திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா சிறப்பாக மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக, கொண்டாட்டமாக நடைபெற்றது உண்மையே!
ஆனால் அது ஒரு வெறும் விழா அல்ல – நாட்டை விழாமல் காப்பாற்றும் அரணுக்கான அடித்தளமிட்ட ஆக்கப்பூர்வமான விழா!
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் 23 பேர் பேசியது எல்லாம் எதைக் காட்டுகின்றன? அவர்கள் பேச்சில் அடி நாதமாக எது இருந்தது?
இந்தக் கண்ணோட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா நோக்கத்தக்கது!
விரல் விட்டு எண்ணுகின்ற அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரு சிலரின் நப்பாசை எதுவாக இருக்கிறது?
தி.மு.க. கூட்டணி உடையும் – அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை – நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என்று சிலர் நப்பாசையுடன் நாக்கு இருக்கிறது என்பதற்காகவும், தங்களைத் தாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்வதற்காகவும் பேசப்படும் மாய்மாலப் பேச்சுகள் அவை!
தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி, தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறவர்கள் மத்தியில்தான் ‘அடிதடி’ சண்டைகள் அன்றாடம் நடந்து கொண்டு இருக்கின்றன என்பது கண்கண்ட காட்சி!
அடுத்த பெரிய கட்சியாகக் கருதப்படுகிற அ.இ.அ.தி.மு.க.வில் உட்கட்சி சண்டைகளே முடிந்த பாடில்லை. அதுவும் ஜெயலலிதா அம்மையார் மறைந்த நிலையில், அக்கட்சி தலைமைப் போட்டியால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது; மக்கள் மத்தியில் அக்கட்சியினரைப் பற்றி கொஞ்ச நஞ்சம் வைத்திருந்த நம்பிக்கையும், மதிப்பீடும் நலிவடைந்து விட்ட கையறு நிலைதான்.
பா.ஜ.க. என்பது தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டு மண்ணுக்கு ஒவ்வாமையானது என்பது – பா.ஜ.க.வுக்கே தெரிந்த உண்மைதான்.
அதனால்தான் உடல் மொழி காட்டுகிற ஆட்களைப் பிடித்து தந்தை பெரியார்மீது அவதூறு செய்ய ஏற்பாடுகளைச் செய்து பார்த்தனர். அதுவும் எதிர் விளைவாகி விட்டது கண்டு சாவு வீடாகி விட்டது பா.ஜ.க.!
தி.மு.க. கட்டணியைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் தமது பிறந்த நாள் விழா மேடையில் பேசியதுதான் நூறு விழுக்காடு உண்மையாகும்.
‘‘எங்கள் கூட்டணிக் கட்சிகளுக்குள் பிளவுகள் வராதா என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கும் கூட்டத்தின் காது செவுள்கள் கிழியும் வகையில் ஆரோக்கியமான, ஜனநாயக ரீதியான கருத்தை மனந்திறந்து வெளிப்படுத்தினார் முதலமைச்சர்.
எங்கள் கூட்டணி கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு சில பிரச்சினைகளில் இருக்கலாம் – அது விரிசல் இல்லை!’ என்பதுதான் அந்த முத்தாய்ப்பான கருத்தாகும்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வகை கொள்கை இருப்பதனால்தானே தனித் தனி கட்சிகளாக இருக்கின்றன. ஜனநாயகத்தில் அது ஏற்றுக் கொள்ளத்தக்க நாகரீகமான நிலைப்பாடுதானே!
அதே நேரத்தில் இந்தக் கால கட்டத்தில் நாட்டு மக்கள்முன் நிற்கும் பிரச்சினைகள் என்ன? சவால்கள் என்ன? என்பதை நுட்பமாக எடை போட்டு துல்லியமாக அறிந்து – அதற்கேற்றாற்போல காய்களை நகர்த்துவதுதான் – நாட்டு மக்களின் நலனில் அக்கறையும், கவலையும் உள்ளவர்களின் கடமையாக இருக்க முடியும்.
அப்படிப் பார்க்கப் போனால் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சி – பாசிசத்தை ஆணி வேராகக் கொண்ட ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமாகும்.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்று பிஜேபி சொல்லுவது பாசிசத்தின் ‘திருக்கல்யாண‘ குணங்களாகும்.
இதனை ஆணி வேரோடு வீழ்த்துவதில் கை கோர்ப்பதைவிட முக்கியமான கடமை – மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுக்கு வேறு எதுவாக இருக்க முடியும்?
அந்த வகையில்தான் இந்தியாவுக்கே வழிகாட்டும் வண்ணம் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி காலக் கண்ணாடியாக வழிகாட்டுகிறது!
எடுத்துக்காட்டாக டில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வசிக்கும் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிட்டதன் பலனை பிஜேபி தட்டிச் சென்று விட்டதே! இதற்குப்பிறகும் – ஒழிக்கப்பட வேண்டியது பாசிசம் என்பதை உணர்ந்து, பணியில் பிசிறு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற பால பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டாமா?
மக்களவைத் தேர்தலுக்கு மட்டும்தான் ‘இண்டியா’ கூட்டணி என்று பேசுவது அசல் சிறுபிள்ளைத்தனமாகும். கட்சித் தொண்டர்களின் மத்தியில் நல்லிணக்கத்தை எப்படி ஏற்படுத்தும்? வாக்காளப் பொது மக்களும் உதட்டைப் பிதுக்குவார்களே!
நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – இந்த வெளிச்சத்தை இந்தியா முழுமைக்கும் பாய்ச்சி இருக்கிறது. ஆம்! நடந்தது வெறும் விழா அல்ல! வாக்காளர்களுக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் நற்பாதையைக் காட்டிய ஆற்றொழுக்கான அரசியல் – சமூகப் பார்வையாகும்! முதலமைச்சருக்கு வாழ்த்துகள்!