திருச்சி, மார்ச் 12- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 106ஆவது பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா பெரியார் மன்றம் மற்றும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் 10.03.2025 அன்று காலை 11 மணி யளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத் தலைவர் செல்வி இல. அனிதா வரவேற்புரையாற்றினார். முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தமது தலைமையுரையில் உலக மகளிர் நாள் கொண்டாடும் பெண்கள் அனைவரும் நன்றி கூற வேண்டும் என்றால் நம்முடைய முதல் நன்றியை தந்தை பெரியாருக்குத்தான் கூற வேண்டும். ஏனெனில் அய்யா அவர்கள் இல்லையென்றால் பெண்களுக்கு பிறப்பதற்கும், பேசுவதற்கும், படிப்பதற்கும் உரிமையில்லாமல் போயிருக்கும். அவர்களின் பெரும் முயற்சியினால்தான் இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருக்கின்றோம். பெண்கள் அனைவரும் அன்னை மணியம்மையார் அவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அம்மா அவர்களின் எளிமை, சிக்கனம், தைரியம், துணிச்சல், போர்க்குணம் அனைத்தையும் பெண்கள் தமது வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்றும் உரையாற்றினார்.
கட்டிக் காத்தவர்
உலக அளவில் நாத்திக அமைப்பிற்கு தலைமையேற்ற முதல் பெண்மணி அன்னை மணியம்மையார் அவர்கள். தந்தை பெரியார் அவர்களை செவிலித் தாயாக பராமரித்து 94 ஆண்டுகள் வாழ வைத்த பெருமைக்குரியவர்கள். அய்யா மறைவிற்குப் பிறகு இயக்கத்தையும் கல்வி நிறுவனங்களையும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தையும் கட்டிக்காத் தவர். அக்கல்வி நிறுவனங்கள் இன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் ஆல்போல் தழைத்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமாக உயர்ந்து சேவையாற்றி வருகின்றது. மகளிர் நாள் கொண்டாடும் இவ்வேளையில் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் புறந்தள்ளி சாதனைப் பெண்மணியாக உயர்ந்த அம்மா அவர் களை நாம் நம்முடைய வாழ்வில் உதார ணமாகக் கொண்டு வாழ்ந்து உயர்வோம் என்று கூறி அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
போராடியதால்தான்…
உலக மகளிர் நாள் விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞூர் சங்கத்தின் மாநில பெண் படைப்பாக்கக் குழு கவிஞூர் பா.மகாலட்சுமி தமது சிறப்புரையில் தந்தை பெரியார் தடம் பதித்த இக்கல்லூரியில் அன்னை மணியம்மையார் அவர்கள் பற்றி பேசுவதை தம் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்றும் கல்லூரி வளாகத்தினையும் மாணவர்களையும் பார்க்கும் பொழுது ஒரு வித ஈர்ப்பும் நெகிழ்ச்சியும் ஏற்படுவதாகவும் உரையாற்றினார். கல்லூரியில் இணைந்து நிறைய படிக்க வேண்டும், உயர வேண்டும் என்று நினைத்த சூழலில் திருமணம் என்பது என்னவென்றே தெரியாத 16 வயதில் தமக்கு திருமணம் நடந்தது என்றும் அத்திருமணத்தால் வாழ்வில் பல கசப்பான மாற்றங்கள் ஏற்பட்டது என்றும் உரையாற்றினார். நம்மை ஆதிக்கம் செலுத்த வந்த ஆங்கிலேயர்கள் 8 வயது பெண்குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறுவதைக் கண்டு இதுதான் நீங்கள் பெண்களுக்கு தரும் சுதந்திரமா என்று கேள்வி கேட்டனர். தந்தை பெரியார் போன்றோர் போராடியதன் விளைவுதான் குழந்தை திருமணங்கள் ஒழிந்து இன்று ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமாக கல்வி பயின்று வருகிறீர்கள். அதிலும் இந்த அரங்கம் முழுவதும் முக்கால் பகுதி பெண்கள் இருப்பதை காணும் பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் உரையாற்றினார். உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு உங்களுடைய பெற்றோருக்கு கிடைத்திருக்காது. அதிலும் தாய்மார்களுக்கு பெரிதும் கிடைத்திருக்காது. கல்வி கற்க பெண்கள் செல்வதை கேலி செய்யும் சமூகத்தின் பின்னணியை இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலே அவர்கள் ஆசிரியராக பள்ளிக்குச் சென்ற போது அவர் பட்ட அவமானங்களே அதற்குச் சான்று.
யாரிடமிருந்து பாதுகாப்பது?
