பெய்ஸ்பூர் காங்கிரஸ் நாடகம் முடிவடைந்து விட்டது. பாமர மக்களை ஏமாற்றி என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவைகளை யெல்லாம் காங்கிரஸ் வீரர்கள் செய்து முடித்து விட்டார்கள். ஜெகஜாலப் புரட்டுகளில் காங்கிரஸ்காரர் கை தேர்ந்தவர்கள் அல்லவா? ஆகவே, அவர்களது கைச்சரக்கு முழுவதையும் பெய்ஸ்பூரில் அவர்கள் காட்டிவிட்டார்கள். ஏன்?
காங்கிரசுக்கு இது சோதனை காலம். “இருப்பதா! இறப்பதா!” என்ற பிரச்சினைக்கு காங்கிரஸ் முடிவு கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சட்டமறுப்பு, உப்புப் போர்கள் முழுத்தோல்வியடையவே ஏமாந்தனர் காங்கிரஸ்காரர்; இழந்த மானத்தை எப்படி மீட்ப தென யோசித்தனர்; சட்டசபைக்குட் சென்று சீர்திருத்த அரசியலைக் கவிழ்ப்பதாக முழங்கினர்; பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியலை வகுக்கப் போவதாகக் கர்ஜித்தனர். எங்களை டெல்லி அசம்பிளிக்கு மெஜாரிட்டியாக அனுப்புங்கள் என தேச மகாஜனங்களைக் கேட்டனர். ஒருமுறை அவர்களை அனுப்பித் தான் பார்ப்போமே! என பரீட்சார்த்தமாக, மெஜாரிட்டியாக அல்லாவிட்டாலும் ஓரளவு ஜாஸ்தியாக அவர்களை அசம்பிளிக்கு தேச மகாஜனங்கள் அனுப்பினர். அவர்கள் அசம்பிளியில் சாதித்ததென்ன? சீர்திருத்தத்தைக் கவிழ்த்தார்களா? பிரதிநிதித்துவ சபை கூட்டினார்களா? இல்லவே இல்லை. “பிரதிநிதித்துவ சபை” என்ற பேரைக் கூட அவர்கள் அசம்பிளியில் உச்சரிக்கவில்லை. “பிரதிநிதித்துவ சபையைப் பற்றி மூச்சுப் பேச்சுக் காட்டாததேன்? என சட்ட மந்திரி சர்.என்.என். சர்க்கார் அசம்பிளியில் குத்தலாய்க் கேட்டபோது, காங்கிரஸ் வீரர்கள் கோஷாப் பெண்கள் மாதிரி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு இருந்தார்கள்; வாய் திறக்கவில்லை; ஒரு வார்த்தையாவது பேசவில்லை; மவுனச் சாமிகளானார்கள். எனினும், சர்க்காருக்குத் தோல்விமேல் தோல்வி உண்டு பண்ணி விட்டதாக ஜம்பம் பேசினார்கள். அந்தத் தோல்விகள் எல்லாம் காகிதத் தோல்விகளே என காங்கிரஸ்காரர்களே கேலி செய்கிறர்கள். ஏன்? அந்தத் தோல்விகளினால் சர்க்கார் ஒரு அணுவளவு கூட அசையவில்லை. அழிவு வேலைக்காரர்களான காங்கிரஸ்காரரைப் போன்ற ஆகாவழிகளால் அரசியலுக்கு பாதகம் ஏற்படாத முறையில் அரசியல் சட்டம் வகுத்த புத்திசாலிகள் அநேக பாதுகாப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஆகவே, சர்க்காரை அசைக்கவே முடியாது. எந்த அரசியலிலும் பாதுகாப்புகள் இருந்தே தீரும். நாம் வீடு கட்டும்போது என்ன செய்கிறோம்? ஆடு மாடு புகாமல் வீட்டைச் சுற்றி வேலி எழுப்புகிறோம்; அல்லது மதில் கட்டுகிறோம்; திருடர் புகாமல் பலமான கதவுகள் அமைக்கிறோம்; ஜன்னல்களில் பலமான இரும்புக் கம்பிகள் போடுகிறோம்; பறவை முதலியவை தொந்தரவு செய்யாமல் வலை போடுகிறோம். பாதுகாப்புகள் ஏற்படுத்துவது முட்டாள்தனமென்றோ, அநீதியென்றோ ஆடு, மாடுகளும், திருடர்களும், பறவைகளும் புகார் செய்தால் யாராவது அதை லட்சியம் செய்வார்களா? எனவே, எந்த அரசியல் அமைப்பிலும் பாதுகாப்புகள் இருந்தே தீரும்; இருக்கத்தான் வேண்டும். எனினும் பாதுகாப்புகளும், விசேஷாதிகாரங்களும் சர்க்காருக்கு இருப்பதினால் தங்களுக்கு எதுவும் சாதிக்க முடியவில்லை எனக் கூறி பொது ஜனங்களை காங்கிரஸ் வாலாக்கள் ஏமாற்ற முயன்றார்கள்.
