ஆழம் தெரியாமல் காலைவிட்டு விழிபிதுங்கும் ஹிந்தி ஆதரவு மெத்தப் படித்த மேதாவிகள்!
சரா
வட இந்திய ஹிந்தி தொலைக்காட்சிகளில் தமிழ்நாட்டில் உள்ள ஹிந்தி எதிர்ப்பு குரல் குறித்து பேசுவது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வாதிகளுக்கு கிடைத்த அலாவுதீன் விளக்கு ஆகும்.
எவ்வெப்போது தங்களின் அரசியல் மக்களிடையே எதிர்ப்பலைகளாக எழும் போதும் ஹிந்தி எதிர்ப்பு என்னும் பூதத்தை திறந்துவிட்டு தங்களின் அரசியல் லாபத்தை அறுவடை செய்கின்றன. என்று இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு எங்கு இருக்கிறது என்று தெரியாதவர்கள் எல்லாம் உரத்த குரலில் பேசுகிறார்கள்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி நகரில் காசி தமிழ் சங்கம் என்று ஒன்றை காவிக்கூட்டங்கள் பல கோடிகளைச் செலவழித்து இரண்டு ஆண்டுகளாக நடத்தின.
செல்லுபடியாகவில்லை
இரண்டு ஆண்டுகள் நடந்தும் அவர்களின் கயமை நோக்கம் ஒன்றும் செல்லுபடியாகவில்லை. மராட்டிய பாஷா கரியகிரம் என்ற ஒன்றை டில்லியில் நடத்தி சரத்பவாரை அழைத்து மேடை ஏற்றினார்கள். மோடி சரத்பவாருக்கு இருக்கையில் அமர உதவி செய்தார் என்று மராட்டி நாளிதழ்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் எழுதித் தள்ளின.
இப்படியாக ஹிந்தி பேசாத மாநில மக்களை மயக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தது. சமீபத்தில் அதற்கு பலியான மாநிலம் ஒடிசா.
ஆனால் தமிழ்நாடு மட்டும் இவர்களின் தூண்டிலுக்கு சிக்காமல் இருந்துகொண்டே வருகிறது.
ஆளுநரை விட்டு தமிழ்நாட்டின் தென்கோடியில் இருந்து காசிக்குச் செல்லும் ரயிலை பச்சைக் கொடிகாட்ட வைத்தனர்.
ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டு பாஜக பெருந்தலைகளும் அந்த காசி ரயில் நிற்கும் தமிழ்நாடு ரயில் நிலையங்களுக்கு எல்லாம் சென்று ஜெய் சிறீராம், பாரத் மாதகி ஜே, வந்தே மாதரம் என்று எல்லாம் கரடியாய் உறுமிப் பார்க்கின்றனர்.
என்ன தொடர்பு?
காசி தமிழ்சங்கத்திற்கும் இவர்களின் கரடிக்கத்தலான ஜெய் சிறீராம், பாரத் மாதா கி ஜேக்கு, வந்தே மாதர முழக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று ரயிலில் காசே கொடுக்காமல் ஓசியில் காசிவரை பயணிக்கும் பாமரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
பயனில்லை
ஒரு டீசர்ட்,, இடுப்பில் கட்டும் இரண்டு முழ காவி வேட்டி, நான்கு 500 ரூபாய் நோட்டுகள், காவித்துண்டு, சோப்பு, பிரஸ், இத்யாதி பொருட்களோடு ஒரு டிராவல் பையும் கொடுத்து காலை சிற்றுண்டி, மதியம் உணவு, மாலை சிற்றுண்டி, இரவு ரொட்டி உருளைக்கிழங்கு, பூரி, தோசை, என சுடச்சுட கொடுத்து 100 நாள் வேலைபார்க்கும் குழுவில் உள்ளவர்கள். விளக்கு பூஜையின் போது ஒப்புக்கொள்ள வைத்த பெண்கள், கிச்சன் கேபினெட் என்ற பெயரில் பார்ப்பனப் பெண்கள் பார்ப்பனரலல்லாத பெண்களிடம் நட்போடு பழகி அவர்களை சங்கித்துவ வலையில் விழவைத்து அதில் சிலரையும் இப்படி காசி தமிழ் சங்க நிகழ்விற்கு ரயிலில் பயணம் செய்ய அழைத்துச் சென்றனர்.
