(19.2.2025 நாளிட்ட ‘துக்ளக்’ இதழுக்குப் பதிலடி)
மின்சாரம்
கேள்வி: கோமிய விவகாரம் பற்றி தங்கள் கருத்து?
பதில்: கோமியம் மருந்து, டாஸ்மாக் ஆபத்து என்கிறது விஞ்ஞானம். டாஸ்மாக் முற்போக்கு, கோமியம் பிற்போக்கு என்கிறது திராவிடம்.
பதிலடி: கோமியம் மருந்து என்று எந்த விஞ்ஞானம் கூறுகிறது? சங்கராச்சாரியார் நாள் ஒன்றுக்கு எத்தனை அவுன்ஸ் கோமியம் குடிக்கிறார்?
டாஸ்மாக்கைக் குடி என்று எந்தத் திராவிடரும் சொல்லவில்லை. பிஜேபி ஆளும் மாநிலங்களில் எல்லாம் மதுவிலக்கு உண்டா? அப்படி என்றால் அங்கெல்லாம் ஆள்வது திராவிடம்தானா?
– – – – –
கேள்வி: நாம் எந்த அளவிற்கு பழைமையையும், புதுமையையும் பின்பற்றலாம்?
பதில்: பழைமையை வெறுக்காத புதுமையையும், புதுமையை ஒதுக்காத பழைமையையும் பின்பற்றலாம்.
பதிலடி: பழைமையைத் தூக்கி எறிந்துதான் புதுமை முளைக்கிறது! அம்மையை மாரியாத்தாள் கோபம் என்றும், காலராவைக் காளியாத்தாள் கோபம் என்றும் கூழ் காய்ச்சி ஊற்றியது பழையது – அம்மையும் காலராவும் நோய்கள் – குறிப்பிட்ட கிருமிகளால் வருவது என்று தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு தானே அந்தப் பழைமை நம்பிக்கையும் அதனால் ஏற்பட்ட நோயும் ஒழிந்தது.
– – – – –
கேள்வி: ‘சமூகநீதியை நிலை நாட்டவே தி.மு.க. தோன்றியது’ என்கிறாரே முதலமைச்சர் ஸ்டாலின்?
பதில்: பிராமண எதிர்ப்புதான் சமூகநீதி என்றால், அதை எப்போதோ நிலைநாட்டி விட்டது தி.மு.க., இப்போது தி.மு.க. இருப்பது, ஒரு குடும்பத்துக்கு பதவி தருவதற்கு மட்டுமே. அதுவும் சமூகநீதியா?
பதிலடி: பிராமண எதிர்ப்புத்தான் சமூகநீதி என்பதைக் காலந்தாழ்ந்தாவது ‘துக்ளக்’ ஒப்புக் கொண்டதற்காகப் பாராட்டலாம்.
குடும்ப ஆட்சி என்பது ஒருவர் இன்னொருவருக்குக் கொடுப்பதல்ல; தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அர்ச்சகர்களாக பார்ப்பனர்கள் அதிலும் குறிப்பிட்ட பிரிவினர்கள்தான் வரவேண்டும் என்பது எந்த ‘லிஸ்டில்’ வருகிறது?
– – – – –
கேள்வி: தமிழ்நாட்டில் எவ்வளவோ அக்கிரமங்கள், அட்டூழியங்கள் நடந்தாலும் மோடி அரசு கண்டு கொள்வதே இல்லையே?
பதில்: நல்ல மாநில அரசுகளை காங்கிரஸ் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ததால், அட்டூழியம் செய்யும் மாநில அரசுகளைக் கூட டிஸ்மிஸ் செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பறித்துவிட்டது. அட்டூழியம் செய்வதுதான் மாநில சுயாட்சி என்று ஆகிவிட்டது. இதுதான் காரணம்.
பதிலடி: எத்தனை மாநிலங்களில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தமது கட்சி ஆட்சியாக மாற்றியது பிஜேபி! மகாராட்டி ரத்தில் இரவோடு இரவாக ஆளுநரை அனுப்பி வைத்து, பதவிப் பிரமாணம் செய்ய வைத்த யோக்கிய சிகாமணிகளா இதைப் பற்றி எல்லாம் பேசுவது?
முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில் புதிய முதல் அமைச்சருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய ஆளுநர் தலைமறைவானது எந்த ஒரு ரகத்தைச் சேர்ந்தது?
ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் மனுவாதிக் கூட்டம் அல்லவா – எதையும் வஞ்சனையாகத்தான் பேசும்.
– – – – –
கேள்வி: பெரிய தலைவர்களைப் பற்றி எழுதும் போது, உங்களுக்கு பயம் என்பது சிறிதும் தோன்றாதா?
பதில்: 1987இல் போலி ஆதாரத்தை வைத்து என்னை சி.பி.அய். கைது செய்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், “அரசாங்கம் உன்னை கைது செய்தால் பயப்படுவாயா” என்று கேட்டார் காஞ்சி மஹான், “பயப்பட மாட்டேன்” என்று கூறினேன். அதிலிருந்து எனக்குப் பயம் என்பதே போய் விட்டது.
