“ஆரியர்கள் வந்தேறிகள் என்று இங்கே திணிக்க முயற்சி செய்தார் ஈ.வெ.ரா.” என்று அலறி இருக்கிறார் ஆளுநர் ரவி. ‘ஆரியர்கள் வந்தேறிகள்’என்று முதலில் சொன்னது பெரியார் அல்ல. அவர் மட்டுமே சொன்னதும் அல்ல!
பெரியாருக்கு முன்னே பலரும் இதனைச் சொல்லி இருக்கிறார்கள். பெரியாருக்குப் பிறகும் திராவிடர் இயக்கத்தவர் நீங்கலாக பலரும் இதனை ஒப்புக் கொண்டும் இருக்கிறார்கள். எனவே, இதனை பெரியாரின் கூற்றாக மட்டும் சொல்லி அரசியல் செய்தியாக மடைமாற்றம் செய்யப் பார்க்கிறார் ஆளுநர்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1925 ஆம் ஆண்டு தொடங்கியது. அதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே – 1905 ஆம் ஆண்டே இதனைப் பேசி இருப்பவர் தனித்தமிழ்த் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் ‘பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்’ என்ற தலைப்பில் அடிகள் உரையாற்றி இருக்கிறார். இந்த உரை யானது 1906 ஆம் ஆண்டு புத்தகமாக வெளியாகிவிட்டது.
*ஆரியர் வருவதற்கு முன்னரே தமிழர் மிக்க நாகரிகமுடையராயிருந்தனரென்பது இருக்கு வேதத்தினாலே இனிது அறியப்பட்ட தொன்றாம்.
*ஆரியர் சிந்து நதிக்கரையில் வந்து குடியேறிய காலத்தில், உள்நாட்டில் இருந்த தமிழர் ஏழுவகை அரண்மனைகளும், தொண்ணூறு கோட்டைகளும் உடையராய் வாழ்ந்தனரென இருக்குவேதம் உரை தருகின்றது.
*ஓரிடத்தும் நிலைபெறமாட்டாது திரிதரு வாழ்க்கை யுடையராய் இந்தியாவினுட் புகுந்த ஆரியர் கங்கையாற்றுக் கரைப் பக்கங்களில் நிலைபெற்ற வாழ்க்கை நடாத்திச் செங்கோல் ஓச்சிய தமிழ் மக்களால் நெறிப்படுத்தப்பட்ட இலக்கண முறைகண்டு தாமும் உயிர்மெய் எழுத்துகளை முறைப்படுத்தினா ரென்று துணிக.
* ஆரியர் வருஞான்று, தமிழர் அரசியல் முறைபிழையாது வாழ்ந்தனராகலின் அவரை ஆரியர் ‘அசுரர்’ என்று பெயரிட்டு வழங்கினார். இருக்கு வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்கள் முதுவதூஉம் ‘அசுர’ எனும் சொல் உள்ளது.
*ஆரியர் இந்தியாவிற் புகுந்தபின் தமக்கு முன்னே அங்கு வாழ்ந்து வருந் தமிழ் ஆசிரியர் கண்ட அவ்வெழுத்து முறையைப் பிரதி செய்து கொண்டார் என்க.
*ஆரியர் இந்தியாவிற் புகுந்தபின் தமிழருடைய நாகரிக முதிர்ச்சி யினையும், அவர் தாங்கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்தலுங்கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண்அடைவுபட வகுத்தஞான்று எழுதுமுறை கண்டறிந்தார்.
– இப்படிப் பேசி இருக்கிறார் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள். பெரியார் இப்படி எல்லாம் பேசத் தொடங்குவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர் அடிகள்.
இது ஏதோ தமிழ்நாட்டில் தமிழ் வெறியில் மறைமலையடிகளைப் போன்றவர்கள் சொன்னது மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு அறிஞர்களும் இப்படித் தான் எழுதி இருக்கிறார்கள்.
இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர்களில் ஒருவர் ராகுல சாங்கிருத்தியாயன்.‘ராகுல்ஜி’ என்று இவரை அழைப்பார்கள். ‘வால்காவில் இருந்து கங்கை வரை’ என்ற உலகப்புகழ் பெற்ற நூலை எழுதியவர் அவர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வைதிகத்தில் ஊறிய கோவர்த்தன் பாண்டே – குல வந்தி என்ற பிராமணக் குடும்பத்தில் 1893 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் இந்தியா முழுவதும் சுற்றியவர். 12 மொழிகளில் எழுத, பேச இவருக்குத் தெரியும். தமிழும் தெரியும். தமிழ்நாட்டுக்கும் வந்து சென்றுள்ளார். சென்னைக்கு அருகே திருமழிசையிலும் சில காலம் வாழ்ந்திருக்கிறார். அவர் எழுதிய வரலாற்று நூல்: ‘ரிக்வேத ஆரியர்கள்’ என்பது ஆகும்.