இவ்வளவு சிரமப்பட்டும் பத்திரிகைகளில் விளம்பரம் எல்லாம் கொடுத்தும் “கொஞ்சமேனும் பயனில்லாமல் போகிறது” இந்த எரிச்சலில் மூன்றாம் ஆண்டு ஏதாவது செய்து பார்ப்போம் என்ற திட்டத்தோடு களமிறங்கியது தமிழ்நாடு பாஜக ஒன்றிய அரசு மற்றும் தலைமை பாஜக.
உளுத்துப்போன குற்றச்சாட்டு
ஒரு அதிர்வலையை ஏற்படுத்த என்னசெய்யலாம் என்றால் திமுக அரசு பணக்காரர்களுக்கு மட்டும் ஹிந்தி கற்றுகொடுக்கும் வேலையைச் செய்கிறது என்று ஒற்றை உளுத்துப் போன குற்றச்சாட்டை தூக்கிக்கொண்டு அதனை பிரச்சினையாக்கலாம் என்று திட்டம் போட்டு மூன்றாம் காசி தமிழ் சங்கம் 3.0 என்று காமெடி சீரியல் பெயர்போல் வைத்தது.
இம்முறை திட்டமிட்டபடி காசி தமிழ்சங்க நிகழ்விற்குச் சென்ற தர்மேந்திரப் பிரதான், எழுதிகொடுத்ததை வாசித்தார்.
எதிர்பார்க்காத ஒன்று
அதாவது தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் பல ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் இருண்டு வருகிறது. ஆகவே நாங்கள் பணம் தரமாட்டோம் என்றார். குறைந்த பட்சம் தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பு வரலாற்றை தர்மேந்திரப் பிரதான் படித்திருந்தால் தெரிந்திருக்கும் அவரது பேச்சின் தாக்கம் பூமாரங் போல் அவர்களையே தாக்கும் என்று. ஆனால் அவர்கள் படித்தது எல்லாம் வாட்ஸ் அப் யுனிவர்சிடியில் இங்குள்ள சங்கித்துவ நபர்களால் பகிரப்படும் வரலாற்று சிறப்பு மிக்க(?) தகவல்களை மட்டுமே – ஆகவே அவர் அதனையே பேசிவிட்டுச் சென்றார்.
அதன் பிறகு நடந்தது அவர்களே எதிர்பார்க்காத ஒன்று.
முதலமைச்சர் முதல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாலைகளில் கோலம் போட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இவ்வளவு பிரச்சினை வரும் என்று தெரியாமல் இவர்கள் கொடுத்ததை பேசிவிட்டோமே என்று தர்மேந்திரப் பிரதானே மறைமுகமாக பேசும் அளவிற்கு நிலைமை சென்றுவிட்டது, அதுமட்டுமா?
பாராட்டு
அவரே விளக்கமும் கொடுத்துவிட்டார். தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம், என்றும் தமிழ்நாட்டு மாணவர்கள் பன்னாட்டு அளவில் போட்டியிடும் திறமை மிக்கவர்கள் என்றும் அவர் பேசினார்.
அப்படியே சென்றால் தலைமை திட்டும் என்பதால் முடிக்கும் போது தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பேசிவிட்டுச் சென்றார்.
எப்போதும் போல் பதவிக்காலம் முடிந்து இன்றும் ஒட்டிகொண்டு இருக்கும் ஆளுநர் ரவி மண்குதிரை ஏறி ஆற்றைக் கடக்க முயல்வது போல் தனது பங்கிற்கு ஹிந்தி மாணவர்களின் எதிர்காலம் என்று எல்லாம் பேசி நாளிதழ்களில் தனது பெயர் வரும்படி பார்த்துக்கொண்டார்.
