* பெரியாரை உலகமயமாக்கும் திட்டத்தில் நமது ஆஸ்திரேலிய பயணம்!
* தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கொள்கைகள் பரப்புரை!
* உலகம் முழுவதும் பெரியாரிய தோழர்களின் ஆர்வம் – ஒத்துழைப்பு மிகவும் பெரிது!
ஏப்ரலில் தமிழ்நாடு முழுவதும் சுழன்றடிக்கும் பிரச்சாரத் திட்டம்!
கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழியும் உடன் வருகிறார்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ள விருக்கும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்தும், ஏப்ரலில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளவிருக்கும் சூறாவளிச் சுற்றுப்பயணம் குறித்தும் அறிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது அறிக்கை வருமாறு:
பாசத்திற்குரிய கொள்கைக் குடும்ப உறவுகளே, பகுத்தறிவாளர்களே, இயக்கம், தமிழ், திராவிட உணர்வாளர்களான எம் அருமைத் தோழர்களே!
நம் அறிவாசான், பகுத்தறிவுப் பகலவன், ஒப்பாரும் மிக்காருமிலாத தலைவர் தந்தை பெரியாரை உலக மயமாக்க பற்பல நாடுகளிலும் நமது கொள்கை உணர்வாளர்களாயினும் மற்றும் அந்நாட்டுக் குடிமக்களாயினும் பெரியார் என்ற தொண்டற இமயத்தின் சிறப்பை உணர்ந்து, வியந்து பாராட்டி மகிழ்கின்றனர்! பல்வேறு நாட்டவர்களும் மகிழ்ச்சியோடு பெரியார் என்ற மனித சமத்துவ, சம உரிமை, போராயுதத்தின் குரலாகவும் எண்ணி உணர்ந்து வருவதால், எங்கும் பெரியார் தத்துவமும், அதேபோல மனித குலம் வேற்றுமையற்ற ஒரே உறவுகள் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் களத்தில் – களப் போர் தலைவராக ஒடுக்கப்பட்ட மக்களது சமத்துவத் தேவைக்காக மூச்சடங்கும் வரை உழைத்து, வரலாறு படைத்த சட்ட மேதை, உலக மகா சிந்தனையாளர் பாபா சாகேப் அம்பேத்கரின் தத்துவங்களும் உலகம் முழுவதும் பரவி வருகிறது!
தந்தை பெரியாரும் – அண்ணல் அம்பேத்கரும்!
காலத்தை வென்ற கருத்துக் களத்தில், அதன் அறி வொளி வீசி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதுகெலும்பாக தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் இரு பெரும் துணைகளாகி, புதியதோர் எழுச்சியை ஒரு துளி ரத்தம் சிந்தாது, உரிமை பெறும் புது யுகத்தின் அறப்போர் ஆயுதங்களாக உள்ளனர்!
வட அமெரிக்காவில் கடந்த 28 ஆண்டுகளுக்குமுன் தோற்றுவிக்கப்பட்ட பெரியார் பன்னாட்டமைப்பு டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களது ஆற்றல் மிகுந்த தலைமையில், ஆல்போல தழைத்து அருகுபோல் வேரோடி பல நாடுகளில் பரவி, அமைதிப் புரட்சியை அதன் உரிமைகளால் ஏற்படுத்தி வருவதுபோல, உலகின் பல நாடுகளும் தங்களுக்கான விடியல் தத்துவங்களின் பாடங்களாகி வருகின்றன. வற்றாத ஆர்வத்தை ஊட்டி வளர்க்கின்றன.
நமது ஆஸ்திரேலியப் பயணம்!
ஆஸ்திரேலிய நாட்டில் ‘‘பெரியார் – அம்பேத்கர் சிந்தனை’’ வட்டம் முனைவர் அண்ணாமலை மகிழ்நன் அவர்களின் குழுவினரால் தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. அவர்களும் சிறந்த தமிழ், திராவிட கொள்கை உணர்வாளர்களும் பரப்புரை மற்றும் சில ஆய்வரங்கங்களையும் நடத்தி வருகின்றனர். நம்மை சில ஆண்டுகளாகவே அழைத்தாலும், நமது பல்வேறு பணிச் சுமைகளுக்கிடையில், அது தள்ளிப் போடப்பட்டே வந்தது; இம்முறை அவர்களது அன்பு கட்டளைப் பிடியினை நம்மால் தவிர்க்க முடியவில்லை.
