தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
நேற்று (5.3.2025) சென்னை தலைமைச் செயல கத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டமும், நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் – வர லாற்றின் வைர வரிகளாகும்.
25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை அடிப்படையிலான ‘‘நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு‘‘த் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றினை நமது ‘திராவிட மாடல்‘ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டினார்.
காலத்தால் செதுக்கப்பட்ட கல்வெட்டுச் சாசனம்!
காலத்தாற் செதுக்கப்பட்ட கல்வெட்டுச் சாசனம் என்றே இதனைக் கூறவேண்டும்.
வரும் 2026 ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று நிர்ணயிக்கப்படும் சட்ட ரீதியான முறை இது.
இதற்குமுன் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 543 உறுப்பினர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டிற்கு 39 உறுப்பினர்களும் கிடைத்துள்ளனர். 2001 ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு என்பது 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது – பழைய எண்ணிக்கையே தொடர்ந்தது.
இப்பொழுது 2026 ஆம் ஆண்டில் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பின்படி மாநில வாரியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்தால், தமிழ்நாடு உள்பட, தென் மாநிலங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி அடையும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எட்டு இடங்களை இழக்க நேரிடும்.
கொள்கையை நிறைவேற்றினால் தண்டனையா? இதற்குக் காரணம் என்ன?
மக்கள் தொகைக் கட்டுப்பாடு (Family Planing) என்ற தேசியக் கொள்கை செம்மையாக நிறை வேற்றப்பட்டதால், தென் மாநிலங்கள், அதிலும் குறிப்பாக தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்படும். நாடாளு மன்றத்தில் தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் கீழே தள்ளப்படும்; 39 இடங்கள் 31 ஆகக் குறையக்கூடிய நிலைக்கு ஆளாகும்.
நூறாண்டுக்கு முன்பே ‘‘கர்ப்ப ஆட்சி!‘‘
1928 ஆம் ஆண்டு முதற்கொண்டே கர்ப்பத் தடை யின் அவசியத்தை – மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்து வந்தவர் தந்தை பெரியார். ‘‘கர்ப்ப ஆட்சி’’ என்ற நூலையும் வெளியிட்டார். பிள்ளைப் பெறும் இயந்திரமா பெண்கள் என்ற பெண்ணு ரிமைக் கண்ணோட்டத்தில் கருத்துகளைப் பரப்பி வந்தது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இதில் முதனிலை என்னும் மகுடம் சூட்டிய மாநிலமாக ஜொலித்தது.
‘‘நாம் இருவர் – நமக்கு இருவர்’’ என்ற மனப்பான்மை மண்ணின் மைந்தர்களின் மனப்பான்மை யாகவே மாறிவிட்டது. தமிழ்நாட்டின் வாழ்க்கை வளத்திற்கு, குடும்பங்களின் சீர்மைக்கு இது அடித்தள மாயிற்று.
வெற்றிகரமாக ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை நிறைவேற்றிய கார ணத்துக்காக – சாதனைக்காக கேடயம் வழங்குவதற்குப் பதிலாக, ஒன்றிய பி.ஜே.பி. அரசு சாட்டையை எடுத்துத் தமிழ்நாட்டைத் தண்டிக்கிறது. வெற்றி அடைந்தவருக்குத் தோல்விப் பரிசும், தோல்வி அடைந்தவருக்குத் தங்கமெடல் வழங்குவதுதான் – மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி சீரமைப்பு என்ற ‘‘தண்டனை’’ போலும்! என்னே விசித்திரம்!!
ஹிந்தி பேசும் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், அந்த மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதாவது ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்ற கொள்கையை செயல்படுத்தாததால், அவர்களுக்கு ‘‘பம்பர் லாட்டரி!‘‘
நாட்டை ஆள்பவர்கள் ஹிந்திவாலாக்களா?
உ.பி., பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் என்கிற ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில் வெற்றி பெற்றாலே ஒன்றிய ஆட்சி யைப் பிடித்துவிடலாம். 324 உறுப்பினர்களை அள்ளிக்கொண்டு போவார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், நாட்டை ஆளக்கூடியவர்கள் ‘‘ஹந்திவாலாக்களாகவே’’ இனி இருப்பார்கள்!
இந்த அடிப்படையில்தான் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் 848 உறுப்பினர்களுக்கான இருக்கைகளுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதுள்ள விகிதாசாரப்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்கும். ஆனால், மாறாக புதிதாகக் கொடுக்கப்படும் மக்கள் தொகையின்படி மறு சீரமைப்புச் செய்தால், வெறும் 10 தொகுதிகள்தான் நமக்குக் கிடைக்கும். 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.
வெறும் எண்ணிக்கையை மட்டும் பொறுத்ததல்ல!
இது வெறும் எண்ணிக்கையை மட்டும் பொறுத்த பிரச்சினையல்ல; நமது மாநிலத்திற்கான பிரதிநிதித்துவம் சரிந்தால், நமது உரிமைக் குரலின் மென்னி நெரிக்கப்படும்.
நமக்குக் கிடைக்கவேண்டிய நிதியிலும் கை வைக்கும் நிலை ஏற்படும்.
தாழ்த்தப்பட்டோர், மகளிர் இட ஒதுக்கீடும் பாதிக்கப்படும்!
தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளின் எண்ணிக்கையும் ‘இளைத்து’ விடும். நாடாளுமன்றத்தில் பெண்களுக்காக 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் கொண்டு வரப்படும் என்று சொல்லப்படுகிறதே, அதிலும் பெண்கள் வஞ்சிக்கப்படுவார்கள்; மாநிலங்களவை உறுப்பினர்க ளின் எண்ணிக்கையும் குறையும்.
இவ்வளவுப் பெரிய – படுபாதாளத்தில் தள்ளப்படும் ஆபத்து – முதலமைச்சரின் வாசகப்படி சொல்ல வேண்டுமானால், ‘‘நமது தலைக்குமேல் தொங்குகின்ற கத்தி’’யாகும்.
இவ்வளவுப் பெரிய ஆபத்தை –
‘‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்’’ (435) என்ற குறளோடு ஒப்பு நோக்கவேண்டும்.
ஜனநாயகக் கழுத்துக்குமேல் தொங்கும் தூக்குக் கயிற்றைத்
துண்டித்தார் நமது முதலமைச்சர்
துண்டித்தார் நமது முதலமைச்சர்
இதைத்தான் நமது மானமிகு முதலமைச்சர் இந்தியத் துணைக் கண்டத்திலேயே நுண்மாண் நுழைபுலம் நோக்கி, முதல் குரல் கொடுத்து, முன் கையும் நீட்டி யுள்ளார்.
அகில இந்திய ஜனநாயகத்தின் கழுத்துக்கு மேல் தொங்கும் தூக்குக் கயிற்றை – முண்டியடித்து ஓடி துண்டித்த பெருமை நமது மானமிகு மாண்புமிகு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்!
நன்றியும் – வணக்கமும்!
இதற்காக ஜனநாயகத்தில் நம்பிக்கையும், எதேச்சதி காரத்துக்கு எதிர்நிலை எண்ணமும் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்து குடிமகன்(ள்) ஒவ்வொருவரும் கம்பீரமாகக் குரல் கொடுத்து நன்றி வணக்க முழக்கமிடவேண்டும்.
இந்த வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் சூரிய வெளிச்சத்தைக் கொடுத்துள்ளார் நமது மானமிகு முதலமைச்சர்.
நாக்குக்குத் ‘தேன் தடவும்’ உள்துறை அமைச்சர்
‘‘உங்கள் மாநிலத்திற்கான நாடாளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கை குறையாது’’ என்று நமது நாக்குக்குத் தேன் தடவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹிந்தி மாநிலங்களுக்கான எண்ணிக்கை உயரும் என்பதை மறைப்பானேன்?
இதுதான் அவர்களுக்கே உரிய தந்திரமும், சூழ்ச்சியு மாகும். இன்று நேற்று வந்ததல்ல – அவர்களின் இரத்தத்தில் பல்லாண்டு பல்லாண்டு காலமாக ஓடும் பிறவிக் குணமாகும் இது!
திராவிட சித்தாந்தத்தில் பயிற்சி பெற்றவர்!
தந்தை பெரியார் வழியில், திராவிட சித்தாந்தத்தில் பயிற்சிச் சிலம்பம் கற்றவராயிற்றே நமது முதலமைச்சர் – அவரிடம் பலிக்குமா இவர்களின் பஞ்ச தந்திரப் பதுங்கல்களும் – பாயச்சல்களும்?
இவற்றையெல்லாம்விட வான் உயரும் சிறப்பு ஒன்று உண்டு. கட்சி அரசியலை இதில் புகுத்தாமல் – தமிழ்நாட்டின் உரிமை நலன் என்ற ஒற்றைப் புள்ளியில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து இணைத்துக் காட்டி, ஒருமனதான தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டிவிட்டாரே – இது அரசியல் – சமூக வரலாற்றின் கடைசி நுனிவரை மின்னிக் கொண்டிருக்கும்.
தனிமைப்படுத்தப்பட்ட பா.ஜ.க. என்னும் பாசிசம்!
அதைவிட பாசிச பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்திய வியூகத்தை வெற்றிகரமாக வகுத்து சாதனைப் படைத்தி ருக்கிறாரே – இவரல்லவா அரசியல் விவேகி – வியூகி! அவரது கிரீடத்தின் ஒளிமுத்து இது!
‘‘நாங்கள் எல்லோரும் ஓரணிதான்!’’
மற்றொன்றை முக்கியமாகச் சுட்டிக்காட்ட வேண்டும். மற்ற எல்லாவற்றிலும் எதிரும் புதிருமாக இருந்த தலைவர்களையும், அமைப்புகளையும், தமிழ்நாட்டுக்கான பொது உரிமை, பொதுப் பிரச்சினை என்று வந்துவிட்டால், மற்றவற்றையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, இங்கு நாங்கள் எல்லோரும் ஒரே அணிதான், ஒரே இனம்தான் என எம்மினத் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்திக் காட்ட வைத்துவிட்டாரே!
குள்ள நரிகள் வாலாட்டிப் பார்க்கவேண்டாம்! இது பெரியார் பிறந்த மண்! திராவிட சித்தாந்த வேரும், நீரும் ஒன்று கலந்த வேளாண்மை மண் – விளையாடிப் பார்க்கவேண்டாம்!
சென்னையில் நேற்று (5.3.2025) நிறைவேற்றப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானம் தீர்க்கமாக இந்தியத் துணைக் கண்டத்தின் பார்வையையே கூர்மைப்படுத்தும்.
துல்லியமான ஏற்பாடுகள்!
வெறும் தீர்மானமாக மட்டுமல்லாமல், ஆக்கப்பூர்வமாக தமிழ்நாடு மட்டுமல்லாமல், தென் மாநிலங்களிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படும் என்ற முடிவும் – பாசிஸ்டுகளை மிரளச் செய்யும்!
சரியான நேரத்தில், காலம் கருதிக் கூட்டப்பட்ட கூட்டம் – அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒருங்கி ணைத்த நேர்த்தி, துல்லியமான ஏற்பாடுகள், வரவேற்பு கள் ஒவ்வொன்றும் ‘திராவிட மாடல்‘ அரசின் செயல்திறனுக்கானதோர் எடுத்துக்காட்டு!
தன் செயல்திறன்மூலம் மிக உயரத்திற்குச் சென்று விட்டார் நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்!
ஒன்றிடுவோம்! வென்றிடுவோம்!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
6.3.2025