அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசுகையில், மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் – நீட் தகுதி பெற்றவர்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்த மாணவர்கள் கூட மிகவும் தகுதி குறைந்தவர்களாக இருப்பதாக தன்னிடம் கூறியதாகப் புலம்பினார்.
இந்த சிக்கல்களைத் தீர்க்க அசாம், மாநில அரசு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த விவகாரத்தை ஆராய சிறப்புக் குழுவை நியமித்திருந்தது. அரசின் அறிக்கையின்படி, நீட் தேர்வு மய்யங்கள் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் உள்ளன, அரசுப் பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் இல்லை. இது தேர்வு செயல்முறையின் நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
1. நீட் தேர்வு மய்யங்களை அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டுமே வரையறுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும், இதனால் தேர்வு நியாயமாகவும் பொறுப்புடனும் நடைபெறும். 2. மாவட்ட அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு – அசாம் அரசு, தேசிய தேர்வு முகமை மற்றும் கல்வி அமைச்சகத்திடம், நீட் மய்யங்களை மாவட்ட ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வருமாறு கோரிக்கை விடுக்கும்.
3. கட்டாய பயோமெட்ரிக் சரிபார்ப்பு – மாற்று நபர்கள் தேர்வு எழுதுவதையும், மோசடிகளையும் தவிர்க்கும் பொருட்டு, தேர்வு அரங்குகளுக்குள் நுழைவதற்கு முன் வாயில்களில் பயோமெட்ரிக் சரிபார்ப்பை நடத்த வேண்டும் என்று அரசு கோரும்.
முதலமைச்சர் கூறுகையில், ‘‘அசாம் தலைமைச் செயலாளருக்கு இந்த முடிவுகளை தேர்வு முகமை பொது இயக்குநர் மற்றும் ஒன்றிய கல்வி செயலாளருக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தாமே ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து இந்த சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கவுள்ளார்.
அசாம் அமைச்சரவை, அசாம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விதிகள் 2017-இன் கீழ் சேர்க்கைகளில்உள்ள ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இது 2025-2026 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். மேலும், மாநில அரசு, மந்த சங்கரதேவ சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும். இந்த திருத்தம், புதிய செவிலியர், பல் மருத்துவம், மருந்தியல் அல்லது சுகாதார நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன், உள்துறையிடமிருந்து தேசிய பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தும். அத்துடன், இந்த நிறுவனங்கள் மதச்சார்பற்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் மற்றும் மத மாற்றங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அசாம் அரசு, மாநிலத்தில் வேகமாக அதிகரித்து வரும் தனியார் பயிற்சி மய்யங்களை ஒழுங்குபடுத்துவதன் அவசியத்தையும் உணர்ந்துள்ளது. இதற்காக, தனியார் பயிற்சி நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை, நெறிமுறை நடத்தை மற்றும் தரமான கல்வியை உறுதி செய்ய, நடப்பு நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் ஒரு புதிய மசோதாவை அரசு கொண்டு வரும்’’ என்று கூறினார்.
‘நீட்’ தேர்வுதான் தகுதி – திறமைக்குத் சரியான அளவுகோல் என்று அடம் பிடிக்கும் மே(ல்) தாவிகள் அசாம் பிஜேபி முதலமைச்சர் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறுவோர் திறமையானவர்கள், தகுதி மிக்கோர் என்று கூறுவது எல்லாம் மாய்மாலம் என்று போட்டு உடைத்திருக்கிறாரே – இதற்கு என்ன பதில்? ஏன் இன்றைய பிரதமர் – குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ‘நீட்’ தேர்வை ஏற்க மறுத்தவர்தானே.
‘நீட்’டை எதிர்க்கும் அசாம் மாநில முதலமைச்சர் ‘நீட்’டைப் புறக்கணிக்க வேண்டும் என்பது குறித்து அழுத்தம் காட்டாமல் ‘நீட்’ தேர்வுக்குப் பயிற்சி அளிப்பது நீட் தேர்வை எங்கே நடத்துவது குறித்து எல்லாம் வெண்டைக்காய் விளக்கெண்ணெய் யோசனைகளைக் கூறுவது – பிஜேபி முதலமைச்சர் என்ற காரணத்துக்காக ஏதேதோ சொல்லி சொதப்புவது தான் வேடிக்கையும் இரட்டை வேடமும் ஆகும்.
எந்த வகையில் பார்த்தாலும் ‘நீட்’ தேர்வு என்பது சமூகநீதிக்குக் குழி தோண்டும் பார்ப்பன சதியே என்பதில் இன்னொருப் பொருளுக்கு இடம் இல்லை – இல்லவே இல்லை – இதற்கொரு தீர்வுதான் முக்கியம்.