‘நான் முதல்வன்’ திட்டம் 41.3 லட்சம் பேர் பயன்!
சென்னை, மார்ச் 13 ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், இதுவரையில் 41.3 லட்சம் பேர் பயன்பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, திட்டத்தின்கீழ் இதுவரையில் பயிற்சி பெற்றவர்கள் குறித்த தகவல்களை செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், மொத்தம் 41,38,833 பேர் பயன்பெற்ற நிலையில், அவர்களில் 25,63,235 பேர் கலை மற்றும் அறிவியல் படிப்பிலும், 10,91,022 பேர் பொறியியல் படிப்பிலும் பயன்பெற்றுள்ளனர்.
மேலும் தொழில்நுட்பக் கல்வியில் 3,77,235 பேரும், அய்டிஅய் படிப்பில் 1,07,341 பேரும் பயன்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும்.
கல்வித் துறை உத்தரவு
சென்னை, மார்ச் 13 தமிழ்நாட்டில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
திறன்மிகு வகுப்பறைகள்
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் 24,338 தொடக்கப் பள்ளிகள், 6,992 நடுநிலை பள்ளிகள், 3,094 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 3,129 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,553 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி பெறுதல், ஓராண்டுக்கான கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளவும் நிதி தேவைப்படுகிறது. இதுதவிர தகைசால் பள்ளிகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எண்ணிக்கை கொண்ட மேல்நிலைப் பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் இணைய வேகம் போதுமானதாக இல்லை. எனவே, இத்தகைய பள்ளிகளில் 1 ஜிபிபிஎஸ் இணையதள வசதியை ஏற்படுத்த வேண்டும்.
ஊராட்சி அமைப்புகள்
இதற்காக ரூ.189 கோடி தேவைப்படுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநா், தமிழ்நாடு அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா்.
அதையேற்று அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதியை ஏற்படுத்த ஆணையிடப்படுகிறது. அதற்கான கட்டணத்தை பள்ளிகள் அமைந்துள்ள சாா்ந்த உள்ளாட்சி அமைப்புகளே (ஊரக, நகராட்சி, மாநகராட்சி) செலுத்த வேண்டும். பேரூராட்சி ஆளுகைக்குள்பட்ட அரசுப் பள்ளிகளுக்கான இணைய வசதி கட்டணம் மட்டும் ரூ. 5.49 கோடியை மாநில நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது”என்று அதில் கூறப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
பொதுமக்களிடம் இருந்து, 5 சதவீதம் வரை கல்வி வரியாக உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கின்றன. அதை, முழுமையாக அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளா்ச்சி மற்றும் பராமரிப்புக்காக பயன்படுத்த வேண்டும். ஆனால், அவற்றை பொதுக்கணக்கில் சோ்த்து, மற்ற விஷயங்களுக்கு செலவிடுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில்தான், அரசுப் பள்ளிகளின் இணையதள பயன்பாட்டு கட்டணத்தை, உள்ளாட்சி நிா்வாகங்களே செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தப் பணிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது அதற்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டதால் மாநில நிதியில் இருந்து அவற்றை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.