1500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ. 15 கோடி மானியம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை,மார்ச் 8- புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு 1500 பெண்கள் மற்றும் திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15 கோடி ஆட்டோ மானியம் வழங்கப் பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 7ஆவது கூட்டம் மற்றும் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தின் 5ஆவது கூட்டம் சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூடத்தில் நேற்று (7.3.2025) நடைபெற்றது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்
சி.வி.கணேசன் தலைமை தாங்கினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ், தொழிலாளர் நல ஆணையர் சி.அ.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:

தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்படும் 20 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் தற்போது 47 லட்சத்து 23ஆயிரத்து 393 தொழிலாளர்கள் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர்.

பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், இறுதி நிகழ்வு, விபத்து உறுப்பு பாதிப்பு, முடக்க ஓய்வூதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமைப்புசாரா ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ தானியங்கி மோட்டார்‌ வாகனங்கள்‌ பழுதுபார்க்கும்‌ தொழிலாளர்கள்‌ நலவாரியத்தில்‌ பதிவு செய்துள்ள பெண்‌ மற்றும், திருநங்கை ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ ரிக்சா வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, 1000 பெண் மற்றும் திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு இத்திட்டத்தின் கீழ் 1500 பெண் பயனாளிகளுக்கு ரூ.15 கோடி மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த பிப்ரவரி 28 வரையில் ஓட்டுநர்கள் நல வாரியத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து ,978 பயனாளிகளுக்கு ரூ.79.06 கோடி மதிப்பபீட்டிலும் அதேபோல், வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் கடந்த ஜனவரி 31 வரையில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 690 பயனாளிகளுக்கு ரூ.65.82 கோடி மதிப்பீட்டிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *