நாக்பூரில் இருந்து வரலாறு எழுதப்படாது: கனிமொழி
தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே கூறியதை சுட்டிக்காட்டி, வரலாறு நாக்பூரில் எழுதப்படவில்லை என கனிமொழி சாடியுள்ளார். தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் செழித்து வளரும் மொழி எனவும், சமஸ்கிருதம் போல் பாஜகவின் பிரச்சாரத்தால் ஆதரிக்கப்படும் மொழி அல்ல எனவும் அவர் விமர்சித்துள்ளார். பாஜகவின் பொய்களை விடவும் தமிழ் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏழுமலையானா? யானையா?
திருப்பதி செல்வோருக்கு எச்சரிக்கை!
திருப்பதி திருமலை மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. நேற்று முன்தினம் காலை முதலாவது மலைப்பாதையில் 7ஆவது மைல் அருகே யானைக்கூட்டம் தென்பட்டது. அதனை காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர், பக்தர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி ஒளிப்படம் எடுப்பது, விலங்குகளை துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர்.
டில்லி மக்களை
மோடி ஏமாற்றி விட்டார்…
ஆம் ஆத்மி தாக்கு
டில்லி மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மேனாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி மூத்தத் தலைவருமான அதிஷி, தேர்தலின்போது பாஜக வென்றால் பெண்களின் வங்கிக் கணக்கில் மார்ச் 8ஆம் தேதி ரூ.2,500 உதவித் தொகை வரவு வைக்கப்படுமென மோடி கூறினார். ஆனால் அதற்கு மாறாக இன்று வரை பதிவு கூட தொடங்கப்படவில்லை என்றும் சாடினார்.
ஒடிசா: 10 ஆண்டுகளில்
118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர்
ஒடிசாவில் கடந்த 10 ஆண்டுகளில் 118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து 315 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 238 பேர் சரண் அடைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?
நாடாளுமன்றத்தில் உள்ள பல்வேறு மாநில எம்பிக்கள், அவரவர் தாய் மொழிகளை பேசுபவர்கள் ஆவர். இதனால் அவர்கள், நாடாளுமன்றத்தில் தங்களது தாய்மொழியில் கேள்வி எழுப்பி, பதிலை பெற மொழி பெயர்ப்பு வசதி உள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, அசாமி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்பூரி, உருது, சமஸ்கிருதம் ஆகியவை அந்த மொழிகள் ஆகும்.