வாக்காளர்கள் வேறு இடத்தில் வாக்களிக்க முடியாது
வாக்காளர் அட்டை எண்கள் எப்படி இருந்தாலும் அவர்கள் எந்த சட்டமன்ற தொகுதியில் தங்களது பெயரைப் பதிவு செய்தார்களோ, அந்த தொகுதியில், அந்த வாக்குச் சாவடியில்தான் வாக்களிக்க முடியும். வேறு எங்கும் வாக்களிக்க முடியாது. எனவே, ஒரே மாதிரியான வாக்காளர் அட்டை எண்கள் கொண்டவர்களை போலி வாக்காளர்களாக கருதத் தேவையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இயற்கை திரவத்தைத் தெளிக்கும் புதிய திட்டம்
விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்து வரும் தென்னை மரங்களில் உள்ள வெள்ளை ஈக்களை ஒழிக்க டிரோன் உதவியுடன் இயற்கை திரவத்தைத் தெளிக்கும் புதிய முயற்சியை சோதனை அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. இந்தத் திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றால் அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் பேருதவியாக இருக்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழக எம்அய்டி விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் பேராசிரியரும், இயக்குநருமான செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
வேளாண் பல்கலை.யில்
காளான் வளர்ப்புப் பயிற்சி
கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல், பயிற்சி மய்யத்தில் மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் காளான் வளர்ப்புப் பயிற்சியில் செயல்முறை விளக்கமும் வழங்கப்படுகிறது. விவசாயிகள், வியாபாரிகள், தொழில் முனைவோர், மகளிர், இளைஞர்கள், சுய உதவிக் குழுவினர் என அனைத்துத் தரப்பினரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு
நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்புதும், சரிவதுமாகவும் உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், வினாடிக்கு 1,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை நிலவரப்படி 1,200 கன அடியாக அதிகரித்துள்ளது.
அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்
காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க, வரும் மார்ச் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் காப்பீட்டு பிரீமியத்திற்கான காலாவதிக் கட்டணத்தில் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன. இதன்படி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிப்பதற்கான பிரீமியத் தொகை ரூ.1 லட்சம் வரை தாமத கட்டணத்தில் 25 சதவீதமும் அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.2,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.