எனவே, சுமார் இரண்டு வாரங்கள் பல மாநி லங்களின் முக்கிய பெருநகரங்களில் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு, எமது உலகளாகவிய கொள்கை உறவுகளோடு கலந்துரையாடும் அரிய வாயப்பையும் பெற்று புத்தாக்கம் பெற ஆயத்தமாகிப் புறப்படுகிறோம்.
சிட்னி, பிரிஸ்பேன், கேன்பெர்ரா, மெல்போர்னில் நமது பிரச்சாரத் திட்டம்!
ஆஸ்திரேலியாவில் சிட்னி, பிரிஸ்பேன், கேன்பெர்ரா, மெல்போர்ன் போன்ற சில முக்கிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ்நாடு திரும்பவிருக்கிறோம்.
கால நேர வித்தியாசம் (Time Zone) காரணமாக – பயண நேரங்கள் நாள்கள் கணக்கில் இருந்தாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டுத் தோழர்கள் இடைவெளி ஓய்வு தந்தே – (நமது உடல்நலத்தை கவனத்தில் கொண்டும்) ஏற்பாடு செய்து மிகுந்த பொறுப்புணர்வுடன் திட்ட மிட்டுள்ள அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது!
‘‘பெரியார் உலக மயம்
உலகம் பெரியார் மயம்’’
என்ற நமது முழக்கம் அங்கே!
அம்பேத்கர் பெயரில்லையா? என்று கேட்கத் தேவையில்லை. பெரியாரும், அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் அல்லவா? எனவே, ஒருவர் மற்றவர் நினைவு, அவர்களது அணுகு முறைகள், வேலைத் திட்டங்களில் வேறுபாடு, மாறு பாடு கிடையாது.
அடிப்படைத் தத்துவங்கள், மனித சமத்துவம், ஜாதியற்ற பேதமற்ற புதிய உலகு – வேற்றுமையற்ற மனித சகோதரத்துவமான ‘‘யாவரும் கேளிர்’’ என்பதை எவரே மறக்க முடியும்?
நமது பயணத்தில், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழியும் பங்கேற்பு!
தற்போது நமது ‘திராவிட மாடல்‘ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களின் உரிமைக்கும் களம் காண ஆயத்தமாகியுள்ளார். வெளிநாடு சுற்றுப்பய ணம் முடித்து, தமிழ்நாடு திரும்பியதும், போர்க் குரலின் தேவைகளை மக்களுக்குப் பரப்புரை செய்திட ஆயத்தமாவோம் – ஏப்ரல் இரண்டாவது அல்லது மூன்றாம் வாரம் வரை – எங்கெங்கும் சூறாவளி பிரச்சாரப் பயணம் வழமைபோல தமிழ்நாட்டில் தொடர விருக்கிறோம்.
ஆஸ்திரேலிய பரப்புரைப் பயணத்தில் நமது கழகப் பிரச்சார செயலாளர் நம் அருமை வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களும் எல்லா நிகழ்ச்சிகளிலும் என்னுடன் கலந்துகொண்டு, கொள்கைப் பயணத்தை எளிதாக்கிட முனைந்துள்ளார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்!
உலகத் தோழர்களுக்கு நன்றி!
‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.’’ என்ற குறள் வழியில் எமது கடமையாற்றும் பணியை ஆர்வத்துடன், அடக்கத்து டன் நடத்திட ஊக்கப்படுத்தியுள்ள நமது உலகத் தோழர்களுக்கு எமது நன்றி! நன்றி!!
நமது இயக்க வரலாற்றில், அதுவும் தந்தை தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் இது புதிய ஊக்கமும், உற்சாகமும் தரும் வாய்ப்பல்லவா?
சென்று வருகிறோம்! கழகப் பிரச்சாரம் எங்கும் தொடரட்டும்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
7.3.2025