திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான சத்திரத்தில் உணவு வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த அன்னதான சத்திரம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுவன் இறந்துவிட்டடதாக செய்தி பரவியது. ஆனால் இந்த செய்தியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.
நடந்த சம்பவம் குறித்தும் உண்மை நிலவ ரங்களை விளக்கியும் திருமலை திருப்பதி தேவஸ் தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியி ருப்பதாவது:-
கடந்த 22-ஆம் தேதி இரவு கருநாடகாவின் மடிகேராவைச் சேர்ந்த மஞ்சுநாதா என்ற சிறுவன், திருமலை அன்னபிரசாத சத்திரத்தில் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தபோது மயங்கி விழுந்தான். அங்கிருந்த ஊழியர்கள் விரைந்து சென்று சிறுவனை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சிறுவன் திருப்பதியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். ஆனால் அந்த சிறுவன் இறந்துவிட்டான்.
அந்தச் சிறுவன் நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவனுக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
உண்மை நிலவரம் இவ்வாறு இருந்தாலும், திருமலையில் உள்ள அன்னதான சத்திரத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக சிறுவன் இறந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, இது உண்மையல்ல.
இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடு பவர்கள், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புபவர்கள் மற்றும் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேவஸ்தானம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 6 ஆண்டு தீவிர சிகிச்சையில் உள்ள சிறுவனை எப்படி கோவில் நிர்வாகம் இந்த நெரிசலில் அனுமதித்தது என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது. காரணம் கடவுள் நம்பிக்கையில் யாரும் தலையிடக் கூடாதாம்.
இதேபோல் டில்லி மற்றும் பிரயாக்ராஜ் இரண்டு இடத்திலும் நூற்றுக்கு மேற்பட்டோர் கும்பமேளா விழா காலத்தில் இறந்துள்ளனர்.
இவர்கள் குறித்த பெயர்களையோ, எத்தனைப் பேர் இறந்தனர் என்பதையோ ஒன்றிய அரசோ ரயில்வே நிர்வாகமோ, உ.பி. அரசோ இதுவரை வெளி யிடவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டால் சாமியார் முதலமைச்சர் ‘கழுகுகளின் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரியும்’ என்று பதில் கூறுகிறார்.
மதம் என்று வந்து விட்டால் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியம் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா குளியல் போடுகிறவர்களின் நலன்மீது அக்கறை கொண்டு அறிவியல் ரீதியாக அபாய அறிவிப்பை வெளியிட்டது. நுண்ணுயிர்கள்கூட வாழத் தகுதி இல்லாத சங்கமம் கும்பமேளா ஆற்று நீர்.
பொதுவாக குளங்கள், ஆறுகள் ஆகியவற்றில் Faecal Coliform என்ற ஒரு பாக்டீரியா இருக்கும். இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து நீரில் பரவுவது. மலக்குடலில் உள்ள – ஆபத்தை விளைவிக்கும் இந்த நுண்ணுயிர்களான ஃபேகல் கலிபோர்ம் பாக்டீரியாக்கள் 100 மி.லி. நீரில், O MPN (Most Probable Number) இருந்தால் மட்டுமே அது குடிப்பதற்கு உகந்த நீர்.
500 MPN இருந்தால் குளிக்கலாம் – ஆனால் குடிக்கக்கூடாது.
யமுனை ஆற்றில் கலந்திருக்கும் அளவு 13,000 MPN.
கங்கை ஆற்றில் கலந்திருக்கும் அளவு 49,000 MPN இரண்டும் கலந்து திரிவேணி சங்கமத்தில் சுமார் 60,000 MPN – அதாவது மீன் உள்ளிட்ட எந்த உயிரினமுமே வாழத் தகுதியற்ற நீர் ஆக மாறி விட்டது என்று அறிவித்துள்ளதே – இதற்கு என்ன பதில்?
மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது ஓர் அரசின் அடிப்படைக் கடமையல்லவா? பாவத்தைத் தொலைக்கப் போவதாக நம்பி சவக் குழிக்குப் போவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்குக் கிடையாதா?
குறிப்பிட்ட இடத்தில் குளிக்க இலட்சக்கணக்கான மக்கள் திரண்டால் மரணம் சம்பவிக்கத்தானே செய்யும். 2003இல் நடைபெற்ற கும்பமேளாவில் 28 பெண்களும், 11 ஆண்களும் நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக மரணிக்கவில்லையா?
இப்பொழுது நடந்து முடிந்த கும்பமேளாவில் மரணித்தோரின் கணக்கை வெளியிட அஞ்சுவது ஏன்?
1991இல் மகரஜோதியைப் பார்க்கப் போய் (அதுவே ஓர் ஏமாற்று வேலை!) 53 பேர் பலியாகவில்லையா? இந்த உண்மைகளைச் சொன்னால், கழுகுகளின் கண்களுக்குப் பிணங்கள்தான் தெரியும் என்று ஒரு முதலமைச்சர் சொல்லுகிறார் என்றால், இவர்களை மனிதர்களின் பட்டியலில் சேர்க்க முடியுமா? அரசி யலில் மதத்தைக் கலப்பது எத்தகைய கொடூரமானது என்பதைத் தெரிந்து கொள்வீர்!