‘‘பழனி முருகன் கோயில் அர்ச்சகர்களாக மீண்டும் பண்டாரத்தார்களை நியமனம் செய்க!’’
சிதம்பரம் பொதுக்குழுவின் ‘‘தீர்மானம் 5 (அ)”– கழகத் தலைவர் மேடையில் எழுந்து நின்று முன்மொழிய
பழனிவாழ் பெருமக்கள் எழுந்து நின்று கையொலி எழுப்பி ஒருமனதாக வரவேற்றனர்!
பழனி, மார்ச் 3 பழனியாண்டவர் கோயிலில் இருந்து அர்ச்சகப் பார்ப்பனர்களை வெளியேற்றி போகர் வழி வந்த குடும்பத்தினரையே அர்ச்சகர்களாக அமர்த்த வேண்டும் என்று சிதம்பரம் பொதுக்குழுவில் முன்மொழியப்பட்டு, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்த தீர்மானத்தை கழகத் தலைவர் ஆசிரியர் பழனி மக்கள் முன்னிலையில் முன்மொழிந்தார், மக்கள் வழிமொழிந்தனர்.
தந்தை பெரியார் 51 ஆவது நினைவுநாள், வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி, திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு என்ற நான்கு முக்கிய பொருண்மைகளை விளக்கி, 27.2.2025 அன்று மாலை 6 மணியளவில் பழனி மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் திடல், மின்வாரியம் பகுதியில் பழனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.முருகன் தலைமையேற்று சிறப்பித்தார். மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த மேனாள் நகர் மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலையேற்று உரையாற்றினார். திண்டுக்கல் கழக மாவட்டத் தலைவர் வீரபாண்டியன், மாவட்டக் காப்பாளர் புலவர் வீர.கலாநிதி, நகர தி.மு.க. செயலாளர் வேலுமணி, நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் வெற்றிவேந்தன், ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வைகோ.செல்வம், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் கரு.இரணியன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உரத்தநாடு இரா.குணசேகரன், பழனி வி.பன்னீர்செல்வம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் திராவிடச் செல்வன், ஒட்டன்சத்திரம் நகரமன்றத் தலைவர் திருமலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து தேவத்தூர் இளங்கோ மணிமேகலை பள்ளி மாணவர்கள் தந்தை பெரியார் பற்றி எழுச்சிகரமாக உரையாற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். அவர்களுக்குக் கழகத் தலைவர் புத்தகங்களைப் பரிசாக அளித்து உற்சாகப்படுத்தினார். மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர் மதிவாணன் உடனிருந்தார். அதைத்தொடர்ந்து தமிழர் தலைவருக்கு அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், மக்கள் பயனாடையணிவித்து மரியாதை செய்தனர். அமரபூண்டியைச் சேர்ந்த இளைஞர்களான பாலசுப்பிரமணியன், மாரிமுத்து, மாயவன் மற்றும் ஒட்டன் சத்திரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முன்னிலையில் திராவிடர் கழகத்தில் இணைந்தனர். கழகத் தலைவருக்குப் புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நிறைவாக ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில், ‘‘நீட் தேர்வு ஒழிப்புப் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த போது கடுமையான மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட கூட்டம் தற்போது பழனி கழக மாவட்டத் தோழர்களால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது’’ என்று பாராட்டினார். உரத்தநாடு இரா.குணசேகரன் கழகப் புத்தகங்களை முன்னதாக விளம்பரம் செய்து பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஆசிரியர், ‘‘இது முழு கூட்டமாக நடைபெற்றாலும், எல்லா தகவல்களையும் பேசிவிட முடியாது. ஆகவே, புத்தகங்களை வாங்கி படியுங்கள்’’ என்று வேண்டுகோள் வைத்தார். மேலும் அவர், 1984 இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், இதே பழனியில் பழனி பார்ப்பனர்கள் சங்கத்தார் என்னைப் பிணமாக உருவகம் செய்து பாடை கட்டி தூக்கிச்சென்றார்கள். பத்திரிகையாளர்கள் இப்படி நடந்துவிட்டதே என்று கேட்டபோது, “ஒரு சூத்திரன் பிணத்தை பார்ப்பனர்கள் தூக்கிச் சென்றது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி” என்று தான் பதிலளித்ததை நினைவு கூர்ந்தார். பாடை கட்டி தூக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறேன்” என்று நிறுத்தி, ”மீண்டும் வருவேன்” என்று தொடர்ந்ததும் மக்கள் கையொலி செய்து ஆரவாரித்தனர்.
பழனியில் பிறந்து வளர்ந்த கழகத்தின் இன்றைய துணைப் பொதுச்செயலாளர் தோழர் சே.மெ.மதிவதனியைப் பற்றி சில நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவர் எம்.எல். படித்திருப்பதை நினைவூட்டி, அவருடைய கல்வியைச் சொல்லி, 100 ஆண்டுகளுக்கு முன்பு நமது கல்வியின் நிலை எப்படியிருந்தது என்று வரலாற்றின் அரிய பக்கங்களை புரட்டிக்காட்டினார். அதில் கா.சு.(பிள்ளை) என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணியம் பிள்ளை அன்றைக்கு எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்டதையும், அவர் ஒருவர் மட்டும் அன்றைக்கு எம்.எல். கல்விப் பட்டத்தைப் போடக்கூடிய வாய்ப்பு இருந்ததையும், இன்றைக்கு அப்படியா? இதற்குக் காரணம் யார்? எந்த இயக்கம்? என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு, தந்தை பெரியார்! திராவிடர் இயக்கம்! என்று பதிலும் சொன்னார். இது தெரியாமல் சில பைத்தியங்கள் பெரியார் என்ன செய்துவிட்டார் என்று கேள்வி கேட்கிறார்கள் என்று சாடினார்.