பதிலடி: காஞ்சி சங்கராச்சாரியாரே கம்பி எண்ணினாரே – அதற்குப் பெயர் என்ன? அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.
– – – – –
கேள்வி: ‘மருத்துவ மாணவர் இடஒதுக்கீடு விஷயத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்’ என்கிறாரே அமைச்சர் மா.சுப்பிரமணியன்?
பதில்: பட்டியில் அடைபட்ட மாடுகள் போல், தமிழகத்தில் பி.ஜி. படிப்புக்கு ஒதுக்கப்பட்ட 2,550 இடங்களுக்குள் முடக்கப்பட்டிருந்தனர் தமிழக மாணவர்கள். அவர்களுக்கு 36,500 மற்ற மாநில பி.ஜி. இடங்களுக்கும் போட்டியிட வாய்ப்புத் தந்திருக்கிறது உச்சநீதிமன்றம் (துக்ளக் 12.2.2025 தலையங்கம்). அதை எதிர்த்து மனு என்கிறார் மா.சுப்பிரமணியன். இவர்களுக்கு யார் புத்திமதி கூறுவது?
பதிலடி: என்ன தளுக்கு? எங்கள் பணத்தில் எங்கள் மாநிலத்தில் படிப்போருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றால், அது என்ன குற்றமா?
உ.பி.யைச் சேர்ந்த ஒரு பெண் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிப்பது வசதி – பிரச்சினை இல்லை, கோடியக்கரையைச் சேர்ந்த பெண் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து அய்ந்து ஆண்டு படித்து விட்டு மீண்டு வருவது எளிதுதானா?
குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது ‘நீட் வேண்டாம் என்பார்; ஜி.எஸ்.டி.யை எதிர்ப்பார்; ஏன் ஆதார் காட்டையும் ஒப்புக் கொள்ள மாட்டார் மோடிஜி – பிரதமரானவுடன் எல்லாம் தலைகீழ் தானே.
– – – – –
கேள்வி: ‘புனித நீராடுவது வறுமையை ஒழிக்குமா?’ என்கிறாரே மல்லிகார்ஜுன கார்கே?
பதில்: 2014-2019 ஆகிய நான்கு ஆண்டுகளில் ராஹுல் 247 முறை – மாதம் 5 முறை – வெளிநாடு பயணம் செய்தது, இன்னும் அதைத் தொடர்வது, வறுமையை ஒழிக்குமா?
பதிலடி: தனது சொந்தச் செலவில் வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார் ராகுல்; அரசு செலவில் செல்லாத வெளி நாடு இல்லை என்று வலம் வந்து கொண்டிருப்பவர் பற்றி எழுத குருமூர்த்திகளின் எழுதுகோல் வேலை நிறுத்தம் செய்யுமா?
– – – – –
இதே ‘துக்ளக்’கில் ஒரு கேள்வி பதில்:
கேள்வி: பெங்களுருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் தமிழர் இடையே நல்லுறவு, நல்லிணக்கம் ஏற்படும்’ என்று கருநாடக முதல்வர் கூறியுள்ளாரே?
பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான் – யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து, அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே!
(துக்ளக், 19.8.2009)
பதிலடி: ‘துக்ளக்’கின் வன்மம் எந்த டிகிரியில் இருக்கிறது பார்த்தேளா!
– – – – –
இதே துக்ளக்கின் வகையறாவைச் சேர்ந்த ‘தினமலரில்’ ஒரு கேள்வி பதில்.
கேள்வி: தமிழ் மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்ததால் என்னென்ன பயன்?
பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவர் களுக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும். (‘தினமலர்’ வாரமலர், 13.6.2004).
பதிலடி: இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழ் மீதும் திராவிடத்தின் மீதும் தமிழர்கள் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் பார்ப்பனர் கூட்டத்துக்கு எத்தகைய அதீத வெறுப்பும் வன்மமும் தலைவிரித்தாடுகிறது என்பதைத் ‘துக்ளக்’ வாங்கும் நம் மக்கள் உணர்வார்களா?
– – – – –
கேள்வி: கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?
பதில்: முறையாக தியானம் செய்து பழகு. அவரது எல்லையற்ற அருளை புரிந்து கொள். நேர்மை, உண்மை, அன்பு ஆகியவற்றையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். வெறும் வாய் ஜாலங்கள் அவரை தொடுவதில்லை.
– ‘விஜயபாரதம்’, ஆர்.எஸ்.எஸ். வார இதழ்
பதிலடி: ஆக கடவுள் தன் முனைப்பும், தற்பெருமை யும் கொண்டவர், வேண்டுதல் வேண்டாமை இலான் என்ற இலக்கண சுத்தம் இல்லாதவர்.
கடவுளுக்கு அன்பு செலுத்த சொல்லும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்று சொல்லாதது ஏன்? காரணம் கடவுள் என்ற மூடநம்பிக்கை தான் அவாளின் மூலதனம்!