திண்டுக்கல்,மார்ச் 10- திண்டுக்கல் மாவட்டம் பில்லநாயக்கன்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் மம்ப்ஸ் (MUMPS) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பில்லநாயக்கன்பட்டி கிராமத்தை நேரில் பார்வையிட்டு மருத்துவ முகாம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நோய் பரவல்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மம்ப்ஸ் என்னும் பொன்னுக்கு வீங்கி நோய் பரவல் அதிகரித்து வருகிறது. கிராமங்கள், நகரங்கள் என்று அனைத்து பகுதிகளிலும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இந்த நோய் பரவல் அதிகரித்து வந்தது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகே உள்ள பில்லநாயக்கன்பட்டி கிராமத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் அதிகமான குழந்தைகள் மம்ப்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என்று ஒரே தெருவில் 10க்கும் அதிகமானோருக்கு இந்த பாதிப்பு இருந்தது. இதனை பெற்றோர் அம்மை பாதிப்பு, கன்னத்து அம்மை பாதிப்பு என்று கருதி சாதாரணமாக வேப்பிலை, மஞ்சள் அரைத்து கன்னத்தில் தடவி மருத்துவமனைக்கு செல்லாமல் தவிர்த்து வந்தனர். ஒரே பள்ளியில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட முறையான சிகிச்சை எடுப்பதை தவிர்த்து வந்துள்ளனர்.
மருத்துவ முகாம்
காற்றில் எளிதாக பரவக்கூடிய மம்ப்ஸ் நோய், ஒருவருக்கு வந்தால் அவர்களின் காதுக்கு முன்பாக இருபுறமும் உமிழ்நீர் சுரப்பியின் வீக்கமே அறிகுறியாகும். காதுக்கு கீழே வலி ஏற்படும்,
அதேபோல் காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்டவை ஏற்படும். ஒருவர் மூலமாக 12 பேருக்கு பரவக்கூடியது இந்த மம்ப்ஸ் நோய்.
மாவட்ட சுகாதாரத்துறை சார்பாக கிராமத்தை நேரில் பார்வையிட்டு மருத்துவ முகாம் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.