அப்பால் மாகாணத் தேர்தல் வந்ததும் மாகாணத் தேர்தலிலும் போட்டி போடுகிறார்கள்; அபேட்சகர்களும் நிறுத்தியாகி விட்டது. ஆனால், அவர்களை ஆதரிக்க தேச மகா ஜனங்கள் தயங்குகிறார்கள். அசம்பிளி வாக்குறுதிகளை காங்கிரஸ் மெம்பர்கள் நிறைவேற்றி வைக்காததை தேச மகா ஜனங்கள் மறக்கவில்லை. தொழிலாளர்களுக்கு அவர்கள் துரோகம் செய்ததும் அவர்கள் நினைவிலிருக்கிறது. மற்றும், ஜில்லா போர்டுகளை அவர்கள் குட்டிச் சுவராக்கி வருவதையும் தேச மகா ஜனங்கள் அறிந்திருக்கிறார்கள். ஆகவே, காங்கிரஸ் அபேட்சகர்களை தேச மகா ஜனங்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை காங்கிரஸ்காரர் உணர்ந்து விட்டனர். ஆகவே,பெய்ஸ்பூர் காங்கிரஸ் பேரைச் சொல்லியாவது தேச மகா ஜனங்களை ஏமாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
பெய்ஸ்பூர் காங்கிரஸை எவ்வளவு தூரம் விளம்பரப்படுத்தலாமோ, அவ்வளவு தூரம் காங்கிரஸ்காரர் விளம்பரப்படுத்தினர். காங்கிரஸ் பத்திரிகைகளும் பெய்ஸ்பூர்ச் செய்திகளை வெகு ஆடம்பரத்துடன் பிரசுரம் செய்தன.
பெய்ஸ்பூர் காங்கிரசுக்கு பம்பாயிலிருந்து ‘ஜோதி’ கொண்டு போகப்பட்டதாம். இந்த ஜோதி மர்மம் சாமானிய ஜனங்களுக்கு விளங்கவில்லை. “பம்பாயிலிருந்து தீ கொண்டுபோகின்றார்களே! பெய்ஸ்பூரில் அடுப்புமூட்ட தீ கிடையாதா?” எனவுங் கூடப் பலர் கேட்கலாயினர். யார் என்ன கேட்டாலென்ன? தத்துவார்த்தங்கள் கூறுவதில் காங்கிரஸ்காரர் சமர்த்தர்களல்லவா? ஏதேதெல்லாமோ கூறினர். ஏமாறக்கூடியவர்களும் திருப்தியடைந்தனர். மகாநாடும் கூடி முடிவடைந்து விட்டது. கடைசிப்பலன்? கேட்கவா வேண்டும்? பூச்சியந்தான். அரசியலைத் தகர்க்க முடியாதென திரு. சி.ஆர். ரெட்டியார் கூறியபோது, காங்கிரஸ் பத்திரிகைகள் சீறி விழுந்தன. ஆனால், காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லாலே சட்டசபை மூலம் அரசியலைத் தகர்க்க முடியாதென்று இப்பொழுது ஒப்புக்கொண்டு விட்டார். தேச மகா ஜனங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து போராடினால்தான் சீர்திருத்தத்தைக் கவிழ்க்க முடியுமாம். பிரதிநிதித்துவ சபை மூலந்தான் தற்கால அரசியலைத் தகர்த்து இந்தியர்களுக்குத் திருப்தியளிக்கும் எதிர்கால அரசியலை வகுக்க முடியுமாம். இந்த விஷயத்திலாவது காங்கிரஸ்காரர்களுக்குள் ஒற்றுமையுண்டா? அதுவுமில்லை. அரசியல் அதிகாரம் கைக்குள் வராமல் பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியலை எவ்வாறு வகுக்க முடியுமென பல காங்கிரஸ் தலைவர்களே கேட்கிறார்கள்.
பிரபல ராஜ்ய தந்திரியான சர். தேஜ்பகதூர் சாப்ரூவும் அவ்வாறே அபிப்பிரயப்படுகிறார். ஆனால், காங்கிரஸ்காரர் அதை யெல்லாம் லட்சியம் செய்யப் போவதில்லை. ஜனங்களை ஏமாற்றுவதே அவர்கள் லட்சியம். எனவே, பாமர மக்கள் கண்ணில் மண்ணைப்போடுவதற்கு அனுகூலமாக பல ஆடம்பரத் தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு அவர்கள் கலைந்து விட்டார்கள். உருவான வேலை யொன்றையும் அவர்கள் செய்யவே இல்லை; அவர்களால் செய்யவும் முடியாது. இருந்தாலும், காங்கிரஸ் மகாநாடு வெற்றிகரமாக முடிந்து விட்டதாக காங்கிரஸ் பத்திரிகைகள் விளம்பரம் செய்கின்றன. சட்டசபைகளைக் கைப்பற்றப் போகும் காங்கிரஸ்கார், மந்திரி பதவி ஏற்பதைப் பற்றியும் முடிவு செய்யவில்லை. அரசியல் கவிழ்ப்புப் பல்லவியையே திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டு இருக்கிறார்கள். சட்டசபைக்குச் சென்று தாம் சாதிக்கப்போகும் காரியங்களை விளக்கிக் கூறாமல், தமக்கு வோட்டுக் கொடுக்கும்படி தேச மகாஜனங்களைக் கேட்கும் காங்கிரஸ்காரர் எவ்வளவு யோக்கியப் பொறுப்புடையவர்கள், நாணயமுடையவர்கள், அறிவுடையவர்கள் என்பதை தேச மகாஜனங்களே நிர்ணயம் செய்து கொள்ளட்டும்.
இந்த பெய்ஸ்பூர் நாடகத்தினால் ஏற்பட்ட நன்மை ஒன்றே ஒன்று தான். அதாவது, காங்கிரஸ் தலைவருக்கு ‘ராஷ்டிரபதி’ பட்டம் அளிக்கப்பட்டிருக்கிறது. கோடீஸ்வர சோஷியலிஸ்டான பண்டித ஜவஹர்லாலுக்கு இந்தப் பட்டம் பொருத்தமானதல்லவா! ஆகவே, புது வருஷப்பட்டம் பெற்ற பண்டித நேருவுக்கு நாம் மனமார வாழ்த்துக் கூறுகிறோம்.
– ‘விடுதலை’ – 30.12.1936