நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை பிரச்சினை: ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக இந்தியாவையே திரட்டுவோம்!
ஒன்றிய அரசு திணிப்பது கல்வி கொள்கை அல்ல; காவி கொள்கையே!
திருவள்ளூர், மார்ச் 13– நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை பிரச்சினை: ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக இந்தியாவையே திரட்டுவோம்! ஒன்றிய அரசு திணிப்பது கல்வி கொள்கை அல்ல; காவி கொள்கையே என்று திருவள்ளூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.
திருவள்ளூரில் நேற்று (12.3.2025) நடைபெற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ‘தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!’ கண்டனப் பொதுக்கூட்டத்தில் தி.மு. கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:–
‘வீழ்வது நாமாக இருப்பினும்,
வாழ்வது தமிழாக இருக்கட்டும்!’
‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்று ஒன்றிய ஆட்சியாளர்களை நோக்கிக் கேட்கின்ற வகை யில் திரண்டிருக்கும் தமிழினமே… இந்த இனத்திற்காக – இனிமைமிகு நம்முடைய தமிழ் மொழிக்காக – தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக – ஆபத்து வந்தால், ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று வீர முழக்கமிட்டு, எந்தத் தியா கத்திற்கும் தயாராக இருக்கும் திராவிடப் பட்டாளமே… நம் இனத்தின் – நிலத்தின் – மொழியின் நலத்தைக் கெடுக்கும் எதிரிகள் எவராக இருப்பினும், துணிவுடன் எதிர்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீர உடன்பிறப்புகளே… தி.மு.க. மீது நம்பிக்கை வைத்துத் திரண்டிருக்கும் பொதுமக்களே…
நீங்கள் எண்ணிப் பாருங்கள். மூன்று ஆண்டு களில் நம்முடைய மாநிலம் எந்த அளவிற்கு முன்னேறி யிருக்கிறது. அதற்கு முன்பு எவ்வாறு இருந்தது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். முந்தைய ஆட்சியாளர்களால் பத்தாண்டு காலம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி – வளைந்த முதுகுடன் தமிழ்நாட்டின் உரிமைகளை டில்லியின் காலடியில் அடகு வைத்து ஊர்ந்த அவலம் – இதையெல்லாம் கண்டு பொறுக்காத மானமுள்ள தமிழினம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தால்தான், நாடும் – நாட்டு மக்களும் நிம்மதி யாக இருக்க முடியும்… சுயமரியாதை உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்று முடிவு செய்து, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நம்முடைய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தந்து, நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியை உருவாக்கினார்கள்!
மக்களாகிய நீங்கள், எங்கள் மேல் வைத்த நம்பிக்கையை நாளும் காப்பாற்றி – இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்! அனைத்து தரப்பு மக்களுக்குமான ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம்.
ஒன்றிய அரசு வெளியிடும் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் – புள்ளிவிவரங்களிலும் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலமாக இருக்கிறது!
நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி உங்கள் முதலமைச்சரான நான் பெருமையாக சொல்வதைவிட, ஒன்றிய அரசே சொல்லியிருக்கிறது. ஒன்றிய அரசு வெளியிடும் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் – புள்ளி விவரங்களிலும் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலமாக இருக்கிறது! அதனால்தான், நம்முடைய திட்டங்களை பிற மாநில அரசுகளும், தங்களின் மாநிலங்களுக்கு எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்… தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் மீண்டும் நடைபோடுகிறது…
ஒரு மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றால், அந்த மாநி லத்திற்கு துணை நிற்க வேண்டியது, ஒன்றிய அரசின் கடமை! ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படிப்பட்ட அரசாக இருக்கிறது? கொல்லைப்புறம் வழியாக தங்களின் வலதுசாரி அஜெண்டாவை செயல்படுத்த துணைநின்ற அ.தி.மு.க. ஆட்சி சென்றுவிட்டதே என்ற கோபத்தோடும்; மீண்டும் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடும்; நம்முடைய செயல்திட்டங்களுக்கு தி.மு.க. அரசு தடையாக இருக்கி றதே… தமிழ்நாட்டுக்கும் – தமிழர்களுக்கும் காவல் அரணாக இருக்கிறதே என்ற எரிச்சலோடும்; எப்படியெல்லாம் இடைஞ்சல் தர முடியுமோ – எந்த வகையில் எல்லாம் தடைக்கற்களைப் போட முடியுமோ – எதையெல்லாம் செய்து நம்முடைய நிம்மதியைக் கெடுக்க முடியுமோ – அதையெல்லாம் முன்வந்து செய்கிறார்கள்… நம்மைச் சிறுமைப்படுத்த நினைக்கிறார்கள்…
ஒன்றிய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு இல்லாத அடிமைக் கூட்டம் அல்ல இது!
