* 1926 ஆம் ஆண்டிலேயே ‘‘தமிழுக்குத் துரோகமும் – ஹிந்தியின் இரகசியமும்’’பற்றி எழுதிய தந்தை பெரியார்!
* ஹிந்தித் திணிப்பு என்பது ஒரு கலாச்சாரத் திணிப்பே – அதை பெரியார் மண் ஏற்காது!
தா.பழூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
தா.பழூர், மார்ச் 4 எதிர்க்கட்சிகள் என்ன குட்டிக் கரணம் அடித்தாலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்பது கற்கோட்டை; அதனை அசைக்க முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தா.பழூரில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர்
நேற்று (3.3.2025) மாலை அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெற்ற மாபெரும் முப்பெரும் விழாவில் பங்கேற்கச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
தா.பழூர் பகுதி, நாங்கள் மாணவப் பருவத்தில் இருந்த காலம்தொட்டு இந்தப் பகுதி எங்களுக்குப் புதிது அல்ல. ஏராளமான அளவில் பொதுக்கூட்டங்களில் இங்கு பங்கேற்று பிரச்சாரம் செய்துள்ளோம். அதிலும் குறிப்பாக இது நம்முடைய மானமிகு சுயமரியாதை வீரரான அய்யா க.சொ.கணேசன் அவர்களுடைய மண், இங்குள்ளவர்கள் அவருடைய பெருமைகள், அவருடைய தொண்டறம் இவற்றையெல்லாம் நல்ல அளவுக்கு உணர்ந்தவர்கள். இது சுயமரியாதை இயக்க மண், திராவிட மண் எப்படிப்பட்ட சுயமரியாதை வீரர்களைப் பெற்றிருக்கிறது என்பதற்கு அவர் ஓர் சிறந்த அடையாளம்.
அதுமட்டுமல்ல, அவர் தாய்க்கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்து, பின்பு பல முக்கிய பொறுப்புகளை நீண்ட காலத்திற்கு முன்பு வகித்தவர். அவருடைய சிறப்பைப்பற்றி ஒரு நூலாகவும் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனை வெளியிடக் கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்காக மகிழ்கின்றோம்.
சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன்
சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன் விட்டுச் சென்ற பணியை இன்றைய காலகட்டத்தில், தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றவர் அவருடைய மகனார் அருமை கண்ணன் அவர்கள். அவருக்கு ஒத்துழைப்புத் தரக்கூடிய திராவிட இயக்கத் தோழர்கள் அனைவரும் சேர்ந்து பொதுக்கூட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
கிராமப்புறங்களில் நம்முடைய இயக்கம் வளருவதுதான் மிக முக்கியமானதாகும் நகரங்களைவிட, கிராமங்களில் இந்தக் கருத்தோட்டம் மிகப்பெரிய அளவிற்குப் பரவியிருக்கின்றது.
இந்த ஊருக்கு நான், மாணவப் பருவத்திலிருந்து வந்துள்ளேன். அன்றைய காலகட்டத்தில், போக்குவரத்து வசதி கிடையாது. ஒரு பேருந்து வந்தாலே பெரிய விஷயம். க.சொ.கணேசன் அவர்கள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து அரும்பணியாற்றியவர். அருமைத் தோழர் நம்மு டைய கா.சொ.க.கண்ணன், இன்றைக்கும் அந்தப் பணியை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கின்றார். நம்முடைய கலைஞர் காலம், அதற்குப் பிறகு ஒப்பற்ற முதலமைச்சராக இருக்கின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியில், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். தொண்டறத்தை சிறப்பாக செய்துகொண்டிருக்கின்றார், அவரைப் பாராட்டுகின்றோம்.
அவர் கொள்கை வயப்பட்டவர் என்பதுதான் மிக முக்கியம். அந்தக் கொள்கையை நிலைநாட்டுவதற்கு, சமரசமில்லாத ஒரு போக்கு என்பது மிக முக்கியம். கா.சொ.கணேசன் போட்ட பாதையில், அவருடைய பிள்ளைகளானாலும், அவரால் உருவாக்கப்பட்ட தோழர்களானாலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவில் பங்கேற்கத்தான் இங்கே நான் வந்திருக்கின்றேன்.
மீண்டும் மொழிப் போர்!
