கடந்த 6.7.2023 அன்று சென்னைப் பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் அரங்கில், கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு – நினைவிருக்கிறதா?
(1) பொதுத்துறை வங்கிப் பணிகளில் எழுத்தராக (கிளார்க்காக) சேர்பவர்களுக்குச் சம்பந்தப்பட்ட மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்; அதற்கான தேர்வில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று இருந்தது. இப்பொழுது பிஜேபி ஆட்சியில் மாற்றப்பட்டு விட்டது என்ற உண்மை தெரியுமா?
(2) அதற்கான விளம்பரங்களில் பச்சையாக – மாநில மொழியில் தேர்ச்சி கட்டாயம் இல்லை; அது வெறும் முன்னுரிமை மட்டுமே என்று இடம் பெற்றதை அறிவார்களா நம் இன இளைஞர்கள்?
இதனால் பாதிக்கப்படுபவர்கள் நம் இனத்து இளைஞர்கள் என்பது புரிகிறதா?
(3) தமிழ்நாட்டு வங்கிகளில் இதர மாநில இளைஞர்களை குறிப்பாக அரியானா, ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிவார்களா?
(4) 2022-2023 ஆகிய ஆண்டுகளுக்கான வங்கிகளில் கிளார்க்குப் பணிகளுக்குத் தேர்வு நடத்தப்பட்டு 843 பேர் தமிழ்நாட்டில் நியமனம் செய்யப்பட்டனர்.
(5) அதில், பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்தி வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றில் பணியில் சேர்ந்தவர்களுள் அதாவது 843 பணிகளில் 400 பேர் வெளி மாநிலத்தவர்கள் என்பதை நம் இனத்து வேலையில்லாப் பட்டதாரிகள் அறிவார்களா?
(6) மாநில மொழி தெரியாதவர்களுடன் தமிழ் மட்டுமே தெரிந்த வாடிக்கையாளர்கள் எப்படி உரையாடல் நடத்துவார்கள்?
(7) 2016ஆம் ஆண்டில் மதுரையில் அஞ்சலகத் தேர்வு நடைபெற்றது.
அத்தேர்வில் அரியானாவைச் சேர்ந்த பல மாணவர்கள் 25க்கு 25 வாங்கி இருந்தனர் – அதில் தமிழ்த் தேர்வும் அடக்கம். இது எப்படி சாத்தியமானது? அதில் நடந்த தில்லுமுல்லுகள் எத்தகையன என்பது புரிகிறதா?
(8) இரயில்வே துறையில் தமிழ்நாட்டில் ஹிந்திக் காரர்கள் குவிந்து கொண்டுள்ளனர். பயணச் சீட்டு வாங்கும் இடத்தில் பணியாற்றுவோர், டிக்கெட் பரிசோத கர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ் மட்டும் தெரிந்த பயணிகளின் நிலை என்ன?
(9) கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு வங்கி, அதன் மேலாளர் ஹிந்திக்காரர்.
ஓய்வு பெற்ற உள்ளூர் டாக்டர் கடன் பெறுவதற்காக வஙகி மேலாளரை அணுகினார். அந்த மேலாளர் கடன் விண்ணப்பம் கொடுத்த டாக்டரைப் பார்த்து ‘டூ யூ நோ ஹிந்தி?’ என்று கேட்க ‘எனக்கு ஹிந்தி தெரியாது; தமிழும், இங்கிலீஷும் மட்டுமே தெரியும்’ என்றார். ‘அப்படியானால் உனக்குக் கடன் கிடையாது – போ!’ என்றார் வங்கி அதிகாரி. இது ஏடுகளிலும் வெளி வந்தது. படித்த டாக்டர் சும்மா இருப்பாரா? வங்கி அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
கங்கைக் கொண்ட சோழபுர வங்கி அதிகாரிக்கு என்ன தண்டனை தெரியுமா? கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து திருச்சிக்கு மாறுதல் (வசதியாகப் போய்விட்டது) பிள்ளைகளைப் பெரிய நகரத்தில் படிக்க வைக்கலாம் அல்லவா!).
இதுதான் வேலையில்லாது தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களின் கையறு நிலை!
(10) ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று வாய்ச் சவடால் காட்டினாரே நரேந்திர மோடி – அவர் கணக்குப்படி இந்த 9 ஆண்டுகளில் 18 கோடி பேர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும் – கொடுத்தாரா?
(11) வேலைகிட்டா இருபால் இளைஞர்கள் கோடானு கோடி பேர் இந்நாட்டில் வாழுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் பட்டை நாமம் சாத்தியதுதான் பா.ஜ.க. ஒன்றிய அரசின் சாதனை!
அப்படித் தப்பித் தவறி அளிக்கப்படும் வேலை வாய்ப்பிலும் தமிழ்நாட்டில் வேற்று மாநில மொழிக்காரர்களின் கொள்ளையோ கொள்ளை!
(12) தோழர்களே என்ன செய்யப் போகிறீர்கள்? இந்தக் கையறு நிலையை இளைஞர்களிடம் எடுத்துக் கூற வேண்டாமா? மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டாமா?
மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டாமா?
மக்களின் கொந்தளிப்புச் சூட்டை மமதைக் கோட் டையில் வீற்றிருக்கும் ஆளவந்தாரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டாமா?
அதற்காகத்தான் வரும் 14ஆம் தேதி மாவட்டக் கழகத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
ஒத்த கருத்துள்ளவர்களையும் அழைத்துப் பங்கு ஏற்கச் செய்வீர்!
இடையில் இரண்டே நாள்கள்தான் – மும்முரமாக ஈடுபடுவீர்!
ஈரோடு கழகப் பொது குழுவுக்குப் பின் நாம் கிளர்ந்தோமா தளர்ந்தோமா? என்பது முக்கியம். செயலில் காட்டுங்கள் பார்ப்போம்! இது ஏதோ ஒரு கட்சியின் பிரச்சினையல்ல! கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இளைஞர்களின் எதிர் காலப் பிரச்சினை!
ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவீர் தோழர்களே! தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆர்த்தெழட்டும்! கருஞ்சிறுத்தைகள் கர்ச்சனை செய்யட்டும்!!
கிளர்வீர்! கிளர்வீர்!!
எழுவீர்! எழுவீர்!!