நம்முடைய உரிமைகளைப் பறிப்பதையும் – தமிழ்நாடு கொச்சைப்படுத்தப்படுவதையும் நம்மால் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம் என்று, பதவி சுகத்துக்காக ஒன்றிய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு இல்லாத அடிமைக் கூட்டம் அல்ல இது! சுயமரியாதையும் – இனமான உணர்வும் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம்! ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக போராடுகிற தி.மு.க.வின் போராட்டக் குணத்தைப் பார்க்க வேண்டிய நிலைமையை உருவாக்கி இருக்கிறார்கள்!
இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறோம்! நம்மைப் பொருத்தவரைக்கும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் – எதிர்க்கட்சியாக இருந்தாலும் – சட்டமன்றம் – நாடா ளுமன்றம் – மக்கள் மன்றம் என்று, என்றைக்கும் மக்க ளுக்கான குரலாக ஒலிப்போம். வாதாடியும் – போராடியும் நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவோம் என்ப தற்கான உறுதியேற்றுக் கொள்ளும் கூட்டம்தான், இந்த மாபெரும் பொதுக்கூட்டம்!
இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்கள், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சமயத்தில் என்ன சொன்னார்? “டில்லியில் இருந்து இந்தியா முழுமைக்கும் திட்டமிடுவது என்பது அகற்றப்பட்டு, அந்தந்தப் பகுதியில் இருப்பவர் துணையோடு திட்டமிடுவதுதான் என்னுடைய அணுகுமுறையாக இருக்கும்” என்று சொன்னார். நான் கேட்கிறேன்… பிரதமர் மோடி அவர்களே, ஒருகாலத்தில் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த மோடி அவர்களே… கடந்த பத்தாண்டு காலத்தில் நீங்கள் கூறியபடி மாநிலங்களிடம் நடந்து கொண்டீர்களா? இல்லையே! அதற்கு மாறாக, உங்களின் செயல்பாடுகளும் – உங்கள் அமைச்சரவையின் அணுகுமுறையும் எவ்வாறு இருக்கிறது?
சொன்னபடி நடந்து கொண்டீர்களா மோடி அவர்களே?
மாநிலங்களை எப்படி அழிப்பது; எப்படி ஒழிப்பது; மாநில உரிமைகளை எப்படி பறிப்பது – சிதைப்பது என்று சர்வாதிகார எண்ணமாகத்தானே இருக்கிறது! “நான் பிரதமரானால் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தருவேன்” என்று சொன்னீர்கள்… அவ்வாறு மாநிலங்க ளுக்கு முக்கியத்துவம் கொடுத்து – கூட்டாட்சி ஜனநாய கத்திற்கு மதிப்பளித்து நீங்கள் செயல்படுத்திய செயல்கள் என்ன? அதுதான் என் கேள்வி!
பிரதமராகும்போது, நீங்கள் சொன்னதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புறேன்… “மாநில அரசுகள் டில்லிக்குக் காவடி தூக்கும் நிலைமையை மாற்றி, அதிகாரப் பகிர்விற்கு வழிகாட்டுவதுதான் என்னுடைய அணுகுமுறையாக இருக்கும். மாநில முதலமைச்சராக நான் அடைந்த பன்னிரண்டு ஆண்டுகால அனுபவத்துடன் தேசியத் தலைமையை ஏற்பதால், மாநிலங்களின் பிரச்சினையும் எனக்குத் தெரியும். ஒன்றிய அரசின் முக்கியத்துவமும் எனக்குப் புரியும்” என்று சொன்னீர்களே… சொன்னபடி நடந்து கொண்டீர்களா?
வரி விதிப்பதில் மாநிலங்களுக்கு உரிமை உண்டா? வரிப் பகிர்விலாவது மாநிலங்களிடம் நியாயமாக நடந்து கொண்டீர்களா? திட்டங்களை அறிவிப்பது, செயல்படுத்துவது இதிலாவது மாநிலங்களைப் பாரபட்ச மில்லாமல் நடத்துகிறீர்களா? இல்லையே… கூட்டாட்சித் தத்துவத்தை ஆதரிப்பவர் நீங்கள் என்று சொல்வதற்கு ஒரு சாட்சியத்தையாவது காட்ட முடியுமா? பிரச்சினை வரும்போது, மாநில முதலமைச்சர்களை அழைத்து என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா? ஆலோசனை நடத்தியிருக்கிறீர்களா? எதுவும் இல்லையே!