பின்வாங்கினார்
இந்த நிலையில் சென்னை அய்.அய்.டி.யில் முக்கியமான ஒரு நிகழ்விற்கு கலந்துகொள்ள தர்மேந்திரப் பிரதான் சென்னை வருவதாக இருந்தது.
ஆனால், மோடியே அய்.அய்.டி.யின் குட்டிச்சுவரை உடைத்து பாதை அமைத்து தப்பி ஓடிய போது தர்மேந்திரப் பிரதான் எம்மாத்திரம்.
அவரோ நான் வரவில்லை. உரையை வாசித்துவிடுங்கள் என்று கூறிவிட்டார்.
ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வா என்றால் அதெல்லாம் ஒன்றுமில்லை.எதிர்ப்பிற்கு அஞ்சி சென்னை பயணத்தையே ரத்து செய்து வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.
வடக்கே எதிர்ப்பு
இந்த நிலையில் தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பு பற்றிய இவர்களின் உளறல் காரணமாக வட இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகால பழைமையான மொழிகளான போஜ்புரி, மைதிலி, கன்னோஜ், கரிபோலி, உள்ளிட்ட சுமார் 17 மொழிகளை ஹிந்தி அழித்துவிட்டது என்பதை தக்க சான்றுகளோடு முதலமைச்சர் தொடர்ந்து வெளியிட்டு வர அவரது ஆங்கில தமிழ் பதிவுகள் போஜ்புரி மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மக்களை சென்றடைய, அவர்களது திட்டம் பூமாரங் போல் அவர்களையே தாக்கத்துவங்கிவிட்டது.
சமூகவலைதளமெங்கும் ஹிந்திக்கு எதிரான உ.பி., பீகார் மக்கள் பேசத்துவங்க முதலுக்கே மோசமாகிவிட்டது என்று மீண்டும் ஆமை தலையை ஓட்டுக்குள் இழுத்துகொண்டது போல் அமைதியாகிவிட்டார்கள்
ஆனால் அவர்கள் அமைதியானாலும் ஊடகத்தினரை விட்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசவைக்கின்றனர்.
வரலாறு தெரியாமல்…
வட இந்தியாவில் பல ஊடகவியலாளர்களுக்கு இந்தியா மேப்பை காண்பித்து தமிழ்நாடு எங்கே இருக்கு என்று கேட்டால் கேரளாவையும் ஆந்திராவையும் இல்லையென்றால் சிறீலங்காவையும் காண்பிக்கும் கூட்டம் தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பை எப்படி பார்க்கும் என்பதுதான் நகைச்சுவை
சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இரவு பகலாக ஹிந்து முஸ்லீம் – ஹிந்து முஸ்லீம் என்று எழுதித்தள்ளும் பாஜக அய்டிவிங் செயல்பாட்டாளர், தூங்கும் போது விடும் குறட்டை கூட ஹிந்துZZzzzz ஹிந்துZZzzz என்ற ஓசையோடு குறட்டை விடுவாரோ என்னவோ? முதலமைச்சரின் ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான அனைத்து பதிவுகளிலும் அழையா விருந்தாளியாக வந்து ஆஜராகிவிடுவார்.
அவர் மார்ச் 2 ஆம் தேதி எழுதிய பதிவில் நீங்கள் ஏன் ஹிந்தியை எதிர்க்கிறீர்கள் என்றால் அதில் ஹிந்து என்ற வார்த்தை உள்ளது என்ற தத்துவ முத்தை உதிர்த்தார். அதாவது ஹிந்தி பேசுபவர்கள் ஹிந்துக்கள் அப்படி பேசாதவர்கள் ஹிந்துக்களின் எதிரி என்று எழுதித்தள்ளினார். .
மேதாவியின் கருத்து
மெத்தப் படித்து நூற்றாண்டுகால பழைமைவாய்ந்த என்று அவாளே பெருமைப்படும் ஆங்கில நாளேடு ஒன்றின் தலைமை எடிட்டராக உள்ளவரும் கோவிட் கிருமி தட்டுமுட்டு சாமான் ஓசையைக் கேட்டால் செத்துப்போகும் என்ற விலைமதிப்பற்ற தத்துவ முத்துக்களை உதிர்த்தவருமான மாலதி பார்த்தசாரதி என்பவர் தானும் ஹிந்திக்கு கூஜா தூக்கிக்கொண்டு ஓடிவந்தார்.
