சென்னை, மார்ச் 7 தமிழ்நாடு ஆழ் கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி யுள்ளார்.
ைஹட்ரோ கார்பன்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடல் பகுதிகளில் 30 ஆயிரம் சதுர கிமீ பரப்பிலும், ஆழமான கடல் பகுதியில் 95 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் கண்டறிந்துள்ளது. தமிழ்நாடு ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை கடந்த மாதம் 11-ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது. குறிப்பாக திறந்த வெளி அனுமதி அடிப்படையில் 10-ஆவது சுற்று ஏல அறிவிப்பில் ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் பகுதியில் 9,990 சதுர அடி பரப்பில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.
கைவிட வேண்டும்
இதனை ரிலையன்ஸ், வேதாந்தா, ஒஎன்ஜிசி, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இந்த கடல்பகுதிகளை ஒன்றிய அரசு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. இது கடல்வாழ் உயிரினங்களையும் மீன்பிடிப் பொருளாதாரத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். மீன்வளம் பாதித்தால் ராமநாதபுரம், குமரி உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, ஒன்றிய அரசு தமிழ்நாட்டு ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.