செய்தியாளர்: மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை ஒன்றிய அரசு திணிப்பதால், மீண்டும் மொழிப் போர் ஏற்படுகின்ற சூழ்நிலை உருவாகி கொண்டிருக்கிறதே, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: இந்த இயக்கம் இப்போது அல்ல – நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இந்த ஆபத்தைத் தந்தை பெரியார் அவர்கள் உணர்ந்து, ‘‘தமிழுக்குத் துரோகமும் – ஹிந்தியின் இரகசியமும்’’என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ‘குடிஅரசில்’ (7.3.1926) எழுதினார். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத காலம் அது.
‘‘ஹிந்திப் போர் முரசு’’ என்று இப்போது அதனை மறுபதிப்பாக வெளியிட்டு இருக்கிறோம். அதில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
‘‘செம்மொழி எம் மொழி’’ என்று ஆக்கினார் நம்மு டைய கலைஞர் அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால்தான் சமஸ்கிருதத்திற்கே செம்மொழி தகுதி கிடைத்தது.
அறிஞர் அண்ணாவின் முப்பெரும் சாதனைகள்!
அறிஞர் அண்ணா அவர்களின் ஓராண்டு ஆட்சிக் காலத்தில், அவர் பெருமையோடு சொன்ன மூன்று சாதனைகள் – முப்பெரும் சாதனைகள்.
ஒன்று, தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர்.
இரண்டு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும்.
மூன்று, தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் – ஹிந்திக்கு இங்கே வேலையில்லை என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.
இப்போது ஒன்றியத்தில் ஆரிய ஆட்சி, ஆர்.எஸ்.எஸ். ஆட்சி நடந்துகொண்டிருக்கின்ற ஒரு காலகட்டத்தில், அவர்கள் மீண்டும் பழைய இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
முன்பு, திராவிட ஒளி வீச்சுகள் அந்த இருட்டை விரட்டியடித்து வெளிச்சமாக்கியது.
இப்போது மீண்டும் இருண்ட காலத்திற்கு அழைத்துப் போகவேண்டும் என்று அவர்கள் முயற்சிக்கி றார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் மும்மொழிக்கு வேலையே இல்லை.
நம் மாநிலத்தில் மும்மொழித் திட்டத்தைத் திணிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அவர்கள் ஆளுகின்ற மாநிலங்களில் அதனை செய்வதற்கு முன்வரவில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில், ‘‘மொழிகள்’’ என்ற தலைப்பில் 22 மொழிகள் உள்ளன. ஹிந்தியைத் தவிர, 21 மொழிகள்.
எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை. எந்த மொழியை வேண்டுமானாலும் நீங்கள் படிக்கலாம் என்று சொல்வது உண்மையானால், உத்தரப்பிர தேசத்தில் எத்தனை தமிழாசிரியர்களை நியமனம் செய்திருக்கிறார்கள்? மத்தியப் பிரதேசத்தில் தமிழாசிரி யர்களை நியமனம் செய்திருக்கிறார்களா? அதேபோன்று, டில்லி போன்ற மாநிலங்களில் செய்திருக்கிறார்களா? என்றால் இல்லை என்பதுதான் பதில்.
ஹிந்தி என்ற மொழிக்காக அதனை நாம் எதிர்க்க வில்லை. மொழியை யார் வேண்டுமானாலும் படிக்க லாம். ஆனால், இது ஒரு கலாச்சாரப் படையெடுப்பு – பண்பாட்டுப் படையெடுப்பு.
அதன்மூலமாக சமஸ்கிருதம் என்ற வடமொழியை, ஆரியக் கலாச்சாரத்தை இங்கு சிறு பிள்ளைகள் மத்தியில், மூளைக்குச் சாயமேற்றும் வகையில் சொல்லிக் கொடுக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
பண்பாட்டை இழக்கக் கூடாது!
எதை இழந்தாலும், நாம் நம்முடைய பண்பாட்டை இழக்கக்கூடாது என்பதற்காகத்தான் – தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகாலத்திற்கு மேலாக இந்தக் கொள்கையை ஒப்புக்கொள்பவர்களைத் தவிர, வேறு யாரையும் பெரியார் மண், திராவிட மண் ஏற்றுக்கொண்ட தில்லை.
ஆகவே, இங்கே மும்மொழி தேவையில்லை. இரு மொழியே போதும்.
இன்னுங்கேட்டால், தமிழ் வழியில் படித்தவர்கள் திறமைசாலிகளாக வந்திருக்கின்றார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழுக்குத் தொண்டு செய்வேண்டும்.
மும்மொழித் திட்டத்தைத் திணிக்கவேண்டும் என்று ஏன் நினைக்கிறார்கள்? தமிழ் மொழியை அழிப்பதற்காகத்தான்; நம்முடைய கலாச்சாரத்தை ஒழிப்பதற்காகத்தான்.
