தாம்பரம், மார்ச் 12– 2.3.2025 அன்று மாலை மேற்கு தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் பெரியார் வாசகர் வட்ட 15 ஆவது சிறப்புக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
“ஒன்றிய அரசால் வஞ்சிக்கப் படும் தமிழ்நாடு” என்னும் தலைப்பில் ஊடகவியலாளர் இரா.உமா உரை நிகழ்த்தினார்.
அவர் தம் உரையில், “நம் மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை மக்களுக்கு சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிக்கிறதா ஒன்றிய அரசு என்றால் – இல்லை ஒட்டுமொத்த இந்தியாவையே வஞ்சிக்கிறது. ஏமாற்றிக் கொண்டிருக்கிறது இந்தியாவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையும் எங்கள் இந்திய பண்பாடு இது தான், எங்கள் அரசியல் இது தான் எங்களின் பொருளாதார கொள்கை இது தான் என்று சொல்லி ஹிந்துத்துவ அரசியலிலும் ஒரு பிற்போக்குத்தனமான பண்பாட்டையும் உலக நாடுகளிலேயே முன்னிறுத்தி உலக நாடுகளையே ஏமாற்றி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதிலும் குறிப்பாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டை முக்கிய கவனத்தில் எடுத்துக் கொண்டதற்கு நம்முடைய எல்லை ஒரு காரணம். தமிழ் நாட்டு பா.ஜ.கவை பொறுத்த வரையில் அவர்களுடைய அடிப்படைக் கொள்கை என்பது ஆர்.எஸ்.எஸ் கொள்கை.
ஆர்.எஸ்.எஸ் அதன் அடிப்படை கொள்கைப்படி பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாகத் தெரிகிற அரசியல் அமைப்பாகும். தேர்தல் அரசியலில் இருப்பதாகும். அதற்கு இன்னும் எத்தனையோ துணை அமைப்புகள் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்,சங்பரிவார், ஹிந்துத்துவா போன்ற குழுக்கள் இருக்கின்றன. இதில் நிழல் ராணுவம் மாதிரியான கூட்டங்கள் எல்லாம் நடக்கிறது. அவைகளை நீங்கள் படித்துப் படித்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நாளும் தூக்கமே வராது. அப்படி ஏகப்பட்ட குழுக்களை வைத்துள்ளார்கள்.
அடிதடிப் பிரிவு, அவதூறு போன்ற பல்வேறு பிரிவுகளில் குறிப்பாகப் பெண்களை மானபங்கம் செய்வது, மிக மட்டமாக கீழ்த்தரமாகப் பெண் களை சமூக வலைத்தளங்களில் சித்தரித்து பொதுவெளியில் இருந்து பெண்களை அப்புறப் படுத்த வேண்டும் என்ற நோக்கத் துடன் ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்படுகிறது.
இதில் தமிழ்நாடு தான் அவர்களுக்கு மிகவும் உறுத்தலாக இருக்கிறது. அதனால் தான் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறிக்கும் விதமாக இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இருந்து தற்போதைய காலம் வரை இந்திய ஒன்றிய அரசு இவ்வாறு செயல்பட்டு வருவதால் மேலும் முன்னேற்ற பாதையில் செல்லக்கூடிய தமிழ்நாட்டை இந்திய ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த அளவிற்கு வஞ்சிக்க முடியுமோ அந்த அளவிற்கு, எட்டுக் கோடிக்கும் அதிகமான மக்களையும் ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சிக்கிறது.
மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடாது
இது போன்று தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதற்குக் காரணம் ஒழிக்க முற்படுவதற்குக் காரணம் மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடாது என்னும் நோக்கத்தில் நம்மை வழி நடத்திய முற்போக்குத் தலை வர்களான இரட்டைமலை சீனி வாசன், அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் இன்றைய தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் ஆகியோர்மீது அவர்களுக்குள்ள வெறுப்புணர்வே ஆகும்.
மாநில உரிமைகளுக்காகப் போராடியது மட்டுமல்லாமல் மக்களையும் அப்போராட்டக் களத்தில் சந்திப்பவர்கள் நம் தலைவர்கள்.
தமிழ்நாட்டு மக்களும் இந்த முற்போக்குத் தலைவர்களின் தலைமையினை ஏற்று பின் தொடர்ந்து வருகிறார்கள். ஆகவே தான் இந்த ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. நாம் மாநில உரிமைக்காக “உரிமைக்குக் குரல் கொடுப்போம். மாநில உரிமைகளைக் காப்போம்” என்று தம் உரையை நிறைவு செய்தார்கள்.