வள்ளலார் மக்கள் இயக்கம் சார்பில் வடலூரில் 7.7.2023 அன்று மக்கள் பெருந்திரள் மாநாடு நடைபெற்றது. சனாதன எதிர்ப்பே சன்மார்க்க நெறி என்பதே கூட்டத்தின் தலைப்பு.
திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் வடலூர்க்காரர் என்பதனால் எல்லா ஏற்பாடுகளையும் முன் நின்று செய்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லலாம். சன்மார்க்க அன்பர்கள் நடத்திய ஒரு விழாவில் இத்தனை பெரியார் தொண்டர்கள் கலந்து கொண்ட நிகழ்வு இதுவரை நாம் காணாத ஒன்று. “இது வடலூரா அல்லது கடலூரா?” என்று பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் கேட்கும் அளவிற்கு கூட்டம் அலைமோதியது என்றால் அதற்குக் காரணம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இளைஞர்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி மேடைக்கு வருவதற்கே வழி இல்லாத அளவிற்கு கூட்டம் என்றால், எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் வாகனத்தை விட்டு இறங்கவே வழி இல்லை. பெருங் கூட்டத்திற்கிடையில் மேடை ஏறவே 15 நிமிடங்கள் பிடித்தது.
முன்னதாகவே சிபிஅய், சிபிஎம், மதிமுக, விசிக, மக்கள் அதிகாரம், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் பேசி முடித்து விட்டனர். வள்ளலாரைத் தூக்கிப்பிடித்தும், ஆளுநர், தீட்சிதர் கூட்டணியை இடித்துரைத்தும் கூட்டத்தைக் கட்டுக்குள் வைத்தனர். சிபிஎம் தோழர் ரமேஷ்பாபு, மக்கள் அதிகாரம் பொதுச்செயலாளர் ராஜு, வழக்குரைஞர் அருள்மொழி, பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோரின் உரை சனாதனத்தின் தலையில் சம்மட்டியை இறக்கியது. ஆரம்பத்தில் மழையூர் சதாசிவம் சன்மார்க்க நெறி பாடல்களைக் கொண்டு இசைக்கச்சேரி நடத்தினார். இவ்வளவு நெருக்கடியிலும் மதிமுக நகர செயலாளர் ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்க வேலையைச் சரியாக செய்து கொண்டி ருந்தார். சிறிய மேடையில் திருமாவளவனும், ஆசிரியரும் எழுச்சி உரையாற்றினர். ஆனால் சனாதன எதிர்ப்பை கச்சிதமாக மக்கள் மனதில் விதைத்தனர். அழைப்பிதழிலோ, விளம்பரங்களிலோ எங்கேயும் தன் பெயரை போட்டுக் கொள்ளாமல் எல்லா தரப்பு மக்களின் ஒத்துழைப்போடும் வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி முடித்த கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
– சமத்துவ மணி, சென்னை
பெரியார் உலகை ஆளுகிறார்….
[9-7-2023 மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைமை கழக சொற்பொழிவாளர் கவிஞர் ஜீவா தெரிவித்த கருத்து]
இரண்டு மாதங்களுக்கு முன்பு நேபாளத்திற்கு பயணம் சென்று காட்மாண்டில் விடுதியில் தங்கியிருந்த போது லேசாக நெஞ்சில் வலி ஏற்பட்டு விடுதி மேலாளரிடம் கேட்டு தமிழ் தெரிந்த மருத்துவரிடம் செல்ல அவர் சில மருந்துகளை கொடுத்து சரியாகி விடும் என்ற சொல்லைக் கேட்டு திரும்பும்போது மருத்துவரின் மேஜையை இரண்டு படங்கள் அலங்கரிப்பதைப் பார்த்து. ஆச்சரியப்பட்டேன். அப்படங்கள் ஒருபக்கம் சீனத் தலைவரின் படம் மற்றொன்று தந்தை பெரியார் படம். என்ன டாக்டர் பெரியார் படத்தை வைத்திருக்கிறீர்களே என கேட்டபோது அவர் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த எனக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது பெரியாரின் உழைப்பால் அதன் காரணமாகத்தான் இன்று நான் டாக்டர். என்று நன்றியுணர்ச்சியோடு கூறினார்.
– வே.செல்வம், தலைமை கழக அமைப்பாளர்
வாழ்த்த வயது தடையில்லை
கடந்த ஜூலை 2ஆம் தேதி சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 101ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு பொத்தனூர் சென்றிருந்தேன். வைக்கம், சேரன் மாதேவி, கலைஞர் நூற்றாண்டு தொடர் நிகழ்ச்சிகள் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 2 மணி வரை தொடர்ந்து சிறப்பாக நடந்தது.
மேடையில் இருந்தவர்கள் உடலை அடிக்கடி சரி செய்தபடி உட்கார்ந்து இருந்தார்கள். ஆனால், க.சண்முகம் அவர்கள் மூன்றரை மணி நேரமும் நமது ஆசிரியர் அவர்கள் மாதிரியே ஒரே நிலையில் உட்கார்ந்து இருந்ததை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவரால் பயன் பட்டவர்கள், அவரால் பண்பட்டவர்கள் உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை என்று கூறி சால்வை, புத்தகம், மலர் மாலை வழங்கியதோட சிலர் அன்பின் மிகுதியால் உணர்ச்சி வயப்பட்டனர். வாழ்த்துவதற்கு வயதோ, வசதியோ தடையில்லை என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூற்றுப்படி நானும் அவரை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
திராவிடர் கழகத்தின் முன்னோடிகளில் அதிக ஆண்டு வாழ்ந்தவர் என்ற பெருமையை நிச்சயமாக க.ச அய்யா அவர்கள் பெறுவார் என்பது உறுதி.
– ஓமலூர் பெ.சவுந்திரராசன்