அவர்களால் அதனைச் செய்ய முடியவில்லை என்பதால், ஆளுநர் போன்றவர்களை அவர்களுடைய அங்கமாக ஆக்கிக் கொண்டிருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும்.
எனவே, அண்ணா கொண்டு வந்த சட்டத்திற்கு விரோதம் என்பது ஒரு பக்கம்; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டதற்கும் விரோதமாகும்.
தமிழ்நாடு மீனவர்களுக்கு ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி என்ன செய்தது?
செய்தியாளர்: இலங்கைக் கடற்படையினரால், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்; அண்ணாமலை, தமிழ்நாட்டு மீனவர்களைக் கடத்தல்காரர்கள் என்று சொல்லியிருக்கிறாரே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: 2014 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் மோடி அரசாங்கம் வந்தவுடன், ‘‘இதுவரையில் காங்கிரஸ் ஆட்சி எதுவும் செய்யவில்லை; திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எதுவும் செய்யவில்லை. மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு முத்தாய்ப்பான முடிவை நாங்கள் செய்வோம்’’ என்று சொன்னார்.
இன்றைக்கு 2025 ஆம் ஆண்டுவரையில் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு எதுவுமே காணவில்லை ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு.
11 ஆண்டுகளாக ஏன் அவர்கள் அதனை செய்ய வில்லை? இன்னுங்கேட்டால், இலங்கைக்கு அடிக்கடி செல்கிறார்கள். இலங்கை நாடு பொருளாதாரச் சிக்கலில் இருந்தபோது, மனிதாபிமானத்தோடு இந்தியா உதவி செய்திருக்கிறது. ஆனால், மீனவர்கள் பிரச்சினையை அவர்கள் கையாளுகின்ற முறை என்பது மிகமிக மோசமானதாகும். காரணம் என்னவென்றால், மீனவர்கள் எல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான்.
அதேநேரத்தில், வட மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களாக இருந்தால், அவர்களுக்கு வேறுவிதமான கண்ணோட்டத்தில் செயல்படுகிறது ஒன்றிய அரசு.
காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன், அதற்காக அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று சொல்லி, காஷ்மீரின் அமைப்பையே மாற்றினார்கள்.
ஆனால், மீனவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய செல்வாக்கு ஒன்றிய அரசுக்கு இருக்கிறது; இலங்கைக்கு அடிக்கடிச் செல்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர். ஆனாலும், மீனவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லை.
காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டு மீனவச் சகோதரர்கள் தங்களுடைய உடன்பிறப்புகள் அல்ல என்பதுதான்.
எனவே, ரத்தத்தின் ரத்தமாகவோ, சதையாகவோ அந்த உணர்வுகள் அவர்களுக்கு இல்லை. மீனவர்களை, வேற்றுமை உணர்வோடு பார்க்கிறார்கள். மீனவர்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். நியாயப்படுத்துகிறார்கள்.
திசை திருப்புவதற்காகவே, கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டதினால்தான் மீனவர்கள் கைது தொடர்கி றது என்று சொல்கிறார்கள்.
வாதத்திற்காக, கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும், அதனை மீட்பதற்காக 11 ஆண்டுகாலமாக நீங்கள் என்ன செய்தீர்கள்?
இந்தப் பிரச்சினையில், முன்பு ஒன்றியத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சி செய்ததை, திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொள்ளவில்லை, திராவிடர் கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை, முற்போக்குக் கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அண்ணாமலைக்கு
எதுவும் தெரியாது
அண்ணாமலையைப்பற்றி கேட்டீர்கள்; அண்ணா மலைக்கு எதுவுமே சரியாகத் தெரியாது. அவர் அரைவேக்காட்டு அரசியல் நடத்துபவர். அய்.பி.எஸ். படித்த ஒருவர், பி.ஜே.பி.,க்கு வந்திருக்கின்றார் என்ப தைத் தவிர, வேறொரு எந்த சிறப்பும் அவரிடம் கிடையாது.
உங்களைப் போன்றவர்கள் அவர் முன், அடிக்கடி மைக்கை நீட்டுவதால், ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காக எதையாவது சொல்கிறார்.
