ஜெய்ப்பூர், ஜூலை 11 – ‘உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு; இது வெற்றுப் பேச்சுதான்’ என்று ராஜஸ்தான் மேனாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் விமர்சித்தார்.
திருமணம், விவாகரத்து, வாரி சுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில், மத அடிப்படை யில் இல்லாமல் அனைத்து குடி மக்களும் பொதுவான சட்டங்களை பின்பற்றுவதற்கான பொது சிவில் சட்டம் குறித்து 22ஆவது சட்ட ஆணையம் அனைத்து தரப் பினரிடமும் புதிதாக கருத்து கேட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மீண்டும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. நாட்டில் பொது சிவில் சட்டம் அமலாக்கப் படுவது அவசியம் என்ற வலுவான கருத்தை பிரதமர் மோடி அண்மை யில் தெரிவித்தார். அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில், செய்தியா ளருக்கு அளித்த பேட்டியில், ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறிய தாவது:
பொது சிவில் சட்டம் தொடர் பாக வலுவான எந்த முன்மொழிவும் இல்லை.
இச்சட்டம் குறித்து நாடாளு மன்றத்திலோ, நிலைக் குழுக் களிலோ எந்த நடைமுறையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, உண்மையான பிரச்சினை களில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியல் கருவியாகவே, இந்த விவகாரத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு பயன்படுத்துகிறது. காற்றாடி பறக்க விடுவதுபோல, பொது சிவில் சட்டம் குறித்த பேச்சுகள் பறக்க விடப்பட்டுள்ளன.
இது, பாஜகவின் வாய்வார்த்தை அரசியலை அடிப்படையாக கொண்ட பேச்சுதான். இதனால், தொலைக்காட்சி விவாதங்களில் வாதமும் எதிர்வாதமும் அனல் பறக்கிறது. முன்மொழிவு குறித்து யாருக்கும் எதுவும் தெரியாத நிலையில், விவாதம் மட்டும் தொடர்கிறது. விலைவாசி உயர்வு குறித்து எந்த பேச்சும் எழுந்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன், பொது சிவில் சட்ட விவகாரத்தை கையிலெடுத்துள்ளது ஒன்றிய அரசு என்றார் அவர்.