இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இப்போது விவாதிக்கப்படும் ஒரு பிரச்சினை என்றால், அது நடக்கப்போகும் தொகுதி மறுவரையறைதான். 1971-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில், 1978-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகுதி வரையறை 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று அப்போதே சட்டமும் நிறைவேற் றப்பட்டது. அந்த கணக்குப்படி தமிழ் நாட்டில் 39 எம்.பி.க்களும், புதுச்சேரியில் ஒரு உறுப்பினரும் இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் 2001-ஆம் ஆண்டுக்கு பிறகு தொகுதி வரை யறையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அப்போதே தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம், ‘நாங்கள் எல்லாம் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் பெரும் வெற்றி கண்டிருப்பதால் இப்போது அதன் அடிப்படையில் தொகுதி வரையறை செய்தால், எங்கள் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும்’ என்று முறையிட்டனர். இந்த கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட வாஜ்பாய் தொகுதி வரையறையை 2026-ம் ஆண்டு வரை தள்ளி வைக்கும் வகையில், சட்டத்திருத்தம் நிறைவேற்றினார். அதனால்தான் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இதுவரை 543 ஆகவே நிலைத்து இருக்கிறது.
கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. அதில் மக்களவை இருக்கைகள் 888 இருந்தது. இதற்கு காரணமாக எதிர்காலத்தில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தகவல் கூறப்பட்டது. அதாவது கொரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவும், அதன் அடிப்படையில் அடுத்த 2026-ஆம் ஆண்டு தொகுதி வரையறை மேற்கொள்ளவும் மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டால் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறமையாக நிறைவேற்றி மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும். அதே வேளையில், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சரிவர நிறைவேற்ற தவறியதால் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற பல மாநிலங்களுக்கு எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இந்த எதிர்ப்பின் முதல் குரலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒலித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் 58 தலைவர்கள் கலந்துகொண்டு, தொகுதி மறுவரையறையை இன்னும் 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கவேண்டும், தொகுதி மறுவரையறை தொடர்பாக தென் மாநிலங்களின் எம்.பி.க்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைக்கவேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சென்னையில் 22-ஆம் தேதி கூட்டுக்குழு ஆலோசனை நடத்த
6 மாநில முதல் மந்திரிகளுக்கும் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தொகுதி மறுவரையறை பிரச்சினைக்கு அமெரிக்கா, அனைத்து நாடுகளுக்கும் நல்ல விடையை தந்து இருக்கிறது. அங்கு கடந்த 112 ஆண்டுகளில் 4 மடங்கு மக்கள்தொகை அதிகரித்து இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் மாற்றப்படவே இல்லை. அதே உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் தொடர்கிறது. இந்த தத்துவத்தை இந்தியாவும் பின்பற்றினால் எந்த மாநிலத்துக்கும், எந்த பாதிப்பும் வராது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.
நன்றி: ‘தினத்தந்தி’ தலையங்கம் – 12.3.2025