நாங்கள் அடிக்கடி உங்களைச் சந்திப்பது இல்லை. ஆனால், அவர் பொழுது விடிந்து பொழுதுபோனால், செய்தியாளர்களிடம் எதையாவது சொல்லவேண்டும்; அதன்மூலம் விளம்பரம் பெறவேண்டும் என்று நினைக்கிறார்.
அறிவாலயத்தின் செங்கல்லை பெயர்த்தெடுப்பேன் என்று சொல்வாரே தவிர, மீனவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன முயற்சி செய்திருக்கிறார்?
வாதத்திற்காக வைத்துக்கொள்வோம், காங்கிரஸ்தான் எதிர்க்கட்சியாகி விட்டதே! நீங்கள் ஆட்சிக்கு வந்து, ஓராண்டு இரண்டாண்டுகள் அல்ல; 11 ஆண்டுகள் ஆகின்றன. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றியதா? என்றால், இல்லை என்பதுதான் பதில்.
ஆகவே, அண்ணாமலை சொல்வது பிரச்சினையை திசை திருப்புகின்ற வேலையாகும்.
அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
செய்தியாளர்: இரு மொழிக் கொள்கையை அ.தி.மு.க. ஆதரிப்பதாகச் சொல்கிறார்களே, அவர்களு டைய நிலைப்பாட்டைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: அ.தி.மு.க.விற்கும், நமக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க.வில் இருக்கின்ற தொண்டர்களின் உணர்வுகள் என்பது முழுக்க முழுக்க வேறு விதமாக இருக்கும்.
இருமொழிக் கொள்கையை அவர்கள் எவ்விதத்திலும் மாற்றவில்லை. ஏனென்றால், அண்ணா அவர்கள் கொண்டு வந்த இருமொழிக் கொள்கையை மாற்ற முடியாது.
அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கை அமுல் செய்யப்பட்டு, 57 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இடையில் மூன்று முறை குடியரசுத் தலைவர் ஆட்சி – டில்லி ஆட்சி வந்திருக்கிறது.
அந்த ஆட்சி இருந்தபோதுகூட, மும்மொழித் திட்டத்தைக் கொண்டுவரவில்லை. அப்படி என்றால் அது எதைக் காட்டுகிறது?
அண்ணா அன்றைக்குச் சொன்னது சரிதான். இந்தத் திட்டத்தில் கை வைத்தால், அது மின்சாரத்தில் கை வைத்ததுபோன்றதாகும்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி தவறாகக் கை வைத்தி ருக்கிறது. அதனுடைய விளைவை, நடைபெறவிருக்கின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவு இன்னும் தெளிவாகக் காட்டும்.
தி.மு.க. கூட்டணி என்பது ஒரு கற்கோட்டை!
செய்தியாளர்: தி.மு.க.வில் கூட்டணிக் கட்சிகளி டையே பிளவு ஏற்பட்டு, சட்டப்பேரவைத் தேர்தலுக்குமுன் அக்கூட்டணி உடைந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் சொல்லுகின்றனவே?
தமிழர் தலைவர்: அது அவர்களுடைய ஆசையாக இருக்கலாமே தவிர, உண்மையல்ல. அப்படி உடை வதற்கு அது ஒன்றும் கண்ணாடி டம்ளர் அல்ல. தி.மு.க. கூட்டணி என்பது கற்கோட்டையாகும்.
இன்னுங்கேட்டால், தி.மு.க. கூட்டணிக்கு இன்னும் நிறைய கட்சிகள் வருவதற்குத் தயாராக உள்ளன.
முதலமைச்சரின் பிறந்த நாள் விழா கடந்த 28.2.2025 அன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், 23 கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
ஆகவே, எதிர்க்கட்சிகள் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும், தி.மு.க. கூட்டணியை உடைக்க முடியாது. காரணம் என்னவென்றால், இது பதவிக்கான கூட்டணி அல்ல. வட மாநிலங்களில் நடைபெறுவது போன்று, உங்களுக்கு அமைச்சர் பதவி தருகிறேன்; இத்தனைக் கோடி ரூபாய் பணம் தருகிறேன் என்று சொன்னதும், கட்சி மாறுகின்ற நிலை இங்கே இல்லை.
கோடி ரூபாய் கொடுப்பதற்குத் தயாராக உள்ள வர்களை, அந்தக் கோடிக்கு விரட்டுபவர்கள்தான் திரா விட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ளவர்கள்.
ஆகவே, தி.மு.க. கூட்டணி என்பது நிரந்தரமானதாகும். காரணம், இது பதவிக் கூட்டணியல்ல; கொள்கைக் கூட்டணியாகும்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடையே கூறினார்.