தூத்துக்குடி, மார்ச் 8 தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதித்து அனைவரது கருத்துகளைக் கேட்க வேண்டும் என மக்க ளவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா்.
கனிமொழி எம்.பி.,
தூத்துக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள், குறிப்பாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
‘மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தாலும், தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கை குறையாது’ என உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறியுள்ளாா். ஆனால் அதுகுறித்து முழு விளக்கம் அளிக்காததால், பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மக்கள்தொகை அடிப்படையில்தான், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது சில மாநிலங்கள் மக்கள்தொகை குறைப்பை, வெற்றிகரகமாகச் செயல்படுத்தியுள்ளன. மக்கள்தொகையைக் குறைத்த மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், மாநிலங்களிடையே சீரான நிலை வரும் வரை தொகுதி மறுசீரமைப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போதைய சூழலில், மக்கள்தொகை அடிப் படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் மொத்த எம்பிக்களில், தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கை 7.18 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு தெளிவான பதிலை ஒன்றிய அரசு அளித்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு முடிவு ஏற்படும்.
ஆகவே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதம் நடத்தி, அனைவரது கருத்துகளைக் கேட்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில், திமுக பிரச்சினைகளை உருவாக்கவில்லை. இக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதியைத் தருவோம் என ஒன்றிய அரசுதான் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. எனவே, அதற்கு எதிா்வினை ஆற்றக்கூடிய நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது. மேலும், தொகுதி மறுசீரமைப்பு முடிந்தபிறகு இதை பேசமுடியாது என்பதால், வரும்முன் காப்போம் என்ற நிலையில் தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.