இந்தியாவின் மேற்கில் இருக்கும் மத்திய தரைக்கடற்கரை நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாகச் சிந்து நதி – சப்த சிந்து நதி தீரத்தில் வந்து (கி.மு.1500க்குப் பிறகு) குடியேறியவர்கள் ஆரியர்கள் என்றும், அவர்கள் வரும் போது வளமான நாகரிகத்துடன் வாழ்ந்துவந்த மக்களை வென்று வீழ்த்திக் கிழக்கே நோக்கி கங்கை நதி தீரம் வரை ஆரியர்கள் பரவினார்கள் என்றும் சொல்கிறார். ஆரியர்கள் வரும்போது வளமான நாகரிகத்துடன் வாழ்ந்தவர்களை ‘தஸ்யூக்கள், திராவிடர்கள்’ என்றும், அந்த இடம் தான் ‘சிந்துச் சமவெளி’ என்றும் சொல்கிறார். சொன்னவர் ராகுல்ஜி.
இந்தியாவுக்குள் நுழைந்ததுமே ஆரியர் முதலில் திராவிடர்களை எதிர்கொள்ள நேர்ந்தது, பின்னர் இமயப் பள்ளத்தாக்கில் பிரவேசித்ததும் ‘கிர்’ இனத்தாருடன் மோதவேண்டியதாக இருந்தது என்கிறார் ராகுல்ஜி. ‘அவன் பெரிய கிராதகன்’ என்று சிலர் சொல்வது இந்த ‘கிர்’ இனத்தார் மீதான பழிச்சொல் தான்.திராவிடர்கள் என்று சொன்னால், ஆரியர்களுக்குக் கோபம் வருவது இதனால்தான்!
மத்திய தரைக்கடல் நாடுகளிலும் அதனைச் சுற்றி ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்திருந்த ஆரிய இன மக்களின் ஒரு பிரிவினர் பேசிய மொழியே பிற்காலத்தில் செம்மைப்படுத்தப்பட்ட சமஸ்கிருதம் என்றும், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னர் தான் ரிக் வேதம் எழுதப்பட்டது என்றும் ராகுல்ஜி சொல்கிறார். ரிக் வேதத்தை இயற்றிய ரிஷிகளான பரத்வாஜரும், வசிஸ்டரும், விசுவாமித்திரரும் ஆரியர் வருகைக்கு 300 ஆண்டுகளுக்குப் பிந்தியவர்கள் என்றும் இவர் சொல்கிறார்.
‘ஆரியர்களை ஈ.வெ.ரா. கொச்சைப்படுத்தினார்’ என்று ஆளுநர் ரவி சொல்கிறார். ஈ.வெ.ரா. கொச்சைப்படுத்தவில்லை. அவர்களின் ரிக்வேதத்திலே சொல்லப்பட்டிருப்பதைத் தான் பெரியார் சொன்னார் என்பதை ராகுல்ஜி புத்தகத்தின் (நான்காவது அத்தியாயம்) மூலமாக அறியலாம். ( நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், ராகுல்ஜி நூலை தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளது. ரிக் வேதத்தை ‘அலைகள் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது)
ராகுல்ஜியின் நூலை ஆர்.என்.ரவி, ஹிந்தியில் படிக்கலாம். ஏனென்றால் ராகுல்ஜி எழுதியது ஹிந்தியில்தான். ஆரியர்கள் வந்தேறிகள் என்று பெரியாருக்குமுன்னே பல வரலாற்றுப் பெரியார்கள் சொல்லி இருக்கிறார்கள் என்பதை ஆளுநர் அறியட்டும்.
பெரியார் தான் அறிவுக்கருவூலமாக இருந்த இந்தச் செய்திகளை எல்லாம் அரசியல் களத்தில் முதன்முதலாக இறக்கினார். ‘எனது புத்தகங்கள் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பிறகு அதிகம் விற்றது’ என்று மறைமலையடிகள் சொல்வது இதனை மனதில் வைத்துத் தான். ஆரிய ஆட்டங்களை அம்பலத்தில் ஏற்றினார் என்பதால் தான் இறந்து அரை நூற்றாண்டு ஆன பிறகும் பெரியார் பேரைச் சொன்னாலே நடுங்குகிறார்கள். ரவியை வைத்து ஆட்டம் காட்ட நினைக்கிறார்கள்.
ஆளுநர் பேசட்டும். முதலமைச்சர் சொன்னது போல, ‘அவர் தான் நமக்கான நல்ல பிரச்சாரகர்’.
நன்றி: ‘முரசொலி’ தலையங்கம், 8.3.2025