சென்னை, மார்ச் 12- கல்வியில் அரசியல் செய்யும் ஒன்றிய அரசை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தார்
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் 10.3.2025 அன்று வெளியிட்ட பதிவு:
நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் பேசியதற்கு, பதிலளித்து ஒன்றிய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதைக் கண்டிக்கிறோம். என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது பேச சொல்வதைப் பேசுகிறாரா? கல்வியில் அரசியல் செய்யும் ஒன்றிய அரசை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். மாணவா்களும், ஆசிரியா்களும் இந்த துரோகத்தை மறக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி காட்டுதலின்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் நடத்தும் போராட்டம் கல்விக்கானது. மாநில மக்களின் உரிமைக்கானது. அது வெல்லும். எங்களைப் பொறுத்தவரை அது ஆா்எஸ்எஸ் கல்விக் கொள்கை. அதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்று அதில் தெரிவித்துள்ளார்.