பெரம்பலூர், மார்ச் 9- பெரம்பலூரில் ‘பெரியார் பேசுகிறார்’ என்ற தலைப்பில் ஏழாவது மாதாந்திர கூட்டமானது, மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் சிந்தனைச் செல்வன், மாவட்ட காப்பாளர் அக்ரி ஆறுமுகம், மகளிர் அணி தலைவர் மருத்துவர் குணகோமதி ஆகியோர்களின் முன்னிலையில் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் முருகானந்தம் அவர்கள் கலந்துகொண்டு அன்னை மணியம்மையாரின் சமுதாயத் தொண்டறம் பற்றி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது; அன்னை மணியம்மையார் அவர்கள் பெரியாரின் சொத்துக்காகவோ, சுகத்திற்காகவோ, ஆசைப்பட்டு இந்த இயக்கத்தில் பங்காற்றவில்லை. இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கும், பெண்கள் அடிமைத்தனத்திலி ருந்து விடுதலை பெறுவ தற்கும், வளர்ச்சிக்கும், முழுமூச்சாக பாடுபட்டவர் அன்னை மணியம்மையார்.
30 ஆண்டுகாலம் தன்னுடைய இளமையையே அர்ப்பணித்து பெரியாரின் உடல் நலத்தையும், பெரியார் சொத்துக்கள் உள்ளிட்ட பெரியார் திடலையும் இயக்கத் தோழர்கள் வந்து செல்வதற்கும், இயக்கப் பணிகள் நடைபெறுவதற்கும் பெரியார் திடலை காப்பாற்றி, இந்த திராவிடர் இனத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்றால் அது அன்னை மணியம்மையாரையே சாரும் என்று சொல்லி ஒப்புதல் வாக்கு மூலமே அறிஞர் அண்ணா கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நமது ஆசிரியர் கி.வீரமணி அவர்களே சொல்லியிருக்கிறார்,
இந்த நாட்டில் பொன்னையும், புகழையும், பதவியையும் தியாகம் செய்யலாம். ஆனால் அன்னை மணியம்மையார் என்பவர் பெரியாருக்காகவும், இந்த திராவிடர் இயக்கத்திற்காகவும் தன்னுடைய இளமை காலங்களையே தியாகம் செய்தவர்.
ஆனால் அது கூட ஒரு பெரிய விஷயம் இல்லை. அன்னை மணியம்மையார் தன் மானத்தையும் தியாகம் செய்தவர் என்றும், தன் மானத்தை விட இனமானம் பெரிது, பொதுத் தொண்டுக்கு வருபவர்கள் மானம் பாராது உழைக்க வேண்டும் என்று – பெரியார் வகுத்துக் கொடுத்த இலக்கணத்தின் படி வாழ்ந்து சாதித்து காட்டியவர் அன்னை மணியம்மையார் ஆவார் என்றும் சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் விசயேந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி, மாவட்ட துணை செயலாளர் சரவணன், பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் நடராசன், செயலாளர் மருத்துவர் லகாந்தி, வேப்பந்தட்டை ஒன்றிய அமைப்பாளர் சர்புதீன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.