ஒரு பெண்ணை யாரிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்த சமூகம் குறிப்பிடுகின்றது. காட்டில் வாழும் சிங்கம், புலி, கரடியிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அதில் தெளிவு இருக்கின்றது. ஆனால் சக மனிதர்களான ஆண்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால் இந்த சமூகம் குறைபாடுடைய சமூகம் என்று கருத வேண்டும். ஒரு பெண் தம்முடைய உடையில், உணவில், பழகும் விதத்தில், சமுதாயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறுவது போல ஆணுக்கு கற்பிக்கப்பட்டுள்ளதா. ஒரு பெண் உடையில் நாகரிகமாக இருந்தால் பாலியல் சீண்டல் ஏற்படாது என்று சொன்னால் ஆசிபாவிற்கு நடந்தது எப்படி என்று கேள்விகள் கேட்டு பெண்ணுரிமை சார்ந்த பல செய்திகளை எடுத்துரைத்தார்.
மேலும் அலைபேசியால் இக்கால சமூகம் வீணாகின்றது என்பதனை படைப்பாளர்களால் ஒப்புக்கொள்ள முடியாது ஏனென்றால் நம்முடைய தேவைகளையும் நமக்கு வேண்டிய செய்திகளையும் உடனடியாக தெரிவிக்கும் பேராயுதம்தான் அலைபேசி. ஆனால் அதனை மாணவர்கள் எது நமக்கு தேவை, எது தேவையில்லை என்ற புரிதலை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சரியான புரிதல் இருந்தால் நிச்சயம் சரியான பாதைகள் கிடைக்கும்.
தந்தை பெரியார் மீதும் அவரின் சிலைகளின் மீதும் வன்மம் காட்டக் கூடியவர்கள் யார் என்று சொன்னால் பெண்ணுரிமையை விரும்பாதவர்கள், அனைவரும் சமம் என்ற சமூகநீதியை விரும் பாதவர்கள்தான் இப்படி செய்கின்றனர். அரசியல் குறித்த தெளிவு மாணவர்களிடம் இருக்க வேண்டும். நீட் தேர்வு முறை, புதிய கல்விக் கொள்கை மற்றும் ஹிந்தி திணிப்பு போன்றவை மாணவர்களை பெரிதும் பாதிக்கின்றது. அதனால் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதனை விட யாரை தேர்வு செய்யக்கூடாது என்பதில் மாணவ சமுதாயத்திற்கு தெளிவு ஏற்பட வேண்டும்.
தியாகத்தால் உயர்வு
திராவிட கட்சிகளின் ஆட்சிகளால்தான் நம் நாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டிற்கு முன்பு பல வாய்ப்புக்கள் நமக்கு மறுக்கப் பட்டிருக்கின்றது. மண்ணில் இரத்தம் சிந்தி நமக்காக பாடுபட்ட பல தலைவர்களின் தியாகத்தால்தான் நாம் இன்று இந்த அளவிற்காவது உயர்ந்திருக்கின்றோம்.
நூல்களைப் படியுங்கள்
நிறைய புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். புத்தகங்கள் வாசித் தால்தான் நமது எண்ணங்கள் தெளிவு பெறும். மறைக்கப்பட்ட வரலாறுகளை தெரிந்து கொள்ளலாம். நாம் சாதனை யாளராக உருவாக வேண்டும் என்றால் புத்தகங்களை நிறைய வாசிக்க வேண்டும். அப்படி நான் வாசித்து அறிந்து கொண்ட புரட்சிகர பெண்மணிதான் அன்னை மணியம்மையார். பெரியார் மணியம்மை திருமணம் என்பதை கொச்சைப்படுத்தி, அந்த உறவையே கொச்சையாக பேசிய போதும் வெகுண்டு எழாமல் தந்தை பெரியாருக்கு தொண்டு செய்வதையே வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு பயணித்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.
இராவண லீலா
இராமலீலா நடத்திய போது இராவண லீலா நடத்திக்காட்டிய வீரமங்கை அவர்கள். அப்படிப்பட்ட தலைமையின் 106ஆவது பிறந்த நாள் விழாவில் தாம் கலந்து கொள்வதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவதாக கூறி பெண்ணுரிமை சார்ந்த பல கவிதைகளை எடுத்துரைத்து நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் முதுநிலை மருந்தியல் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கியதுடன் கேள்விகள் கேட்ட மாணவர்களுக்கு தாம் எழுதிய கூழாங்கற்கள் உருண்ட காலம் என்ற கவிதை நூலினை பரிசாக வழங்கி சிறப்பித்தார்.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்த இந்நிகழ்வில் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தைச் சார்ந்த நடராசன், அன்னை மணியம்மையாரின் தொண்டறம் குறித்து உரையாற்றினார். பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கு கொண்ட இந்நிகழ்வின் திராவிட மாணவர் கழக உறுப்பினர் செல்வி ஆ.சரோக்கியா இறுதியில் நன்றி கூறினார். முன்னதாக பெண்ணுரிமை சிந்தனைகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.