சென்னை,மார்ச் 5- இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், இந்திய புவியியல் ஆய்வுத் துறையின், 175ஆவது நிறுவன நாளையொட்டி, ஓய்வுபெற்ற அதிகாரிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று (4.3.2025) நடந்தது.
அதில், பொது துணை இயக்குநர் அஜய்குமார் பேசுகையில், ”திருவண்ணாமலை உள்ளிட்ட சில பகுதிகளில், பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன,” என்றார்.
பின், இந்திய புவியியல் ஆய்வு மய்ய இயக்குநர் விஜயகுமார் அளித்த பேட்டி:
மழை, வெயில் போல நில அதிர்வும் இயற்கையானது தான். தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக நில அதிர்வின் பதிவு அதிகமாக உள்ளது. கருங்கல் பாறைகள் மீது சென்னை நகரம் அமைந்துள்ளது.
அதனால், சென்னையில் நில அதிர்வு குறித்து பயப்பட வேண்டிய சூழல் இல்லை. ஆனால், கடலோர பகுதிகளை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அங்கு உயர்ந்த கட்டடங்கள் கட்டாமல் இருப்பது நல்லது. அங்கு நில அதிர்வு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் சில பகுதிகளில், தங்கம் மற்றும் இதர கனிம வளங்கள் உள்ளன.
அரசுக்கு அறிக்கை
நாடு முழுதும் உள்ள கனிம வளங்கள் குறித்து புவியியல் ஆய்வு நடத்தி, ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்த போது, அலைபேசிக்கு பேட்டரிக்கு பயன்படுத்தப்படும், ‘லித்தியம்’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுகுறித்து, ஆய்வு செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து, அரசிடம் ஏற்கெனவே தெரிவித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. புவியியல் குறித்து விளக்கும் வகையில், அய்ந்து அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தமிழ்நாட்டில் இன்றுமுதல் வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் இன்று (மாா்ச் 5) முதல் வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது குறித்த வானிலை மய்யம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதன்கிழமை (மாா்ச் 5) முதல் மாா்ச் 8 வரை அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இன்று (5.3.2025) அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித் துறையில் பார்வையற்றவர்களுக்கு
வேலை வாய்ப்பை மறுக்கக் கூடாது
உச்சநீதிமன்றம்
புதுடில்லி, மார்ச் 5- நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல எனக் கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பார்வையற்றோர் பணிகளில் சேர முடியாது
மத்தியப் பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள்) விதிமுறைகள் 6ஏ-இன்படி, அந்த மாநிலத்தில் பாா்வைக் குறைபாடு கொண்டவா்கள், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நீதித் துறைப் பணிகளில் சேர முடியாது.
இந்த விதிமுறை தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பா் 3-ஆம் தேதி தீா்ப்பை ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு நேற்று முன்தினம் (3.3.2025) தீா்ப்பளித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நீதித் துறையில் பணியில் சேர முயற்சிக்கும் மாற்றுத்திறனாளிகள் எந்தவிதமான பாகுபாட்டையும் எதிா்கொள்ளக் கூடாது. அவா்களுக்கு சாதகமாக உதவும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
சமத்துவம் நிலைநாட்டுக!
கட்-ஆப் மதிப்பெண், நடைமுறைகள் காரணமாக மறைமுக பாகுபாட்டை எதிா்கொண்டு, அதனால் நீதித்துறை பணிகளில் சோ்க்கப்படாமல் மாற்றுத் திறனாளிகள் தவிா்க்கப்படுவதில் தலையிட்டு, சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி என்ற ஒரே காரணத்துக்காக நீதித்துறை பணிக்கான பரிசீலனையில் அவா்கள் நிராகரிக்கப்படக் கூடாது.
நீதித்துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூற முடியாது’ என்று தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து மத்தியப் பிரதேச நீதித்துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள்) விதிமுறைகள் 6ஏ-அய் நீதிபதிகள் ரத்து செய்தனா். இந்தத் தீா்ப்பு மூலம், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் நீதித்துறை பணிகளுக்கான ஆள்தோ்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவா்கள் என்று தெளிவுபட நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.