பெரம்பலூர், மார்ச்9- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.3. 2025 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் பெரம்பலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்க, காப்பாளர் அக்ரி.ந. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இரா.அரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மு.விஜயேந்திரன் கடவுள் மறுப்பு கூறினார்.
மாவட்டத் தலைவர் சி. தங்கராசு அனைவரையும் வர வேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் கூட்டத்தின் நோக்கங் களை விளக்கி தொடக்க உரையாற்றியதற்கு பின்னால் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் திராவிடர் கழகத்தினுடைய சிறப்புகளையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விரும்பும் வகையில் இயக்க செயல்பாடுகள் அமைய வேண்டியது அவசியம் குறித்தும் இந்த காலகட்டத்தில் மிகுந்த எழுச்சியோடு இயக்கத்தில் புதிய இளைஞர்களை இணைப்பது குறித்தும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை அதிகமாக நடத்துவது குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட ப.க. தலைவர் பெ நடராஜன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு தீர்மா னங்களை ஏற்று சிறப்பாக செயல்படுத்துவதென தீர்மானிக் கப்படுகிறது.
மும்மொழிக் கொள்கையை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. கல்வி வளர்ச்சிக்கு தமிழ்நாட்டிற்கு நிதியளிக்க மறுக்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
பெரம்பலூர்மாவட்டத்தில் புதிய கிளைக் கழகங்களை உருவாக்குவதெனவும், ஒன்றிய, நகரங்களில் தெருமுனைக்கூட்டங்கள் நடந்திடுவதெனவும், கிளைக் கழகங்கள் தோறும் கழகக் கொடியேற்றுவதெனவும் ஒருமனதாக முடிவு செய்யப்படுகிறது.
தமிழர் தலைவரின் பெரும் முயற்சியில் உருவாகி வரும் பெரியார் உலகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெருமளவு நிதி திரட்டி அளிப்பதெனவும் இனமான ஏடு விடுதலைக்கு சந்தாக்களை பெருமளவு திரட்டி அளிப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் ரூபாய் 210 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு “பெரியார் அரசு மருத்துவமனை “என்று பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு இக் கலந்துரையாடல்கூட்டம் மிகுந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
நிகழ்ச்சியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மருத்துவர் லகாந்தி, மருத்துவர் குண கோமதி ,மாவட்ட துணைத் தலைவர் இரா. சின்னசாமி மாவட்ட துணைச்செயலாளர் அ.சரவணன்,பெ. துரை சாமி பகுத்தறிவாளர் கழ கத்தின் பொறுப்பாளர் ஆசிரியர் அ. சீதாபதி, வ.முரு கானந்தம்,வேப்பந்தட்டை ஒன்றிய அமைப்பாளர் மு. சர்புதீன் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் வீ.ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் அரங்க. வேலாயுதம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆ.கு. தமிழினியன் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் த.சூரிய கலா, மா.காளிதாசன் ச. ஜீவா பூலாம்பாடி பெரியார் பெருந்தொண்டர் கு.வரதராஜன், தா.மகேஸ்வரி வேலு உள்ளிட்ட கழக பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்து கொண் டனர்.