தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு மசோதா பேரவையில் தாக்கலாக வாய்ப்பு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை,மார்ச் 4- மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தை சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் மசோதா தயாராக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சமூக அமைப்புகள் மாநாடு, சென்னையில் (மார்ச் 1) நடைபெற்றது. இதில் பங்கேற்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியவது:

“அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதும், முற்றாக எதிர்த்து போராடுவதும் மட்டுமே வாய்ப்பாக இருக்கிறது. எதிர்ப்பு மனநிலையை வீரம் என்று எண்ணுவோர், அது ஒரு நல்ல வியூகம் அல்ல என்பதை உணர வேண்டும். அதிகாரிகள் நம்மிடம் நல்ல பதிலை வழங்குவார்கள். ஆனால் ஒன்றும் நடக்காது. அத்தகைய அதிகாரிகளையும் செயல்பட வைக்க அரசியல் ரீதியாக வலிமை பெற வேண்டும்.

அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டமே நடைமுறைக்கு வரவில்லை என்பதே கசப்பான உண்மை. அது நடைமுறைக்கு வந்திருந்தாலே இந்தியா சமத்துவம் பெற்ற தேசமாக உருவெடுத்திருக்கும்.

ஸநாதன தர்மம்தான்…

ஸநாதன தர்மம் தான் நடை முறையில் இருக்கிறது. அந்த வகையில் தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு முட்டுக் கட்டை போடப்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க 164ஏ சட்டப்பிரிவு என்பது மிகவும் முக்கியம். அந்த பிரிவின்படி மாநில அரசு அதிகாரத்துக்குட்பட்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியும். இதுதொடர்பாக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நிதிச் செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

அண்மையில் கூட தலைமைச் செயலாளரை சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இது தொடர்பான மசோதா தயாராகிவிட்டது. வரக்கூடிய நிதிநிலை அறிக்கையின்போது மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். சட்டம் வந்தாலும் அதை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இதற்காகவே சட்டப்பேரவை, நாடாளுமன்றத்துக்குள் நுழைய வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் பேசினார். இந்நிகழ்வில், விசிக எம்.எல்.ஏ-க்கள் சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *