வயிற்றில் அதிக ஹைடிரோகுளோரிக் அமிலம் சுரந்து வயிற்றின் உட்பக்கச் சுவரை அரிப்பதால் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. இந்நோய் மனக் குழப்பங்கள், வேதனைகள் அதிகமாக இருப்பதாலும், சத்துகள் குறைந்த உணவு சாப்பிடுவதாலும், வேலைப்பளு மிக அதிகமாக இருப்பதாலும் ஏற்படலாம்.
வயிற்றுப் புண்ணின் அறிகுறியானது மேல் நடு வயிற்றில் சகிக்க முடியாத வலி, இது எரிச்சல் தன்மையைக் கொண்டிருக்கும். இந்த வலியானது உட்கொண்ட உணவின் அளவுத் தன்மையைப் பொறுத்து விட்டு விட்டு வரும். உடல் எடை குறைவு, நெஞ்சு எரிச்சல், வாந்தி ஆகியவை தோன்றும். சில நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல், அபாயக் கட்டத்தை அடைய நேரிடலாம்.
உணவில் கவனிக்க வேண்டியவை
• ஒரே வேளையில் அதிகமாக உண்பதைத் தவிர்த்துச் சிறிது சிறிதாக அதிகத் தடவைகள் உணவை உண்ண வேண்டும்.
• மசாலா/ வாசனைப் பொருட்கள், தாளிப்பது, இனிப்புகள் மற்றும் கார வகைகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை மட்டும் வேண்டுமானால் சிறிதளவு சேர்க்கலாம்.
• உணவு முற்றிலும் மிருதுவாக இருக்க வேண்டும்.
• எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
சிகிச்சை உணவு
வயிற்றுப்புண் சிறிது குணமான மூன்றாவது நிலையில் உணவின் அளவைச் சிறிது அதிகரிப்பதுடன் நார்ச்சத்தையும் சிறிது அதிகரிக்கலாம். வேறு சில உணவுகளையும் தேர்ந்தெடுத்து அதிகப்படுத்தலாம். சிறிதளவு மசாலா / வாசனைப் பொருட்களை நோயாளியின் விருப்பத்திற்கேற்பச் சேர்த்துச் சில மாற்றங்களைச் செய்யலாம். நிறைய புண்ணால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிறு சிறு இடைவெளிவிட்டு பலமுறை உணவு கொடுக்க வேண்டும். ஒரு நாளில் ஆறு நேர உணவு என்ற முறைப்படி இரண்டு மணி நேர இடைவெளிவிட்டுத் தரலாம்.
இந்த உணவுகள் புண்ணான வயிற்றை எந்த வகையிலும் பாதிக்காது. நார் மற்றும் அமிலப் பொருட்கள் இவற்றில் ஒதுக்கப்பட்டுள்ளன. பால் வயிற்றுப் புண்ணை ஆற்ற உதவும். பாலை நோயாளிகளுக்குச் சலிப்பு ஏற்படாதபடி எல்லா வகையிலும் சேர்க்கலாம். வேக வைக்காத பச்சைக் காய்கறிகளைச் சேர்க்க வேண்டாம். காய்கறிகளை வேக வைத்து, மசித்து, நாரை நீக்கிச் சேர்க்க வேண்டும். பழச்சாறுகள் சேர்க்கப்படவேண்டும்.
2ஆவது நிலையில் சேர்க்கப்பட்டுள்ள உணவானது பாதி திரவத்திலிருந்து மிருதுவான நிலையில் உள்ளது. மசாலா / வாசனை பொருட்கள் எதுவும் சேர்க்கப்படவேண்டாம். ஆனால் 3ஆவது நிலையில் அதிக அளவு திட உணவு சேர்க்க வேண்டும். ஆனால், பச்சைக் காய்கறிகளை ஒதுக்க வேண்டும்.
வயிற்றுப்போக்குக்கான உணவு
வயிற்றுப் போக்கு ஏற்படும் போது மலம் சாதாரணமாக இல்லாமல் அதிக நீராக அடிக்கடி போகும். சுமாரான வயிற்றுப் போக்கின் போது அதிகத் தண்ணீருடன் கூடிய மலம் கழிவதுடன் வயிற்றுவலி, சோர்வு, காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகியவையும் ஏற்படும்.
அத்தகைய வயிற்றுப் போக்கானது இரண்டு வாரங்களுக்கு மேல் விடாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் உடலிலிருந்து அதிகமான சத்துகள் வெளியாவதால் சத்துக் குறை நோய்களும் உண்டாகலாம். சத்துகள் அதிக நேரம் வயிற்றில் தங்கி உறிஞ்சப்பட நேரம் இல்லாததுதான் இதற்குக் காரணம்.
ஒரு லிட்டர் சுத்தமான, கொதித்து ஆறிய நீரில் அரை தேக்கரண்டி, உப்பும், அய்ந்து தேக்கரண்டி சர்க்கரையும் கலந்து அந்நீரை அடிக்கடி குடிக்க வேண்டும். (இதுவே ஓஆர்எஸ் என்பது.)
உடலிலிருந்து நீர், தாது உப்புகள், உடல் தசைப் புரதம் ஆகியவற்றின் இழப்பு வயிற்றுப் போக்கின் போது மிகவும் அதிகமாக இருக்கும். உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரைச் சரிகட்ட குறைந்த இடைவெளியில் அதிக அளவு நீரை உட்கொள்ளுவது மிக மிக அவசியம். குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் அதிக நீரைக் கொடுப்பது மிகவும் அவசியம். தேவையானால் குழாய் மூலமும் திரவ உணவைக் கொடுக்க வேண்டும். மேலும் பால், அதிக கொழுப்பு, அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
அப்பொழுது இழந்த சோடியம், பொட்டாசியம் ஆகிய உப்புகள் கிட்டும். நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் சேர்க்கப்பட வேண்டும். நோயாளி வயிற்றுப் போக்கிலிருந்து விடுபட்டவுடன் மிருதுவான அதிகக் காரம், உப்பு, புளிப்பு இல்லாத உணவுகளை அதிகமாகச் சேர்க்க வேண்டும். மெல்ல மெல்ல சாதாரண உணவுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.