பாலியல் வன்கொடுமை எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது. அதற்குக் காரணமான குற்றவாளிகள் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு முதலிய சமூகப் பணிகளில் ஈடுபட்ட பன்வாரிதேவியை உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் பெண்ணின் கணவனுக்கு முன்னிலையிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தினர்.
உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்குச் சென்றபோது, அந்த உயர் ஜாதி மருத்துவர்களும் சான்றிதழ் தராமல் தாமதப்படுத்தினர்.
வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தப் பார்ப்பன நீதிபதிகள் சொன்னதுதான் அதிர்ச்சிக்குரியது.
‘பிராமணர்கள் ஒரு கீழ் ஜாதிப் பெண்ணைப் பலாத்காரம் செய்தனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இந்த யோக்கியதை உள்ளவர்கள்தான் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூக்குரல் போடுகின்றனர்.
இப்பொழுது மகாராட்டிர மாநிலத்தில் ஒரு பிரச்சினை புயலாக வீசுகிறது.
பிஜேபி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராட்டிராவில் பிஜேபியைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் மகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய இணை அமைச்சர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராட்டிராவில் பிஜேபி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் சிவசேனா (ஷிண்டே), அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மகாராட்டிராவின் புனே பேருந்து நிலையத்தில் அதிகாலையில் இளம் பெண் ஒருவர் குளிர்சாதனப் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இந்த அதிர்வலைகள் ஓய்வதற்குள் அதே மகாராட்டிராவின் ஜல்காவ் மாவட்டத்தில் ஒன்றிய பெண் இணை அமைச்சரின் மகள் பாலியல் தொல்லையை எதிர்கொண்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜல்காவ் மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றிய பெண் இணை அமைச்சரின் மகளும், தோழிகளும் பங்கேற்றனர்.
ஒன்றிய இணை அமைச்சரின் மகள் உள்ளிட்டோருக்கு இந்த சிவராத்திரி யாத்திரையில் பங்கேற்ற 40 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளது. மேலும் ஒன்றிய இணை அமைச்சரின் மகள் உள்ளிட்டோரை நிழற்படம், காட்சிப் பதிவு எடுத்தும் அச்சுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களோ,
‘‘பாஜக ஆட்சி நடைபெறும் மகாராட்டிராவில் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சரின் மகளுக்கே பாதுகாப்பு இல்லை; அப்படியானால் சாமானிய பெண்களின் நிலை என்னவாகும்?’’ என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்களில் அமைச்சர் வீட்டுப் பெண்களுக்கே பாலியல் வன்கொடுமை நடப்பது பற்றி எல்லாம் இங்குள்ள பிஜேபி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் பேச மாட்டார்கள்.
ஊருக்கு இளைத்தது தி.மு.க. ஆட்சி என்று கருதி, பிஜேபி கும்பலும், உயர் ஜாதி ஊடகங்களும் ஊதிப் பெருக்கிக் காட்டுகி்ன்றன.
பாலியல் வன்கொடுமை எங்கு நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியதுதான் – குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்! தமிழ்நாடு அரசு அத்தகைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் செய்திருப்பது குறிப் பிடத்தக்கதாகும்.
கல்வி நிறுவனங்களில் பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியும், தாக்க வருகின்றவர்களைத் தாக்கும் பயிற்சியும், தேவைப்பட்டால் துப்பாக்கி உரிமம் அளிக்கப்பட வேண்டியதும் மிகவும் அவசிய மாகும்.