சென்னை,மார்ச் 5- முதல்வர் மருந்தகம் திட்டத்தால் 50,053 பேர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பல்வேறு மனிதநேயத் திட்டங்களில் ஒரு மாபெரும் வெற்றித் திட்டம் “முதல்வர் மருந்தகம்” திட்டம் 8 நாட்களில் ரூ.27 இலட்சத்திற்கு மேல் மருந்துகள் விற்பனை! ரூ.7 இலட்சத்து 68 ஆயிரத்து 766 ரூபாய் மக்களுக்கு சேமிப்பு! 50 ஆயிரத்து 53 பேர் பயனடைந்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனிதாபிமான உணர்வோடு ஏழை எளியவர் மீது கருணைகொண்டு அவர்களுக்கு உதவுவதற்காக இந்தியாவிலேயே புதுமையாக முதல் முறையாக ஒரு திட்டடத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
அந்தத் திட்டம்தான் முதல்வர் மருந்தகம் திட்டம். தமிழ்நாடு முழுவதிலும் தனியார் மூலமாக 462 முதல்வர் மருந்தகங்களும், கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக 538 முதல்வர் மருந்தகங்களும் ஆக மொத்தம் 1,000 முதல்வர் மருந்தகங்கள் முதலமைச்சர் அவர்களால் கடந்த 24.2.2025 அன்று தொடங்கிவைக்கப்பட்டன. இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்ட கடந்த 8 நாட்களில் அதாவது 3.3.2025 வரை முதல்வர் மருந்தகங்களில் தனியார் கடைகளில் 13 இலட்சத்து 73 ஆயிரத்து 449 ரூபாய்க்கும், கூட்டுறவு நிறுவனக் கடைகளில் 13 இலட்சத்து 69 ஆயிரத்து 380 ரூபாய்க்கும் மொத்தம் 27 இலட்சத்து 42 ஆயிரத்து 829 ரூபாய்க்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த கடைகளில் வாங்கப்படும் மருந்துகளின் விலையில் 50 % முதல் 75 % வரை குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கடந்த 8 நாட்களில் பொதுமக்களுக்கு 7 இலட்சத்து 68 ஆயிரத்து 776 ரூபாய் சேமிப்பு கிடைத்திருக்கிறது.
தனியார் நடத்தும் கடைகளில் 22 ஆயிரத்து 332 பேரும், கூட்டுறவு நிறுவன முதல்வர் மருந்தகங்களில் 27 ஆயிரத்து 721 பேரும் என மொத்தம் 50 ஆயிரத்து 53 பேர் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் 1,000 பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். தனியார் நடத்தும் ஒரு கடைக்கு 3 இலட்சம் ரூபாயும், கூட்டுறவு நிறுவனம் நடத்தும் கடைக்கு 2 இலட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மருந்தக உரிமையாளர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி வருகிறார்கள்.
சென்னை புளியந்தோப்புப் பகுதியில் முதல்வர் மருந்தகம் அமைத்துள்ள அப்ரீன் என்பவர், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். டி.பார்ம் படித்துள்ளேன். எனது பெற்றோர் என்னை மிகவும் சிரமப்பட்டு படிக்கவைத்தனர்.
படிப்பை முடித்து வேலை தேடியபோது முதல்வர் மருந்தகம் குறித்து அறிவிப்பு வெளியானது. உடனே விண்ணப்பித்தேன். எனக்கு முதல்வர் மருந்தகம் வைக்க அனுமதியும் கிடைத்தது. இந்த மருந்தகம் அமைப்பதற்காக எனக்கு 3 இலட்சம் ரூபாய் மானியமும் கிடைத்துள்ளது.
என்னை தொழில் முனைவோராக்கி மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை நிரந்தர வருமானம் கிடைக்கும் அருமையான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.