கல்விக் கொள்கை அல்ல; காவிக் கொள்ளை!
அதுமட்டுமல்ல, இன்னும் சொன்னீர்கள்! “ஒன்றி யத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு, மாற்றுக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற மாநில அரசுகளைப் பழிவாங்க மாட்டேன். எந்த வகையிலும் மாநில அரசுகள் பழிவாங்கப்படாது என்று உறுதி அளிக்கிறேன். என்னதான் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் – ஒன்றிய–மாநில உறவு சீர்குலைய இடம்தர மாட்டேன்” என்று சொன்ன பிரதமர் மோடி அவர்களே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் பழிவாங்குவதை மட்டுமே – பழிவாங்கும் அரசியலை மட்டுமே நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்களை என்னால் சொல்ல முடியும். இப்போதுகூட எங்களுடைய தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான, 2,151 கோடி ரூபாய் நிதியை கொடுக்காமல் பழிவாங்கும் அரசியலைத்தானே நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்?
“தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?”
பிரதமர் மோடி அவர்களே… இன்னும் இருக்கிறது! கடந்த 6.12.2012 அன்று குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கூறியது ஞாபகம் இருக்கிறதா? “குஜராத் மக்கள் 60 ஆயிரம் கோடியை டில்லிக்கு அனுப்பு கிறார்கள்… ஆனால், திரும்ப வருவது மிகக் குறைவு. குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?” என்று கேட்டீர்களே… அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கிறேன்… “தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநி லமா?” நாங்கள் உழைத்து – வரியாகச் செலுத்திய பணத்தில் எங்களுக்கான நிதியைக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்கான நிதியை விடுவிக்காமல் மிரட்டுறது நியாயமா? தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள்…
உண்மையிலேயே மக்களுக்கான – மாணவர்களுக்கான திட்டமாக இருந்தால் நாம் ஏன் அதை எதிர்க்கப் போகிறோம்? அனைவரையும் கல்விக்குள்ளே அழைத்து வரும் திட்டமாக இருந்தால் அதை வரவேற்றிருப்போமே? ஆனால், தேசியக் கல்விக் கொள்கை அப்படிப்பட்டதா? கல்வியில் இருந்து மக்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல்திட்டங்களையும் கொண்டதாகத்தான் இந்தக் கல்விக் கொள்கை இருக்கிறது! அதனால்தான் எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது! தேசியக் கல்விக் கொள்கையை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்று அதை வரைவு கொள்கையாக வெளியிட்டபோதே, கல்வி யாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, தெளிவான ஆய்வறிக்கையை வெளியிட்டோம்! தேசியக் கல்விக் கொள்கை என்பது, கல்விக் கொள்கை அல்ல; அது காவிக் கொள்கை! அது இந்தியாவை வளர்க்க உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை அல்ல; ஹிந்தியை வளர்க்கக் கொண்டு வரப்பட்ட காவிக் கொள்கை! இந்தக் கல்விக் கொள்கை, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை மொத்தமாக அழித்து – ஒழித்துவிடும் என்றுதான் நாம் எதிர்க்கிறோம்!
* சமூகநீதி எனப்படும் இட ஒதுக்கீட்டை தேசிய கல்விக் கொள்கை ஏற்கவில்லை.
*பட்டியலின – பழங்குடியின – இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தரும் உதவித் தொகையை இந்தக் கொள்கை மறுக்கிறது.
*மூன்று, அய்ந்து, எட்டு ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வை வைத்து வடிக்கட்டப் பார்க்கிறார்கள்.
*ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையைக் கொண்டு வரப் போகி றார்கள்! அதாவது ‘ஆல் இந்தியா எக்ஸாம்’ போன்று நடக்கும்.
*உங்கள் மகனோ, மகளோ 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் உடனே சேர முடியாது. இப்போது மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நீட் தேர்வு வைப்பது போன்று, கலைக் கல்லூரிக்கும் தேர்வு வைத்துதான் எடுப்பார்கள்! அந்தத் தேர்வையும், கல்லூரிகள் நடத்தாது; தேசிய அளவில் தேர்வு ஏஜென்சிதான் நடத்தும்.
*10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள், அவர்க ளாகவே வெளியேறலாம். இவ்வாறு சொல்வதே, “போ…” என்று விரட்டுவதற்குச் சமம்!
*ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள்! குலத் தொழிலை, ஜாதித் தொழிலைத் தொடராமல், படித்து முன்னேற நினைப்பவர்களை மீண்டும் அதை நோக்கித் தள்ளப் பார்க்கிறார்கள்! இதை யெல்லாம் பார்த்துதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஆணித்தரமாகச் சொல்கிறோம்!
பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்!
ஆனால், இதையெல்லாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் சொல்கிறார். இரண்டாயிரம் கோடி என்ன? பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஸ்டிராங்காக சொல்லிவிட்டேன்! அந்தக் கோபத்தில்தான் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேல் கோபப்படுகிறார். நமக்கு ஜனநாயகத் தன்மை இல்லையாம்… நாகரிகம் இல்லையாம்… கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய இனம், நம்முடைய தமிழினம்! உலகத்திற்கு, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பாட்டை உருவாக்கிக் கொடுத்தது. அத்தகைய தமிழர்களுக்கு ஜனநாயகம் தெரியாதா? நாகரிகம் தெரியாதா? வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது!
உலகிற்கே பண்பாட்டை உருவாக்கிக் கொடுத்த தமிழினம்!
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அறம் பேசும் தமிழினத்துக்கு ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பு எடுக்காதீர்கள்! நீங்கள் என்னவோ ஹெட்மாஸ்டரைப் போல, நாங்கள் மாணவர்கள் போல எங்களுக்கு வகுப்பெடுக்க வந்திருக்கிறீர்களா? தமிழ்நாடு விடா மல் போராடுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறார் தர்மேந்திர பிரதான்.
தமிழ்நாட்டைக் கொச்சைப்படுத்துவதுதான் உங்களின் வழக்கம்! ஒடிசா மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது, மரியாதைக்குரிய நவீன் பட்நாயக் அவர்களின் செயலாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இருந்தார் என்பதற்காக, பிரதமர் மோடியும் – உள்துறை அமைச்சரும் தமிழ்நாட்டை எவ்வாறெல்லாம் கொச்சைப்படுத்தினார்கள்? ஜெகந்நாதர் கோயில் கருவூலச் சாவியைத் தமிழ்நாட்டிற்கு திருடிச் சென்று விட்டார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கருவூலச் சாவி தொடர்பான விசாரணை அறிக்கையைப் பொதுவில் வெளியிடுவோம் என்று பேசினார்களா? இல்லையா?
பிரதமரும் – உள்துறை அமைச்சரும் செய்தது எவ்வளவு பெரிய அவதூறு?
ஜெகந்நாதர் கோயில் கருவூலச் சாவிக்கும் – தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? பிரதமரும் – உள்துறை அமைச்சரும் செய்தது எவ்வளவு பெரிய அவதூறு? அங்கு ஆட்சி மாற்றம் நடந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 5 மாதம் ஆகிவிட்டது, கருவூலச் சாவி எங்கே என்று ஒடிசா எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். தமிழர்களைத் திருடர்கள் என்று சொன்னதை வாபஸ் பெறுங்கள் என்று அந்த எம்.பி. சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அவையில் வாய்மூடி மவுனம் சாதித்திருக்கிறார்கள். இதுதான் அநாகரிகம்!
அநாகரிகம் பற்றிப் பேசும் தர்மேந்திர பிரதான் அவர்களே! எது நாகரிகம்? என்று உங்களால் சொல்ல முடியுமா? எங்கள் மாநிலத்தில் இருந்து வரி வசூல் செய்துவிட்டு, எங்களையே பட்டினி போடுவதுதான் நாகரிகமா? “தமிழ் பிடிக்கும் – தமிழில் பேச முடிய வில்லையே” என்று சொல்லிக் கொண்டே, தமிழுக்கு நிதி ஒதுக்காமல் சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்குவதுதான் நாகரிகமா? தாய்மொழியை வலியுறுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டே அதைச் செய்யாமல் சமஸ்கிருதத்தையும் – ஹிந்தியையும் திணிப்பதுதான் நாகரிகமா?
அநாகரித்தின் அடையாளம் நீங்கள் தான்!
