கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் தாகம் தீர்த்திட தண்ணீர் பந்தல் அமைத்திடுக! தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!

viduthalai
3 Min Read

சென்னை, மார்ச் 6 கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தண்ணீர் பந்தல்

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திமுக தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடைக்கால வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி, மார்ச் மாத தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களை இந்த கோடைக் கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில், திமுக சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மாநகர, நகர, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் – மக்கள் அதிகம் கூடும் இடங்களான தெருமுனைச் சந்திப்புகளிலும் – சாலை மற்றும் தெருக்கள் ஓரமாகவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் “தண்ணீர் பந்தல்” அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரிக்க வேண்டும்.!
உச்சநீதிமன்றத்தில் வாதம்

புதுடில்லி, மார்ச் 6 தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்று கூறி விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சிபிஅய் விசாரணை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்’ என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

மேலும் விசாரணை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு அதிகாரிகள் எஸ்.சந்திரன், சலேஷ் குமார் உட்பட சிலர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ‘அதிகாரிகளின் சொத்து விவரங்களை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை விசாரிக்க வேண்டும்’ என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று (5.3.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய எங்களுக்கு நான்கு வாரம் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மீண்டும் விசாரணை

தொடர்ந்து எதிர்மனுதாரர் ஹென்றி திபேன் தரப்பில் ஆஜரான வழக்்குரைஞர், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில் அருணா ஜெகதீசன் கமிட்டி அமைக்கப்பட்டதால் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை கைவிட்டது. எனவே இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். அதுதான் எங்களது பிரதான கோரிக்கையாக உள்ளது’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின்னர் வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம். அப்போது இந்த விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடருமா அல்லது ரத்து செய்ய வேண்டுமா என்று குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். அதுவரையில் தற்போதைய நிலையே தொடரும்’ என்று உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில்
அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை நிலவும்
வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, மார்ச் 6 தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 30-36 டிகிரி செல்சியஸ் மற்றும் தமிழ்நாட்டில் கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *