புதிய கிளை கழக அமைப்புகள் உருவாக்கப்படும்
கிருட்டினகிரி, மார்ச்5- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.3.2025 அன்று காலை 11.00 மணியளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் கூட்டரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்து கிளைகழக அமைப்புகளை துரிதப்படுத்தும் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தின் தொடக்கத்தில் திராவிட மாணவர் கழகத் தோழர் ஆ.ஆர்த்தி கடவுள் மறுப்புக் கூறினார்.
கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தூர் கி.முருகேசன் காவேரிப் பட்டணம் இல. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சீனிமுத்து. இராசேசன், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை கழக செயல்பாடுகளையும் விளக்கி, மாவட்ட, ஒன்றிய, நகர கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் செயலாற்ற வேண்டிய செயல்பாடுகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார். நிறைவாக அனைத்து பொறுப் பாளர்களுக்கும் தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப் பித்தார்.
முதலாவதாக தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் மாநில ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஊமை செயராமன் அவர்களுக்கு – கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி சால்வை அணிவித்து சிறப்பித்தார்.
மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் நம் கழகத் தோழர் அவ்வப்போது நேரில் சந்தித்து கலந்துரையாடினால் இயக்கப் பணிகளை மேலும் துரிதமாக எடுத்துச் செல்லமுடியும் என்ற செயல்பாடுகளை விளக்கி கருத்துரையாற்றினார்.
கூட்டத்தில் கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, செயலாளர் கி.வேலன், ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, காவேரிப் பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், கிருட்டினகிரி நகர செயலாளர் அ.கோ.இராசா, மாவட்ட ப.க.துணைத் தலைவர் அ.வெங்கடாசலம், மாவட்ட ப.க.துணைச் செயலாளர் மா.சிவசங்கர், ஊற்றங்கரை ஒன்றிய ப.க.தலைவர் இராம.சகாதேவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா. சிலம்பரசன், மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மத்தூர் ஒன்றியத் துணைத் தலைவர் சா.தனஞ்செயன், இராமாபுரம் எம்.இரஞ்சித் ஆகியோர் பேசி னர். கூட்டத்தில் மாவட்ட தொழிலாளரணி செ.ப.மூர்த்தி, மாவட்ட மகளிரணி உண்ணாமலை, சந்தூர் கோ.பிரேம்குமார், பையூர் வி.சரவணன், ஆ.மணிக்கொடி, முத்துவேல், பி.பகத்சிங், ஒருங்கிணைப்பாளரின் உதவியாளர் தருமபுரி சி.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் நன்றி கூறினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
இரங்கல் – கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் கலைமகள் கலாலைய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனரும் தனது பள்ளி வளாகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையை நிறுவிய சீரிய பெரியார் சிந்தனை யாளருமன மேனாள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் சிந்தை மு.இராசேந்திரன் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
கடந்த பிப்பரவரி-15 – அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் ஒரு மனதாக ஏற்று செயலாற்றுவது என இம்மாவட்டக் கூட்டம் தீர்மானிக்கப்படுகிறது.
அறிவுலக பேராசன் தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்து இயக்கப் பணியாற்ற உற்ற துணையாக இருந்து பாதுகாத்துவந்த அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்தநாள் மார்ச் 10-அன்று அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, “அவரது பிறந்தநாளையொட்டி ஒரு ஆண்டுக்கான வேலை திட்டமாக” (2025 – மார்ச் முதல் 2026 மார்ச்சுக்குள்) கிருட்டினகிரி மாவட்டத்தில் புதியதாக 50 கிளை கழக அமைப்புகளை உருவாக்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழுக்கும், இயக்க இதழ்கள் உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட், திராவிடப் பொழில் இதழ்களுக்கு தொடர்ந்து சந்தாக்களை திரட்டி வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மிகப் பெரிய வரலாற்று திட்டமான திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் அமைக்கும் பெரும் பணிக்கு ஒவ்வொரு கழகத் தோழர்களும் சிறு துளி பெருவெள்ளம் என்கிற அளவில் பெருமளவில் பெரியார் உலகம் பெரும் பணிக்கு நிதிகளை திரட்டி வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
கழக மாநில ஒருங்கிணைப் பாளராக தருமபுரி ஊமை. ஜெயராமனையும், கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக அமைப்பிற்கு புதிய பொறுப் பாளர்களையும் அறிவித்துள்ள தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியும், புதிய நிர்வாகிகளுக்கு இம் மாவட்ட கூட்டம் வாழ்த்துகளை தெரிவித்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது .
கிருட்டினகிரி விடுதலை வாசகர் வட்டத் தலைவரும் கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக புரவலருமான சாயிராம் பர்னிச்சர் உரிமை யாளர் வெ.நாராயண மூர்த்தி அவர்கள் கூட்டத்தின் நிறைவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி மகிழ்வுகளை பகிர்ந்துக்கொண்டார். அவருக்கு மாவட்ட கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.