முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
சென்னை, மார்ச் 12- தொகுதி மறு வரையறை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க வரும்படி கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
தொகுதி வரையறை விவகாரம்
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை விவகாரம் குறித்து கடந்த 5ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் முறையாக அழைப்பு விடுக்கப் படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி மேற்கு வங்கம், ஒடிசா, கருநாடகா உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுக்கும் 29 கட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அதில் வருகிற 22ஆம் தேதி (சனிக்கிழமை) ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
இதில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்ற குறிப்பிட்டு இருந்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அழைப்பு கடிதத்தை 7 மாநில முதலமைச்சர்களுக்கும் நேரில் சென்று வழங்கு வதற்காக தி.மு.க. சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன.
நவீன் பட்நாயக்
அதன்படி ஒடிசா மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் நேரில் சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தனர்.
ஜெகன்மோகன்
ஆந்திர மேனாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி ஆகியோர் சந்தித்து கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புக் கடிதம் கொடுத்தனர்.
சித்தராமையா
அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் பெங்களூருவில் இன்று (12.3.2025) கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்புக் கடிதத்தைக் கொடுத்து கூட்டத்தில் கலந்துகொள்ள வரும்படி அழைப்பு விடுத்தனர்.