இந்து மத இணையருக்குத் திருமணம் நடத்தி வைத்த முஸ்லீம் லீக்
மலப்புரம், ஜூலை 11- கேரள மாநிலம் மலப் புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். இந்நிலையில், மலப்புரம் மாவட்டம் வெங்காரா நகரில் உள்ள சிறீஅம்மஞ்சேரி பகவதி கோயிலில் கீதா மற்றும் விஷ்ணுவுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் (அய்யுஎம்எல்) வெங்காரா பஞ்சாயத்து 12 ஆவது வார்டின் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் அய்யுஎம்எல் மூத்த தலைவரும் வெங்காரா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பி.கே. குன்ஹாலி குட்டி மற்றும் மாநில தலைவர் சையது சாதிக் அலி ஷிஹாப் தங்கல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிர முகர்களும் கலந்து கொண்டனர்.
பாலக்காடு நகரில் உள்ள பெண்கள் மறுவாழ்வு இல்லத்தில் (ரோஸ் மனார் ஷார்ட் ஸ்டே ஹோம்) வசித்து வந்தவர் மணமகள் கீதா. பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்த இல்லம் அடைக்கலம் கொடுத்து வருகிறது. இந்த இல்லத்தை முஜாஹித் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறது. கீதா, விஷ்ணு திருமணத்துக்கான ஏற்பாடுகளை ரோஸ் மனார் கண்காணிப்பாளர் செய்தார். அய்யுஎம்எல் இளைஞர் அணியினர் திருமணத்துக்கான நிதியுதவியை செய்தனர். மணமகன் விஷ்ணு கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்களத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மண்ணின் ஒற்றுமைக்கு சாட்சி: இதுகுறித்து குன்ஹாலிகுட்டி தனது முகநூலில் வெளியிட்ட பதிவில், “இன்று கோயில் முற்றம் என் மண் ணின் ஒற்றுமைக்கும் நட்புக்கும் சாட்சியாக இருந்தது. இந்த நிகழ்வு ஒரு நல்ல செய்தியை தருவதாக அமைந்துள்ளது. திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் விஷ்ணு, கீதாவுக்கு வாழ்த்துகள். அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து இந்த திருமணத்துக்கு ஆதரவு வழங் கிய கோயில் நிர்வாகத்தினருக்கு நன்றி” என கூறியுள்ளார்.
கேரளாவில் நீண்டகாலமாக காங்கிரஸ் கூட்டணியில் அய்யுஎம்எல் கட்சி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.