பார்ப்பனர்கள் மாநாட்டில் பார்ப்பன நீதிபதி பங்கேற்பதா?

Viduthalai
4 Min Read

நீதிபதிகளாக இருக்கக் கூடியவர்கள், ஜாதி, மத, அரசியல்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் சட்டத்தின் நிலைப்பாடு.
ஆனால் ஒன்றிய அதிகாரத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறி வருகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கக் கூடியவர்களே ‘பிராமண சங்க மாநாடுகளில்’’ பங்கேற்று பச்சையாக பார்ப்பனப் புகழ் புராணங்களை உபந்நியாசம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
கேரளாவில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் பங்கேற்றதுண்டு.
இப்பொழுது பெங்களூருவில் ‘பிராமண மகா சபையின் பொன் விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது.
அம்மாநாட்டில் கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் என்ற பார்ப்பனர் பங்கேற்றுப் பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடித்துப் பேசி இருக்கிறார்.
‘‘அரசமைப்பை உருவாக்கியதில் அவர்களுடைய பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அம்பேத்கர், ‘பி.என்.ராவ் மட்டும் வரைவை உருவாக்காவிட்டால், அரசமைப்பு தயாராவதற்கு, இன்னும் 25 ஆண்டுகளாகியிருக்கும்’ என, குறிப்பிட்டார்.

பிராமணர்கள் என்ற வார்த்தையை ஒரு -ஜாதியாக பார்ப்பதைவிட, வர்ணாசிரம தர்மத்துடன் பார்க்க வேண்டும். வேதங்களை தொகுத்த வேதவியாசர், மீனவப் பெண்ணின் மகன்; ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இவர்களை கீழானவர்களாக பிராமணர்கள் பார்த்தது இல்லை. ஹிந்து கடவுளான ராமரின் கருத்துக்கள், நம் அரசமைப்பிலும் இடம் பெற்றுள்ளன.’’ இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நீதிபதி சிறீசானந்தா, “மக்கள் கல்வி, உணவுக்காக போராடும்போது, இதுபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் தேவையா என்று விமர்சிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளே சமூகத்தினர் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன், பிரச்சினைகள் குறித்தும் பேச வைக்கிறது,” என குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரைப் பற்றியும் பேசி இருக்கிறார் ஒரு நீதிபதி.

அதே அம்பேத்கர்தான் மாநிலங்களவையில் ஆந்திர மாநில மசோதாமீது பேசியபோது ஒன்றைக் குறிப்பிட்டார் (2.9.1948).
‘நீங்கள்தானே அரசியல் சட்டத்தை உருவாக்கினீர்கள் என்று என் நண்பர்கள் கேட்கிறார்கள், உண்மையைச் சொல்லப் போனால் நான் ஒரு சவாரிக் குதிரையாகவே இருந்தேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டேனோ அதை என்னுடைய விருப்பத்திற்கு எதிராகவே செய்தேன். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்ல நான் தயாராகி விட்டேன். இந்த அரசியல் சட்டத்தை எரிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்!’’ என்றாரே! அதையும் பெங்களூரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பார்ப்பன நீதிபதி சொல்லாதது ஏன்?(உண்மையில் சட்டத்தை எரிந்தவர் தந்தை பெரியாரே!)
மேலும் அந்தப் பார்ப்பன நீதிபதி அம்மாநாட்டில் பேசியி ருக்கிறார். ‘‘வேதங்களை தொகுத்த வேத வியாசர் மீனவப் பெண்ணின் மகன். இராமாயணத்தை இயற்றிய வால்மீகி எஸ்.ஸி. அல்லது எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர். ஆனால் இவர்களைக் கீழானவர்களாக பிராமணர்கள் பார்த்தது இல்லை. ஹிந்துக் கடவுளான ராமரின் கருத்துகள் நம் அரசியல் அமைப்பிலும் இடம் பெற்றுள்ளன’’ என்று பேசியுள்ளார் அந்தப் பார்ப்பன நீதிபதி.
காரியம் ஆவதற்கு யாரையும் பயன்படுத்திக் கொள் வார்கள் பார்ப்பனர்கள். அண்ணல் அம்பேத்கர் மொழியில் அதைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

‘‘பார்ப்பனர்களுக்கு மகாபாரதம் தேவைப்பட்டது; ஒரு வியாசரை அழைத்துக் கொண்டனர்; இராமாயணம் தேவைப் பட்டது ஒரு வால்மீகியை அழைத்தனர். அவர்களுக்கு ஒரு அரசியல் சட்டம் தேவைப்பட்டது. என்னை அழைத்தனர்’’ என்று எவ்வளவு நேர்த்தியாகக் குறிப்பிட்டுள்ளார் அண்ணல் அம்பேத்கர்.
அரசியல் சட்ட உருவாக்கக் குழுவின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த இந்து சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் செய்தவர்கள் யார்? பார்ப்பனர்களும், அவர்களின் அடிமைகளும் தானே! கொள்கைதான் பெரியது – பதவியல்ல என்று அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிய பெருமகன்தான் அண்ணல் அம்பேத்கர்.
இராமாயணத்தை எழுதிய வால்மீகி எஸ்.ஸி. அல்லது எஸ்.டி. பிரிவைச் சார்ந்தவர். அவரைப் பிராமணர்கள் கீழானவராகப் பார்க்கவில்லை என்று கூறும் அந்த நீதிபதியைப் பார்த்து நாம் முன் வைக்கும் கேள்வி – அயோத்தியில் ராமன் கோயிலை ரூபாய் 1800 கோடி செலவில் கட்டினார்களே, அந்த விழாவிற்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசு தலைவரை அழைக்காதது ஏன்?
வால்மீகி இராமாயணத்தில் உத்தரகாண்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ – அதேகாரணம் தானே! தவம் செய்தான் சூத்திரன் சம்பூகன் என்பதற்காகத் தலையை வாளால் வெட்டிக் கொன்றவன் தானே இராமன் – இதற்கு என்ன சொல்லப் போகிறார் பார்ப்பன நீதிபதி?

தந்தை பெரியார் சிலை திறப்பு விழா மேடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. நாராயணசாமி முதலியார் உட்கார்ந்திருந்தார் (பேசக் கூட இல்லை) என்பதை வைத்து நீதிபதியாக இருக்கக்கூடிய ஒருவர் பெரியார் சிலை திறப்பு விழா மேடையில் உட்காரலாமா? என்று சரமாரியாகப் பார்ப்பன ஊடகங்கள் குற்றப் பத்திரிகை படிக்கவில்லையா?
இப்பொழுது பச்சயைாகப் பார்ப்பனர்கள் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹிந்து தர்மம் பற்றியும், வருண தர்மம் பற்றியும், ‘பிராமணர்கள்’ பற்றியும் நீட்டி முழங்குகிறார்களே – இதைப்பற்றி ஊடகங்கள் விமர்சிக்கத் தயங்குவது ஏன்? எழுதுகோலின் மை தீர்ந்து விட்டதா?

ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பிஜேபி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நிலையில் பார்ப்பனர்களுக்கு துளிர் விட்டுப் போய் விட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
பார்ப்பன நீதிபதி பார்ப்பன மாநாட்டில் பங்கேற்றதற்காக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டாமா? அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
நாடு எந்தத் திசையில் பயணிக்கிறது என்பதை நாட்டு மக்கள் உணர்வார்களாக!
நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே என்று தந்தை பெரியார் கூறியது கல்லின்மேல் எழுத்து – பார்ப்பனரல்லாதார் புரிந்து கொள்க! இனவுணர்வு கொள்க!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *