சென்னை, மார்ச் 12- சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய இருவர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு 10.3.2025 அன்று பதவி யேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர். சக்திவேல், பி. தனபால் ஆகிய இருவரும் கூடுதல் நீதிபதிகளாக கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு செய்த பரிந்துரையை ஏற்று இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
அதன்படி இருவருக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதையடுத்து இருவரும் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்!
சென்னை, மார்ச் 12- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.
நாட்டிலுள்ள அனைத்து மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து, அதை பொதுவான கட்டமைப்பின்கீழ் கொண்டு வரும் வகையில் அனைத்து மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ஏஎஸ்ஆா்டியு) ஏற்படுத்தப்பட்டது.
இக்கூட்டமைப்பில் உறுப்பினா்களாக 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இக்கூட்டமைப்பு சார்பில் சிறந்த சேவையாற்றிய கழகங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2023-2024-ஆம் ஆண்டுக்கான விருதுகளில் 19 விருதுகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டன.
இந்த விருதுகளை டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேனாள் ஆளுநா் கிரண்பேடியிடமிருந்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தலைமை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.