குஜராத்தில் இயற்கைப் பேரிடர் வந்தால், அன்று மாலையே 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதும் – தமிழ்நாட்டில் பேரிடர் வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், நாங்கள் கேட்டதில் ஒரு விழுக்காடு நிதிகூட ஒதுக்காமல் இருப்பதுதான் நாகரிகமா? ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் அறிவித்துவிட்டு, ஏழு ஆண்டுகாலமாக அதைக் கட்டாமல் ஏமாற்றுவதுதான் நாகரிகமா? நாகரிகத்தைப் பற்றி யார் பேசுவது? அநாக ரிகத்தின் அடையாளமே நீங்கள்தான்! அநாகரிகத்தையே அராஜகமாகப் பயன்படுத்துவது நீங்கள்தான்! ஹிந்தி மொழியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நிதி தர மாட்டோம் என்று சொல்வதைவிட அராஜகம் இருக்க முடியுமா?
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அராஜகவாதிகள் என்று சொன்ன தர்மேந்திர பிரதானை, அரை மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார்கள் நம்மு டைய தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் போர்க்குணத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து வரும் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்கச் சதி செய்கிறார்கள்.
பா.ஜ.க.வின் சதியை ஒன்று சேர்ந்து தடுப்போம்!
தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் இருக்கிறது. இதைக் குறைக்கும் அபாயம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. பொதுவாக, மக்கள் தொகையை வைத்துதான் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. மக்கள் தொகை குறைவாக இருப்பதால், நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையும் குறையும். தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்று தெரிகிறது. அதாவது, இனி தமிழ்நாட்டுக்கு 39 இல்லை, 31 எம்.பி.க்கள் தான்! நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்! தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பற்றிய கவலை மட்டுமல்ல. நம்முடைய மாநிலத்தின் உரிமை சார்ந்தது.
இதை வைத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நாம் கூட்டினோம். பா.ஜ.க., ஓரிரு உதிரிக்கட்சிகள் நீங்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் வருகை தந்து நம்முடைய கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
இது தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல, தென் மாநிலங்களின் பிரச்சினை என்பதால், இன்னும் சில மாநிலங்களும் பாதிக்கப்படும் என்று அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். தென் மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத பா.ஜ.க., வடமாநிலங்களில் பெறும் வெற்றியை வைத்தே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறது. அதுதான் சதி! தங்களுக்கு செல்வாக்கான மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதி கரித்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இதைத் தி.மு.க. தடுத்து நிறுத்தும். தென் மாநிலக் கட்சிகள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு தடுப்போம்.
மார்ச் 22 இல் சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துகொள்ளும் கூட்டம்!
தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்படவுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்த்து, கூட்டு நடவ டிக்கைக் குழு அமைக்க இருக்கிறோம். ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா, கேரளா, ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் இருக்கும் 29 கட்சி களுக்கு நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன். பிற மாநில முதலமைச்சர்களுடன் நானே நேரடியாக இன்று காலை முதல் தொலைபேசியில் பேசி வருகிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்தக் கருத்தை எடுத்துச் சொல்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டத்தை மார்ச் 22 ஆம் நாள் நடத்த இருக்கிறோம்.
இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் – ஜனநாயகக் கொள்கைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக தொகுதி மறுசீரமைப்பு இருக்கிறது. 39 எம்.பி.க்கள் எழுப்பும் குரலையே ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் நிலையில்,
இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்தா லோ – குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அழிக்க முடியாத அநீதி ஆகிவிடும்.
பல்வேறு மாநிலக் கட்சிகளும் இணைந்து எடுக்கும் முடிவின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நாம் எடுப்போம். நிதி தரமாட்டோம் – அதிகாரத்தைப் பறிப்போம் – இதைக் கேள்வி கேட்டால், தொகுதி எண்ணிக்கையைக் குறைப்போம் என்ற அளவுக்கு எதேச்சாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறது, பா.ஜ.க.
பாசிச நடவடிக்கைகளுக்கு அடிபணிய மாட்டோம்!
உறுதியோடு சொல்கிறேன்! பா.ஜ.க.வின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்.
பா.ஜ.க.வின் ஆதிக்கவாத ஜாதிய சிந்தனை – நம்முடைய மக்களின் சமூகநீதியை மறுக்கிறது. பா.ஜ.க.வின் சர்வாதிகாரச் சிந்தனை – நம்மைப் போன்ற மாநிலங்களின் சுயாட்சித் தன்மையை நொறுக்குகிறது. பா.ஜ.க.வின் மதவாதச் சிந்தனை – இந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைச் சிதைக்கிறது. பா.ஜ.க.வின் எதேச்சாதிகார எண்ணம் – கூட்டாட்சித் தத்துவத்தையே ஒழிக்கப் பார்க்கிறது. இதை இப்போது தடுக்கவில்லை என்றால், பிறகு எப்போதுமே தடுக்க முடியாது.
