4.97 லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000
அமைச்சர் பிடிஆர்
புதுமைப் பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி 4.97 லட்சம் மாணவிகள், 4.16 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு சிறப்பு
30 சதவீதம் தள்ளுபடி
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சிறப்பு சலுகையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விழாக் காலங்களைப் போலவே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோ ஆப்டெக்ஸ் கடைகளிலும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1000 சேலை சலுகை விலையில் ரூ.700க்கு விற்கப்படும். பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனா கைப்பற்றிய பகுதிகளை மீட்பது எப்போது? உமர் கேள்வி
விரைவில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும் என லண்டனில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய நிலையில், உங்களை யார் தடுத்தது என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
கார்கில் போரின் போதே அதை மீட்க வாய்ப்பு அமைந்ததாகவும், ஆனால் ஒன்றிய அரசு அதை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பது பற்றி ஏன் பேசுவதில்லை எனவும் வினவியுள்ளார்.
பிஸ்கெட் கொடுத்து கையெழுத்து வாங்கிய பாஜக
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. அந்த வகையில், சென்னை ஓஎம்ஆர் சாலையில் பள்ளிக்கு சென்ற சிறுவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கும் காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது.
ஆர்எஸ்எஸ் – பாஜக மோதல்: தாய்மொழி கருத்தால் சர்ச்சை
பங்காளிகளாக இருக்கும் ஆர்எஸ்எஸ், பாஜகவிற்குள் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் வசிப்பதற்கு மராத்தி மொழி தெரிய வேண்டிய அவசியமில்லை என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கூறி இருந்தார். அவரது கருத்து மகாராட்டிரா அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த முதலமைச்சர் ஃபட்னாவிஸ் (பாஜக), மகாராட்டிரா, மும்பையின் மொழி மராத்தி தான் எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு
என்ன இழப்பு?
மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற, சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பது சட்டம். அதன் அடிப்படையில், ஆரம்பத்தில் தொகுதிகள் வரையறை செய்யப்படும்போது நாட்டின் மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 7.18 சதவீதம் ஆக இருந்ததால் 39 தொகுதிகள் கிடைத்தது. ஆனால், குடும்பக் கட்டுப்பாட்டை தீவிரமாக அமல்படுத்தியதால் தற்போது மக்கள்தொகை 5.42 சதவீதமாக குறைந்ததால், 8 தொகுதிகள் குறையும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.