அதைத் தொடர்ந்து, சிதம்பரத்தில் 15.02.2025 அன்று காலையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ‘‘தீர்மான எண் 5(அ)” அய் கையில் எடுத்துக்கொண்டு அமர்ந்திருந்த நிலையிலிருந்து திடீரென்று எழுந்து நின்று வலது கையில் ஒலிபெருக்கியையும், இடது கையில் அந்த தீர்மானத்தின் நகலையும் பிடித்தபடி வாசித்தார். ஆசிரியர் எழுந்து நின்றபிறகு மக்களும் அணிச்சையாக எழுந்துநின்று அவர் வாசிப்பதைக் கூர்ந்து கவனித்தனர். அந்தளவுக்கு ஆசிரியர் எழுந்து நின்றது முக்கியத்துவம் பெற்றிருந்தது.
’’தீர்மானம் 5 (அ): பழனி முருகன் கோவில் அர்ச்சகர்களாக
மீண்டும் பண்டாரத்தார்களை நியமனம் செய்க!
பழனி மலையில் போகர் என்ற சித்தரால் நவ பாஷா ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் பழனி முருகன் சிலை. போகரால் நிர்மாணிக்கப்பட்ட பழனி ஆண்டவன் கோவிலில், சித்தர் போகரின் சீடர் புலிப்பாணியாராலும், அவருக்குப் பின்னர் அவர் வழி வந்த சீடர்களாலும் பூசை முதலியன நடைபெற்று வந்தன.
திருமலை நாயக்க மன்னர் ஆட்சியில் படைத்தளபதியாக இருந்த ராமப்பய்யன் என்னும் பார்ப்பனர், பழனி முருகன் கோவிலுக்கு வந்தபோது, கோவிலில் பூசை செய்தவர்கள் சூத்திரர்கள் என்பதால், ‘‘அவர்களிடம் பிராமணனாகிய நான் பிரசாதம் வாங்க முடியாது’’ என்று கூறி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்களைப் பூசை செய்யும் பணியிலிருந்து நீக்கி, கொங்குநாட்டுப் பகுதியிலிருந்து அய்ந்து பார்ப்ப னர்களைக் கொண்டு வந்து அர்ச்சகர்களாக நியமித்தான் என்று பழனி கோவில் தலப் புராணமே கூறுகிறது.
ஆகமங்கள்பற்றியும், மரபுகள்பற்றியும் உச்சநீதி மன்றம் வரை சென்று பார்ப்பனர்கள் வாதாடுகிறார்கள். அந்த வகையில், பார்க்கப் போனாலும், பழனியாண்டவர் கோவிலிலிருந்து அர்ச்சகப் பார்ப்பனர்களை வெளியேற்றி, போகர் வழிவந்த குடும்பத்தினரையே அர்ச்சகர்களாக அமர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது’’ என்று வாசித்து முடித்துவிட்டு, இந்தத் தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்றி விட்டோம். பழனிவாழ் மக்களாகிய நீங்களும் இதை நிறைவேற்றித்தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததும், மக்கள் கரவொலியால் தந்தை பெரியார் திடல் அதிரும் வண்ணம் ஓசையெழுப்பி அந்தத் தீர்மானத்தை வழிமொழிந்தனர். தொடர்ந்து ஆசிரியர் அமர்ந்துகொண்டார்.
தொடர்ந்து, 2021 ஆகஸ்ட் 14 இல் – சுதந்திரநாளுக்கு ஒரு நாள் முன்பு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பணி நியமன ஆணைகளை வழங்கிய வரலாற்றுச் சாதனை, வயலூர் முருகன் கோயில் பார்ப்பனரல்லாதார் கும்பாபிசேக நீராட்டல், ஏராளமான கல்வி வளர்ச்சித் திட்டங்கள், நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி போன்ற மகத்தான சாதனைகளை விளக்கி தமிழ்நாடு திராவிட மாடல் அரசைப் பாராட்டினார். மாநில உரிமைப்பறிப்பு நடைபெறும் போதெல்லாம் திராவிடர் இயக்கம் ஆற்றிய வினையை நினைவூட்ட, கல்விக்கான நிதியைத் தரமறுக்கும் ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு கண்டித்ததை, “எமை நத்துவாயென கோடி இட்டழைத்தாலும் தொடேன்” என்ற புரட்சிக்கவிஞர் கவிதையைச் சொல்லி, மக்களுக்குச் சுயமரியாதை உணர்வைச் சுருக்கென்று உறைக்க வைத்து தனது உரையை நிறைவு செய்தார். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பாலன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர், ‘ஆசிரியர் பேசுகிறார் என்று அறிந்துகொண்டு வந்தேன்’ என்று சொல்லிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தொடர்பான புத்தகங்களை வாங்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.