகள் மக்களை ஏமாற்றியதோ, அவையே அவற்றை அழிக்கும் சக்தியாக மாறும். இன்னும் பத்தாண்டுகளில், திராவிட கட்சிகளுக்கு மதிப்பு இருக்காது. தமிழக அரசியலே மாறும். நாட்டில் தர்மம் சிதையும் போது, அதற்காக மவுனமாக இருப்பவரே அதர்மவாதி என்பர்.
அதுபோல இல்லாமல், ‘கலைமகள்’ உள்ளிட்ட பத்திரிகைகள், அதர்மத்துக்கு எதிராக, தர்மத்தை நிலை நாட்ட ஒன்றிணைய வேண்டும்.’’ என்றார் குருமூர்த்தி அய்யர்.
சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்யஞானானந்தர் தன் ஆசியுரையில், ”ராமகிருஷ்ண மடத்தில் உள்ள கோவிலின், 25ஆம் ஆண்டு விழா, மருத்துவமனை நுாற்றாண்டு விழா உள்ளிட்டவை, இம்மாதம் நடக்க உள்ளன. ”இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழிகாட்டும் ஆன்மிக, உத்வேக கருத்துகள் அடங்கிய ஏராளமான புத்தகங்களை வெளியிடுகிறோம். ”அவற்றை படித்து, அனைவரும் நாட்டுப்பற்றுடன் வளர, ராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர் ஆகியோர் அருள்புரியட்டும்,” என்று கூறினார். (விருதுகள் எல்லாம் அவாளுக்கே தான்!)
பாரதிய ஜனதா (சங்பரிவார்க் கும்பல்) ஆட்சிக்கு வந்தாலும் வந்தது. இப்பொழுது பார்ப்பனர்கள் வெளியில் தெரியும்படி பூணூலை தொங்க விட்டுத் திரிய ஆரம்பித் துள்ளனர்.
1967க்குப்பின் அரசியல் சாக்கடையாக ஆகி விட்டதாம் – சொல்லுகிறார் குருமூர்த்தி அய்யர்காள்!
ஆனால் என்ன நடந்தது? ஆச்சாரியார் மனப்பால் குடித்தார். இனி நம் விருப்பப்படிதான் ஆட்சி செயல்படும் என்று நினைத்தார்.
நாமதாரி ஆச்சாரியார் (ராஜாஜி) கும்பலுக்கோ குழைத்து, நாமம் போட்டார் அறிஞர் அண்ணா. ‘ஆரிய மாயை’’ எழுதியவர் ஆயிற்றே அண்ணா. அவரிடமா இந்தப் பாச்சா பலிக்கும்? வெற்றி பெற்ற நிலையில் அண்ணா அவர்கள் திருச்சியில் இருந்த தந்தை பெரியாரை அல்லவா சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ‘வழி காட்டுங்கள் அய்யா!’ என்று அன்பு வேண்டுகோள் வைத்தார். ஆட்சியில் அமர்ந்தவுடன் ‘‘இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை’’ என்றாரே முதலமைச்சர் அண்ணா.
பொறுக்குமா பூணூல் கும்பலுக்கு? அரசு அலுவலகங்களில் உள்ள எல்லா மதக் கடவுள்களின் படங்களையும், சின்னங்களையும் அகற்றச் சொல்லி ஆணை பிறப்பித்தாரே! ஆத்திரம் இன்றுவரை அடங்கவில்லையே ஆச்சாரியார் கும்பலுக்கு!
இன்னொரு திட்டமும் ஆச்சாரியாரிடத்தில் இருந்தது. சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக் கூட்டத்தில் (26.2.1967) ஆச்சாரியார் பேசியது – அவர் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த நஞ்சு வெளியில் வந்து விழுந்தது.
‘விரைவில் மத்திய ஆட்சியில் சுதந்திரா, ஜனசங்கம், தி.முக.. வந்து விடும். இந்த மூன்று கட்சிகளும் நன்றாக அய்க்கியமாகி விடும் என்றார் ஆச்சாரியார்.
எத்தகைய சூழ்ச்சி! எல்லாம் தவிடு பொடியாகி விட்டன. ஹிந்தி எதிர்ப்பு, தமிழ்நாடு பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர், பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று எல்லாமே ஆரியத்திற்கு எதிரான திராவிடத் தத்துவத்தின் விளைச்சல்!
பொறுக்குமா பூணூல் குருமூர்த்திகளுக்கு? அந்தப் புலம்பல்தான் ‘கலைமகள்’ விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த சாதனைகள் எல்லாம் சாக்கடையாம். சாக்கடை நீரை ‘தீர்த்தம்’ என்று கூறிக் காசு பறிக்கும் கூட்டமல்லவா? சந்தனம், சாக்கடையாகத்தான் இருக்கும்!
புலம்பாதே குருமூர்த்திக் கூட்டமே! திராவிட மாடல் ஆட்சியில் இன்னும் நடக்க வேண்டியது ஏராளம் இருக்கிறது.