சென்னை, மார்ச் 10- மதிமுக சார்பில் மகளிர் நாள் கொண்டாட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் 8.3.2025 அன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார். பெண் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:திராவிடத்திற்கு ஆபத்தாக தற்போதைய இந்துத்துவா சக்திகளை பாஜ வளர்த்து வருகிறது. எனவேதான் திராவிடத்தை காப்பதற்காக மதிமுக என்றென்றும் திமுகவோடு துணை நிற்கும்.
இமயமலையை கூட நகர்த்தி விடலாம், ஆனால் திமுகவை என்றும் அழித்து விட முடியாது. புதியதாக கட்சியை தொடங்கியவர்கள் முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் போன்ற மக்கள் நல பிரச்சினைகள் ஏதாவது ஒன்றுக்காவது குரல் கொடுத்தது உண்டா? இப்படிப்பட்டவர் எடுத்த எடுப்பிலேயே முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், வைகோ மனைவி ரேணுகா தேவி, மகளிர் அணி மாநில செயலாளர் மல்லிகா தயாளன், முதன்மை செயலாளர் துரை வைகோ, துணை பொது செயலாளர்கள் மல்லை சத்யா, டாக்டர் ரொகையா, அமைப்புச் செயலாளர் வந்திய தேவன், மாவட்ட செயலாளர்கள் கே.கழகக்குமார், சைதை சுப்ரமணியன், மாவை மகேந்திரன், டி.சி.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.