சென்னை, மார்ச் 11 தொண்டறத் தாய் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா காலை நிகழ்வுகளின் தொடர் நிகழ்வாக 10.3.2025 அன்று மாலை 7 மணியளவில் சென்னை – பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் ‘போர்க்குணம் மிக்க அன்னையார்’ என்கின்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
கருத்தரங்கில் திராவிடர் கழக மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை வரவேற்புரையாற்றினார். கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி தலைமை வகித்துப் பேசினார். புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம், வை. கலையரசன், மு.இரா. மாணிக்கம் முன்னிலை வகித்தனர். கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினர்.
தமிழர் தலைவர்
அன்னை மணியம்மையார் குறித்துப் பல்வேறு வரலாற்றுச் செய்திகளை வெளிக் கொணர்ந்த சிறப்பு மிக்க இக்கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிங்கப்பூரில் இருந்து காணொலி வாயிலாக உருக்கமாக உணர்ச்சிப் பேருரையாற்றினார்.
தமிழர் தலைவர் சிறப்புரையாற்றுகையில்,
‘‘பொதுத் தொண்டாற்றும் பணிகளில் மானம், அவமானம் பாராதே, நேரம், காலம் வேண்டுமென்று காத்திருக்காதே என்கின்ற பால பாடத்தை வகுத்துத் தந்தவர் தந்தை பெரியார்.
அன்னை மணியம்மையார் பல பரிமாணங்கள், குணநலன்கள், பண்புகள் உடையவர். எதிர்ப்பு என்று வரும்போதுதான் முழு மணியம்மையார் அவர்களைக் காண முடியும்.
ஆண்கள் ஆதிக்கம் மிகுந்துள்ள பொது வாழ்வுப் பணிகளில் பெண்கள் ஈடுபடுவது எளிதானதல்ல. அசாத்திய துணிவோடு தொண்டற உணர்வோடு, பொது வாழ்வில் ஈடுபட்ட அன்னை மணியம்மையார் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் உண்டு. அவதூறுகள், கேலிப் பேச்சுகள், ஏச்சுகளைப் புறந்தள்ளி, பொருட்படுத்தாது, கவலைப்படாது பணி செய்தவர் அன்னை மணியம்மையார்.
தந்தை பெரியாருக்குத் தொண்டு செய்வதைவிட வேறு பணி எனக்கில்லை என்று வாழ்ந்தவர். தந்தை பெரியாரை 100 ஆண்டுகள் வாழ வைப்பதொன்றே தனது இலக்கு என்றவர் – ‘‘அதில் நான் தோற்றுப் போய் விட்டேன்’’ என்று நெஞ்சுருகிக் குறிப்பிட்டதும் உண்டு.
‘தூற்றியவர்கள் போற்றுகின்றார்கள்’’ என்னும் அளவுக்கு வரலாற்றைப் படைத்தவர் அன்னை மணியம்மையார், பொது வாழ்வுப் பணிகளில் இவரைவிட சிறந்த எடுத்துக்காட்டுக்குரியவர் எவரும் இல்லை என நெஞ்சு நிமிர்த்திக் கூறலாம்’’ என்று குறிப்பிட்டு பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார்.
கவிஞர் கலி. பூங்குன்றன்
தொடர்ந்து சிதம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையாற்றுகையில்,
‘‘பெரியார் திடல் – ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு. ஒரு காலத்தில் டிராம்ெஷட் ஆக இருந்த இந்த இடம் தந்தை பெரியாருக்கென்று, அவரிடம் கேட்காமலேயே ஜி.டி. நாயுடு அவர்கள் வாங்கினார்.
அந்தத் தொகையினைக் கேட்டு தந்தை பெரியார் மிகவும் தயங்கிய போதும், சி.பா. ஆதித்தனார் இரண்டு மடங்கு தருவதாக தந்தை பெரியாரிடம் கூறிய நிலையிலும் அன்னையார் அவர்கள் அதில் தலையிட்டுத் தடுத்து அவரால் காப்பாற்றிக் கொடுக்கப்பட்ட இடம்தான் இந்தப் பெரியார் திடல்.
நெருக்கடி நிலை காலத்தில் இயக்கத்தை தனது துணிச்சல் மிக்க போர்க் குணத்தோடு, அச்சுறுத்தல் பலவற்றுக்குப் பணியாமல் நடத்திய வீரம் மிக்கத் தலைமை அவருடையது. இயக்கத்தை, ‘விடுதலை’ ஏட்டை, நிறுவனங்களை பல்வேறு நெருக்கடிகளில் இருந்து மீட்டுக் காத்த சிறப்புக்குரியவர் அன்னையார் அவர்கள்.
அதனை மேலும் சிறப்புடன் வளர்த்து நம்மை வழி நடத்தி வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அடையாளப்படுத்தி, நமக்குத் தந்த அந்தப் பெருமையும் அன்னையாருக்கு உண்டு’’ என்று குறிப்பிட்டு உரையாற்றினர்.
பங்கேற்்றோர்
திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, புதுமை இலக்கியத் தென்றல், பகுத்தறிவு இலக்கிய அணி ஆகியன சார்பில் இந்த சிறப்புக் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
கழக வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் வி.சி.வில்வம், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேசு, சி. வெற்றிச்செல்வி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், இறைவி, த. மரகதமணி, செ.பெ. தொண்டறம், கி. இராமலிங்கம், கோ. தங்கமணி, அயன்புரம் சு.துரைராசு, ப. கோபாலகிருஷ்ணன், ச. இராசேந்திரன், சி. பாசுகர், சி.காமராசு, நா. பார்த்திபன், வழக்குரைஞர் மு. வேலவன், சா. தாமோதரன், கரு. அண்ணாமலை, எம்.ஜி.ஆர். நகர் கண்ணன், உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன் துரை. முத்துகிருஷ்ணன், பூவை தமிழ்ச்செல்வன், சு. மோகன்ராசு, பெ. செல்வராசு, தென்மாறன், ஜெ. ஜனார்த்தனம், மாணவர் கழகத் தோழர் சஞ்சய் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், பெருமளவில் மகளிரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிறைவாக தங்க. தனலட்சுமி நன்றி கூறினார்.