இந்தியா முழுமைக்குமான போராட்டமாக மாறப் போகிறது!
சமூகநீதி – மதச்சார்பின்மை – கூட்டாட்சி இந்தியா – மாநில சுயாட்சிக் கோட்பாடுகளின்கீழ் இந்தியாவை அணி திரட்டுவோம். அவ்வாறு அணி திரட்டினால் மட்டும்தான், இந்தியாவைக் காப்பாற்ற முடியும். அதனால், ‘தமிழ்நாடு போராடும் – தமிழ்நாடு வெல்லும்’ என்ற போராட்டமானது இந்தியா முழுமைக்குமான போராட்டமாக மாறப் போகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களே! உங்களுக்கு என்னுடைய வேண்டுகோள்! ஹிந்தியை வளர்ப்பதைவிட இந்தியாவைப் வளர்க்கப் பாருங்கள். எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும், சமஸ்கிருதத்தை வளர்க்க முடியாது. மக்களால் பேசப்படாத மொழியை வளர்க்கக் கோடி கோடியாக கொட்டிக் கொடுப்பீர்கள். உலகமெல்லாம் பல நாடுகளில் அரசு அங்கீகாரத்துடன் மக்களால் பேசப்படும் எங்கள் தமிழ் மொழிக்கு ஓரவஞ்சனை செய்வீர்களா?
நாடு இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது பிரதமர் அவர்களே!
* ஜி.டி.பி. எனப்படும் இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை என்னவாக வைத்திருக்கிறீர்கள்? கடந்த அக்டோபர் – டிசம்பர் ஆகிய மூன்றாவது காலாண்டில் 6.8 விழுக்காடாக வளரும் என்று சொன்னார்கள். ஆனால், 6.2 விழுக்காடுதான் வந்திருக்கிறது. இதுதான் உங்களின் வளர்ச்சி இந்தியாவா?
*அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து சரிந்து படுபாதாளத்துக்குச் செல்கிறது. 2014 ஆம் ஆண்டு நீங்கள் ஆட்சிக்கு வரும்போது அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 58 ரூபாய் 47 பைசாவாக இருந்தது. இப்போது 2025 ஆம் ஆண்டு 87 ரூபாய் 99 பைசாவாக ஆகிவிட்டது. இதுதான் இந்தியாவிற்கான வளர்ச்சியா?
*அமெரிக்கப் பொருள்கள் மேல் விதிக்கும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டார்கள் என்று, அந்த நாட்டின் அதிபர் வெளிப்படையாகப் பேட்டி அளித்திருக்கிறார். இது அவமானம் இல்லையா?
நாள்தோறும் சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு!
*நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட கைது செய்யப்பட மாட்டார் என்று சொன்னவர் மோடி. அவருடைய பத்தாண்டு கால ஆட்சியில் 3,000 பேர் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஆண்டு மட்டும் 550 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு மாதத்தில் 130 பேர் கைது செய்யப்பட்டார்கள். சிறிய நாடான இலங்கை கூட உங்களை மதிக்கலையே! இதுதான் உங்களுடைய பரிதாபங்கள்! அதனால்தான் அதல பாதாளத்திற்கு இந்தியா இறங்கிக் கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு இறுதியில் வெல்லும்! வெல்லும்! வெல்லும்!
இதைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மாநிலக் கட்சியாக இருந்தாலும் தி.மு.க.விற்கு இருக்கிறது. “இந்தியாவில் மக்களாட்சியைக் காக்கும் முன்னணிப் படையாக திராவிட முன்னேற்றக் கழகம் திகழும்” என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொன்னாரே! அத்தகைய முன்னணிப் படையாக நாம் செயல்படுவோம். அதற்கு எடுத்துக்காட்டு, நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து ஊடகங்களில் பார்த்தீர்கள் என்றால், இப்போது வரைக்கும் தமிழ்நாட்டைப் பற்றிதான் அனைத்து ஒன்றிய அமைச்சர்களும் பேசுகிறார்கள்! நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, நீங்கள் நாள்தோறும் வசைபாடினாலும், தமிழ்நாடு தொடர்ந்து போராடும்… தமிழ்நாடு இறுதிவரை போராடும்… தமிழ்நாடு இறுதியில் வெல்லும்! வெல்லும்! வெல்லும்! விடைபெறுகிறேன்.
இவ்வாறு தி.மு. கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.