‘‘தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹிந்தியை விட நடைமுறை பயன்கள் அதிகம் உள்ள ஆங்கிலம், இந்தியாவின் இணைப்பு மொழியாக நீடிக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த குளோபல் டேட்டா லேப் (Global Data Lab) என்னும் நிறுவனம், மொழிகள் தொடர்பான ஆய்வ றிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஹிந்தி பேசாத மாநி லங்களை சேர்ந்தவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்க அதிக விருப்பம் உள்ளவர்களாக இருப்பதாகவும், அதே நேரத்தில் ஹிந்தி பேசுபவர்கள் கூடுதல் மொழியை கற்பதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1991-இல் தமிழ்நாட்டில் 14.5 சதவீத மக்கள் தமிழுடன் கூடுத லாக ஒரு மொழியை பேசுபவர்களாக இருந்தனர் என்றும், இது 2011-இல் 22 சதவீதமாக அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதே போல ஒடிசாவில், ஒடியா மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் 86 சதவீதத்தில் இருந்து 74.5 சதவீதமாக குறைந்தது என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் உதாரணத்திற்கு 1991-ஆம் ஆண்டு பீகாரில் 90.2 சதவீதம் பேர் ஹிந்தியை மட்டும் பேசுவதாக இருந்தனர் என்றும் 2011இல் இது 95.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ள்ளது.
ராஜஸ்தான், உ.பி., இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஹிந்தி பேசும் மக்கள் பிற மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மக்களின் மொழி தேர்வுகளை மீண்டும் ஆய்வு செய்ததில், ஹிந்தி பேசாத மாநிலங்கள் 2-ஆவது மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழ்நாட்டில், தமிழுடன், ஆங்கிலமும் தெரிந்தவர்களின் விகிதம் 1991-இல் 13.5 சதவீதமாகவும், 2011-இல் இது 18.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.’’
மேற்கண்ட ஆய்வறிக்கையில் வெளி வந்துள்ள புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன?
தாய்மொழியுடன் இன்னொரு மொழியைக் கற்பதாக இருந்தால், அது ஆங்கிலம்தான் என்பதை நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தக்க ஆய்வு மூலம் நிரூபித்துள்ளது.
இந்தியா முழுமையும் புதிய கல்வித் திட்டம் மூலம் மும்மொழிகளைப் படிக்க வேண்டும் என்று சொல்லுகிற இந்தியாவை ஆண்டு கொண்டுள்ள பிஜேபி ஆட்சி இத்தகைய ஆய்வுகள் வழியாகக் கண்களை ஒளிவு மறைவு இல்லாமல் திறந்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு மும்மொழி திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தே தீர வேண்டிய ரூ.2159 கோடி நிதியை கொடுக்க முடியும் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. ஆனால், வட மாநிலங்களில், அதிலும் குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தியைத் தவிர வேறு எந்த மொழியையும் பேசுவதில்லை, படிப்பதும் இல்லை என்ற உண்மை வெளி வந்து விட்டதே.
‘இந்து ஏடு’ வெளியிட்டுள்ள ஒரு தகவல் ஒன்றிய அரசின் இரட்டை வேட்டை நாடகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.
90 விழுக்காடு பள்ளிகளில் ஹிந்தி மட்டும் தான் கற்பிக்கப் படுகிறது என்ற உண்மை வெளி வந்து விட்டதே!
அப்படி இருக்கும் பொழுது ஹிந்தியை மட்டும் சொல்லிக் கொடுக்கும் மாநிலங்களில் ஒன்றிய பிஜேபி அரசு நிதியைக் கோடி கோடியாகக் கொட்டுவது ஏன்? மூன்றாவது மொழியை ஏற்காத தமிழ்நாட்டுக்குத் தரப்பட வேண்டிய நிதியானது. ஒரே மொழியை மட்டும் கற்பிக்கும் வட மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்றால் இது எந்த வகையில் நாணயமானது?
மொழியை வைத்துத் தமிழ்நாடு பிரிவினை வாதத்தைத் தூண்டுகிறது என்று வக்கணைப் பேசும் அரசியல் கொழுந் துகள், உண்மையிலேயே ஹிந்திக்குத்தான் முதல் பந்தி, சமஸ்கிருதத்துக்குத்தான் தடபுடல் விருந்து என்பதன் வழியாக, ஹிந்தி பேசாத மாநில மக்களிடையே பிரிவினை உணர்ச்சியைத் தூண்டுகின்றனர்.
கொலையாளியும் சரி, கொலை செய்யத் தூண்டுபவனும் சரி, சமமான குற்றவாளிகளே!
இன்றைக்கு உலகம் தழுவிய அளவில் ஒரு பெரும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தானே இருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்துக் கூறியதே – அது விஞ்ஞான மொழி என்ற காரணத்துக்காகத்தான்; நம் மொழியையும் விஞ்ஞான மயப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் கூறி வந்துள்ளார்கள்.
‘தமிழ்மொழி, ஆங்கில மொழி, இரண்டைப் பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பது தானே தவிர, தமிழ்மீது எனக்குத் தனி வெறுப்பு இல்லை’’ என்றார் தந்தை பெரியார் (‘விடுதலை’ 1.12.1970 பக்.2)
அந்த வகையில் பார்க்கப்போனால் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தாய்மொழியும் வெளித் தொடர்புக்கு ஆங்கிலமும் இருந்தாலே போதுமானதாகும். தனிப்பட்ட முறையில் ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். அதில் நாம் குறுக்கிடுவதில்லை.
முதல் தலைமுறை இரண்டாவது தலைமுறை என இப்பொழுது தான் தத்தித் தந்தி கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் பிள்ளைகளைத் திணற அடிக்கும் வகையில் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதன் பின்னணியில் பார்ப்பனீயக் குயுக்தி – தந்திரம் படம் எடுத்து ஆடுவதைப் புறந்தள்ள முடியாது.
அதுவும் சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த ஹிந்தித் திணிப்பு என்பது ஒரு வகையான பண்பாட்டுப் படையெடுப்பாகும்.
தமிழில் சமஸ்கிருத ஊடுருவலால் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலிய மொழிகள் தோன்றின என்பது மொழி யியல் அறிஞர்கள் தம் ஆய்வின் முடிவாகும்.
ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒரே ஒரு மொழியை மட்டும் பாடத் திட்டத்தில் வைப்பதுடன், மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகள் கட்டாயம் என்று நிபந்தனை வைத்து, ஒன்றிய பிஜேபி அரசு நிதி தர மறுப்பதும் பார்ப்பனீய சூழ்ச்சியே!
இதனைப் புரிந்து கொண்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசு ஹிந்தித் திணிப்பில் சற்றும் உறுதி குலையாமல் கடும் பாறையாக எதிர்த்து நிற்கிறது.
இதை மறந்து விட்டு, ஏதோ ஹிந்தி எதிர்ப்பாம் – தமிழ்நாடு எதிர்க்கிறதாம் என்ற மிதக்கும் மனப்பான்மை வேண்டாம் – அது பாம்பைப் பழுதென்று மிதிக்கும் அபாயமாகும்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!