அவர் என்ன கூறினார் என்றால்?
“ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்துபோகும் என்ற அபத்தமான கொள்கைப் பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் கைவிட்டு, நமது மாநிலம் மொழி பன்முகத்தன்மையுடன் சுதந்திரமாக சுவாசிக்க அனுமதிக்க வேண்டிய நேரம் இது.
மொழி ஆணவம் என்பது மத ஆணவத்தைப் போலவே மோசமானது, முதலமைச்சரும் அவரது அரசாங்கமும் இந்த ஆணவப் பிரச்சாரத்தை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு தள்ளுவது வருத்தத்திற்குரியது. இந்த மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி, சமஸ்கிருதம் நமது புனிதமான பாரம்பரியத்தின் ஒரு பெரிய பகுதி என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
தமிழ் மொழி மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் தீவிரமாக ஊக்குவிக்கப்படுகிறது, அது எந்த வகையிலும் பின்தங்கிய நிலையில் இல்லை. மும்மொழிக் கொள்கைக்கு எதிரான இந்த பிரச்சாரம் அரசியல் உள்நோக்கத்துடன் கூடியது மற்றும் ஆபத்தான முற்போக்கற்றது என்பதை நாம் உணர வேண்டும். இப்பிற்போக்குத் தனமாக அரசியலால் தமிழ்நாட்டு மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர்” என்று ஆங்கிலத்தில் எழுதி தள்ளுகிறார்.
சான்று உண்டா?
தட்டுமுட்டு சாமானைத் தட்டினால் கரோனா கிருமி செத்துப் போகும் என்ற சிந்தனையோடு தெருவில் தனது வீட்டுப் பணியாளர்களோடு தட்டை கரண்டியால் தட்டிக்கொண்ட இவர் மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு இழந்தது என்ன என்ற புள்ளிவிபரத்தைக் கொடுக்கவேண்டும் அல்லது மும்மொழிக் கொள்கையைக் கொண்ட மாநிலங்களின் கல்வித்திறன் தமிழ்நாட்டை விட உயர்ந்துள்ளது என்பதை சான்றுகளோடு கொடுக்கவேண்டும்
அவரால் முடியாது – அவர்களுக்கு உள்ளத்தில் உள்ள ஒரே காழ்ப்புணர்ச்சி பார்ப்பனர் அல்லாதோர் பெரும் பட்டங்களைப் பெற்று உலகெங்கும் உயர்பதவிகளில் சென்று அமர்கிறார்களே. அதுவும் அமெரிக்கா லண்டன் சிட்னி எல்லாம் சென்று நம்மவாவிற்கு நிகராக சில இடங்களில் நம்மவாவிற்கும் மேலே உயர்பதவியில் உட்காருகிறார்களே இதற்கு எல்லாம் முக்கிய காரணம் இவாளின் இருமொழிக்கொள்கைதானே என்ற எரிச்சல் புழுக்கம் தாங்காமல் சாம்பலை அள்ளிப் பூசுவதுபோல் ஏதோ ஏதோ எழுதித் தள்ளுகிறார்
விழிப்புணர்வு
இவரைப் போன்ற அனைத்து மெத்தப் படித்த சங்கிக்கூட்ட மேதாவிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பிடிஆர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பதில் கூறிவிட்டார்.
இவர்களுக்கு எல்லாம் சேர்த்து முதலமைச்சர் தொடர்ந்து பதில் கொடுத்து வருகிறார். முதலமைச்சர் பதில்கள் எல்லாம் வடமாநிலத்தவர்களிடம் தஙக்ளின் தாய்மொழிபற்றிய விழிப்புணர்வை கொடுக்கவே சங்கிக் கூட்டங்கள் ஆப்பசைத்த குரங்கு போல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.