கேள்வி 1: எந்த ஜாதியினரும் கோவில் களுக்கு உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதை மக்கள் வரவேற்கின்ற நிலையில், இத்தகைய உத்தரவு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் பொருந்தும் அல்லவா?
– அங்காளம்மாள், திருவொற்றியூர்.
பதில் 1: அது மட்டுமல்ல. தமிழ்நாடு (கலைஞர்) அரசு சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத் துறைக்கு எடுத்தது செல்லாது என்ற முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அநேக ஓட்டைகளும், சட்டத் தவறுகளும் ஏராளம் உண்டு. (முந்தைய ஜெயலலிதா அரசே தீட்சதர் பக்கம் இருந்தது போல் இல்லையே) புதிய வழக்கினை இப்போது நடத்தினால் இறுதி வெற்றி தமிழ்நாடு அரசுக்கே வரும்.
மக்கள் கிளர்ச்சியை வலுப்படுத்துவதே முதற்பணியாக இருக்க வேண்டும்!
– – –
கேள்வி 2: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் ஒருமித்த குரலில் பேசியிருப்பதற்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் செவி மடுப்பார்களா?
– இராஜேஸ்வரி, கடப்பாக்கம்.
பதில் 2: செவிமடுக்க வேண்டியது ஜனநாயகப்படி அவசியமாகும். இன்றேல் பா.ஜ.க.,
ஆர்.எஸ்.எஸ். இப்போது ஆட்சியில் உள்ள பல மாநிலங்களை 2026 தேர்தலில் இழப்பது நிச்சயம்.
– – –
கேள்வி 3: அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் குலசேகரன்பட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் நடைபெற்ற கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டது அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பது ஆகாதா?
– பூவை பூபாலன், பூந்தமல்லி.
பதில் 3: “அரசு (ஒன்றிய) எவ்வழி அதிகாரிகள் அவ்வழி” – இதுதானே இன்றைய நடைமுறையாக உள்ளது – மகா வெட்கம்!
– – –
கேள்வி 4: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்திருப்பது தமிழர்களின் எண்ணத்திற்கு எதிரான, விரோதமான போக்கு அல்லவா?
– கோ.நண்பன், தாம்பரம்.
பதில் 4: தமிழ்நாட்டில் கலகத்தை உண்டாக்கி ‘சட்டம் ஒழுங்கு’ சீர்கேடு என பல்லவி, அனுபல்லவி, சரணம் பாட புதிய திட்டம்.
பலவகை பழைய திட்டங்கள் தந்த தொடர் படுதோல்வி, திருப்பரங்குன்றத்தில் கலவரத் தூண்டல் தோல்வி உள்பட இதுவும் ஒரு கலகத் தூண்டல் திட்டம். அவர்களே போட்டுப் பெருக்கிக் கொள்ளலாமே!
– – –
கேள்வி 5: சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மாநில அரசுகளின் தடையில்லா சான்றிதழ் தேவையில்லை என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பால் மாநிலங்களில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை புற்றீசல் போல அதிகரிக்கும் எனவும், இதனால் கல்வியில் வியாபாரம் தலைதூக்கும் எனவும் கல்வியாளர்கள் வேதனை தெரிவித்திருப்பதற்கு ஒன்றிய அரசு செவி சாய்க்குமா?
– கு. கணேஷ், கடம்பூர்.
பதில் 5: மாநில உரிமைப் பறிப்புப் பற்றியும், கல்வி ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து யூனியன் பட்டியலுக்கு சேர்க்கப்பட்டது என்பதை மறைமுகமாகவும் அறிவிக்கும் ஏற்பாடே இது!
– – –
கேள்வி 6: தெலங்கானாவில் சி.பி.எஸ்.இ., அய்.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் 2025-2026ஆம் கல்வி ஆண்டுமுதல் தாய்மொழியான தெலுங்கை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டுள்ளதைப் போன்று தமிழ்நாட்டிலும் திராவிட மாடல் அரசு தமிழ் மொழியை கட்டாயமாக்க ஆவன செய்யுமா?
– மா.குணசேகரன், மேற்கு தாம்பரம்.
பதில் 6: திராவிட மாடல் அரசு ஏற்கெனவே செய்ததுதான் இது! நீதிமன்றங்களையும் கணக்கில் கொண்டல்லவா செய்யப்பட வேண்டிய ‘இக்கட்டு’ இவ்வரசுக்கு உள்ளதே! அதை மறந்துவிடலாமா?
– – –
கேள்வி 7: தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய கல்வி நிதியை ஒதுக்க மறுக்கும் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் நடத்திய கூட்டுப் போராட்டத்தில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம், இன்னொரு மொழிப்போரை சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று விடுத்த அறைகூவலுக்கு ஒன்றிய அரசு செவிமடுக்குமா?
– சகுந்தலா ரவி, மேற்கு தாம்பரம்.
பதில் 7: மக்கள் மன்றத்தின் ஆணைக்கு எந்த அரசும் தலைவணங்கியே தீரவேண்டியது என்பது ஜனநாயக வரலாற்றுப் பாடம் ஆகும்!
– – –
கேள்வி 8: மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பதற்கு ஒப்பாகும் என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது தமிழ்நாட்டு இளைஞர்களையும் மாணவர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளதை தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ஆ.சுமதி, கோயமுத்தூர்.
பதில் 8: பெரியார் மண்ணின் மனோபாவம் ஒருபோதும் மாறாது; என்றும் தயார் என்று களம் நோக்கிச் செல்லக் காத்திருக்கும்.
– – –
கேள்வி 9: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது குறித்து சட்டமன்றத்தில் பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, உ.பி. பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்றது மகா கும்பமேளா அல்ல ‘மரண கும்பமேளா’ என்று காட்டமாக சாடியிருப்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா?
– மு. கவுதமன், பெங்களூரு.
பதில் 9: உணர மாட்டவே மாட்டார்கள். கேளாக் காதும் மாளா ஆணவமும் அவர்கள் கண்களை மறைக்கும்! என் செய்ய!
– – –
கேள்வி 10: ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களில் ஒரு மொழி (ஹிந்தி) மட்டுமே வழக்கத்தில் உள்ளபோது, இரு மொழிக்கொள்கையைப் பின்பற்றுகின்ற தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வது அப்பட்டமான மொழித்திணிப்பு அல்லவா?
– இரா. சீனிவாசன், ஊரப்பாக்கம்.
பதில் 10: கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?